ந.தேன்மொழி
குடியேற்றம்

நாம் வேகமான உலகில், பல்வேறு விதமான உணர்வுகளோடு பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். அதில் முக்கியமான இரண்டு விஷயங் களைப் பற்றி விரிவாகக் காணலாம். அந்த முக்கியமான இரண்டு உணர்வுகள் இரக்கம் (Sympathy), ஒத்தறிவு (Empathy).
இரக்கம் / அனுதாபம் / பரிவு என்பது யாரேனும் ஒருவருக்குத் துன்பம், இழப்பு, சோகம் என்ற சூழ்நிலைகள் ஏற்படுவதைப் பார்த்து அவருக்காக தன் வருத்தத்தை வெளிப்படுத்துவது. “அடடா. இப்படி ஆகிப்போச்சே!” என்ற ஆற்றாமையை வெளிப் படுத்துவதும் இதனுள் அடங்கும். இது ஒவ்வொரு சராசரி மனிதனுக்கு உள்ளேயும் இருக்கும் ஓர் உணர்வாகும்.
ஏன் இன்றைய காலகட்டத்திலும் அனுதாபம் மட்டும் அதிகமாக உள்ளது? அதற்குக் காரணம் மனிதர்களிடம் மேலோட்டமான பரிதாப உணர்வே! ஆழமானப் புரிதலை விட இது லேசானது, இலகுவானது என்று கூறலாம். ஒரு சிலரிடம் இரக்க குணம் அதிகமாகவே இருக்கும், ஆனால் ஒரு செயல் அவர்களைப் பாதிக்கும் பொழுது ‘அடடா,’ ‘அச்சச்சோ’, ‘அய்யோ பாவமே’ என்ற சொற்களோடு அதைக் கடந்து விடுவார்கள்.
இதற்கு நேர்மாறானது ஒத்தறிவு (Empathy). இது பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் பார்வையில் இருந்து உணர்வது. இவர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளையும், வலிகளையும் தன் சொந்த உணர்வாகப் புரிந்து கொள்ளும் அபாரமான ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே பரிதாபப்பட்டு (Sympathy) நின்று விடாமல் எதிராளியின், அதாவது பாதிக்கப்பட்டவர்களின் இடத்திலே தன்னை நிறுத்தி அந்த பாதிப்பினால் ஏற்படும் துன்பங்களை, வலிகளை உணர்வார்கள்.
சாலையில் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைகிறார். ‘அடடா, அய்யோ பாவமே, அவருக்கு எவ்வளவு ரத்தம் வருகிறது, பார்த்துப் போகக் கூடாதா’ என்று அங்கலாய்ப்பவர்; கூடுதலாக அதைத் தன் கைப்பேசியில் படம்பிடித்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தன் வருத்தம் தெரிவித்து கடந்து விடுபவர் அனுதாபம் கொண்டவர். பாதிக்கப்பட்டவரின் வலியையும், பயத்தையும் கணப்பொழுதில் உணர்ந்து எதைப்பற்றியும் யோசிக்காமல் ஓடிச்சென்று அவரைத் தூக்கி ஆசுவாசப்படுத்தி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அல்லது தன் சொந்த முயற்சியால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்பவர் ஒத்தறிவு கொண்டவர்.
குடும்பத்தைப் பராமரிக்கும் ஒருவருக்கு திடீரென வேலை போகும் சூழ்நிலை ஏற்பட்டால் “அய்யோ, இந்தக் காலத்தில் வேலை போனா எப்படி குடும்பத்தை நடத்துவான்” என்று இரக்கத்தோடு கடப்பவர் சிலர். வேலையிழந்த நண்பனின் வீட்டுக்கு நேரில் சென்று அவனது கைப்பிடித்து “எனக்குத் தெரியும், இந்த நிமிடம் உனக்கு எவ்வளவு பயமாகவும் அழுத்தமாகவும் இருக்கும் என்று, நீ தனியாக இல்லை நாங்க இருக்கிறோம்” என்று உடன்நின்று, வேறு வேலை பெற்றுத்தர முயற்சி செய்பவர் ஒத்தறிவு கொண்டவர்.
ஒரு பெண் ஒழுக்கம் சார்ந்து அவள் சக சமூகத்தாலோ அல்லது சுற்றி இருப்பவர்களாலோ விமர்சிக்கப்படும் போது [character assassination] அவளது உலகம் மிகக் கொடூரமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. பரிதாப குணம் கொண்டவர்கள் அந்தப் பெண்ணின் மீது அன்போ தயவோ கொண்டிருப்பார்கள், ஆனால், சமூகத்தின் பார்வையைத் தாண்டி யோசிக்க மாட்டார்கள். “அய்யோ பாவம் இந்தப் பெண்ணைப் போய் இப்படி பேசறாங்களே” என்று பரிதாபப்படுவார்கள். “ஆனாலும் அந்தப் பெண் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம், நெருப்பில்லாமல் புகையுமா?” என்ற சந்தேகத்தையும் மனதுக்குள் வைத்திருப்பார்கள்.
அந்த பெண்ணுக்காகப் பரிந்து பேசினால் எங்கே இந்த சமூகம் தன்னையும் தவறாகப் பேசி விடுவார்களோ என்ற பயமும் இவர்களுக்கு இருக்கும். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போய் “இதைப் பெரிசுபடுத்தாதே, பெரிசு படுத்தினால் உனக்குதான் அசிங்கம், கொஞ்ச நாள் வீட்டுக்குள்ளேயே இரு எல்லாம் சரியாகும்” என்று அவளின் மன தைரியத்தை மேலும் வலுவிழக்கச் செய்வார்கள். மிகுந்த தைரியமின்மையையும் மன உளைச்சலையும் தருவார்கள்.
அதே சமயம் ஒத்தறிவு கொண்டவர்கள் தன்னை அல்லது தன் சகோதரியை அல்லது தன் மகளை அந்த இடத்தில் வைத்துப் பார்ப்பார்கள். ஒரு பெண்ணின் சுயமரியாதையும், மனநலனும் எவ்வளவு தூரம் காயப்பட்டிருக்கும் என்பதை ஆழமாக உணர்வார்கள். “யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதே, எனக்கு உன்னைத் தெரியும், இந்த சமூகம் பெண்களைப் பற்றி எளிதாகப் பேசிவிடும்” என்று அந்தப் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுக்கு உறுதுணையாக நிற்பார்கள். ஒழுக்கம் என்ற பெயரில் ஒரு பெண் மீது வீசப்படும் சொற்கள் அவளது மனதை எவ்வளவு சிதைக்கும்! அவள் வீட்டை விட்டு வெளியே வரவும், குடும்பத்தினரை எதிர் நோக்கவும், இந்தச் சமூகத்தை எதிர் கொள்ளவும் எவ்வளவு பயப்படுவாள் என்பதைத் தன் சொந்த வலியாகவே உணர்வார்கள்.
அந்தப் பெண்ணை விமர்சிப்பவர்களிடம் “ஒரு பெண்ணைப் பற்றி ஆதாரமில்லாமல் பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று தைரியமாகக் கேள்வி கேட்டு அந்தப் பெண்ணுக்காக பேசுவார்கள். அந்தப் பெண்ணுக்குத் தனிமை தேவைப்பட்டால் அமைதியைத் தருவார்கள். அவள் பேச நினைத்தால் ‘நீ எதுவுமே பேசாதே’ என்று தீர்ப்பு வழங்காமல், அவள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்பார்கள். அவளது தன்னம்பிக்கை உடையாமல் பார்த்துக் கொள்வார்கள்.
நிச்சயமாக அந்தப் பெண்ணை வீட்டினுள் முடக்கி வைக்க மாட்டார்கள். ஆக மொத்தத்தில் ஒரு பெண் ஒழுக்க ரீதியாக விமர்சிக்கப்படும் போது பரிதாப குணம் கொண்டவர்கள் ‘இரக்கத்தையும்’, ஒத்தறிவு கொண்டவர்கள் சுயமரியாதையையும், பாதுகாப்பையும், நம்பிக்கையையும், வலிமையையும் தருவார்கள்.
அதேபோல ஒடுக்கப்பட்ட இன மக்களிடம் (Oppressed communities) சமூகத்தின் பலதரப்பட்ட மனிதர்கள் அணுகி இருக்கிறார்கள். அவர்கள் அணுகிய விதத்தில் நிறைய வேறுபாடுகளைக் காணலாம். இங்கே அனுதாபம் பார்ப்பவர்கள் கெட்டவர்கள் இல்லையெனினும் அவர்களால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் ஒடுக்கப்பட்ட இனத்தில் பிறந்தவர்களுக்காகவும், அவர்கள் படும் துயரங்களைப் பார்த்தும் ‘அய்யோ பாவம்’ என்று இரக்கம் காட்டுவார்களே தவிர ஜாதிய இனக் கட்டமைப்பை ஒருபோதும் எதிர்க்க மாட்டார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், ஆடைகள் வழங்குவது என உதவிகளைச் செய்வார்கள். தன்னை தர்மம் செய்பவராக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் செய்பவரும் உண்டு. பாவம், நம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுவோம் என்று நினைப்போரும் உண்டு. ஆனால், அவர்களுக்குச் சமமான அதிகார உரிமையோ, கல்வி உரிமையோ கொடுப்பதைப் பற்றி யோசிக்கக் கூட மாட்டார்கள். அதேபோல ஒடுக்கப்பட்டோர் மீது கொடூரமான அநீதி நடக்கும் பொழுது இப்படி எல்லாம் நடக்கிறதே என்று பதறுவார்களே தவிர தவறு செய்யும் ஆதிக்க ஜாதியை எதிர்த்துக் கேள்விகள் கேட்க மாட்டார்கள்.
ஒத்தறிவு கொண்டவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் அவமானத்தையும், பசியையும், உரிமையிழப்பையும், தன் நெஞ்சில் பாய்ந்த ஈட்டியாக உணர்ந்தவர்கள். அவர்கள் பரிதாபப்பட மாட்டார்கள். அந்த மக்களுக்குச் சுயமரியாதையும் சமத்துவமும் கிடைக்க தன் வாழ்வையே அர்ப்பணிப்பவர்களாக இருப்பார்கள். இதில் முக்கியமானவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும். தந்தை பெரியார் உயர்ஜாதி என்று சொல்லப்பட்ட குடும்பத்தில் பிறந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் போராடினார்.
வைக்கம் போராட்ட வரலாறு ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் அவர் கொண்டிருந்த ஒத்தறிவைக் காட்டுவதாகும். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜாதிய அடக்கு முறைகளுக்காகப் போராடினார். தான் சந்தித்த அவமானங்களைத் தன் மக்களும் சந்திக்கிறார்களே அதை ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் அவமானமாக உணர்ந்தவர் அம்பேத்கர். மக்கள் மேல் கொண்ட ஒத்தறிவால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமும், கல்வியும், சுயமரியாதை உரிமைகளும் கிடைக்கப் போராடினார்.
பரிதாபப்பட்டவர்கள் ஒடுக்கப் பட்ட மக்களின் பசியைப் போக்கப் பார்த்தார்கள். ஆனால் ஒத்தறிவு கொண்டவர்கள் அவர்களின் அடிமைத் தனத்தை உடைத் தெறியப் போராடினார்கள். “சதி” என்னும் உடன்கட்டை ஏறும் கொடூர மானப் பழக்கத்துக்கு எதிராக ஆழமான ஒத்தறிவு உணர்வோடு போராடி அதை ஒழித்தவர் இராஜாராம் மோகன் ராய். அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வே அவரின் நெஞ்சில் ஆழமான சிந்தனையை உருவாக்கியது. 1811ஆம் ஆண்டு அவரின் அண்ணன் ஜெகன்மோகன் இறந்த பொழுது அவரின் அண்ணி ‘அலக்மஞ்சரி’ விருப்பம் இல்லாத நிலையில் கட்டாயமாக ‘உடன்கட்டை’ ஏற்றப்பட்டார்.
அந்தத் தீயில் அவர் அலறியதையும், தப்பித்து ஓடாதவாறு சுற்றி இருந்தவர்கள் மூங்கில் தடிகளால் அழுத்திப் பிடித்ததையும், அந்த சத்தம் வெளியே கேட்காதவாறு மேள தாளச் சத்தம் ஒலித்ததையும் அவர் நேரில் பார்த்தார். உயிரோடு எரியும் அந்த இடத்தில் தான் இருந்தால் என்ற எண்ணம் அவரை உலுக்கியது. அந்த ஒத்தறிவு தான் அவரை எதிர்த்துப் போராடச் செய்தது.
தந்தை பெரியாரிடம் காணப்பட்டது தூய்மையான தீவிரமான ஒத்தறிவு. பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும், அவமானத்தையும் தன் சொந்த வலியாகவே உணர்ந்தார். ஒடுக்கப்பட்ட மக்களிலும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த பெண்களின் வலியைத் தன் வலியாகப் பார்த்தவர். இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் அனுபவித்த கொடுமைகள், குழந்தைத் திருமணம், கைம்பெண் நிலை மற்றும் அடிமைத்தனத்தைப் பார்த்து அவர் பரிதாபப்படவில்லை. ஒரு பெண்ணாகத் தான் பிறந்து இருந்தால் இந்தச் சமூகம் தன்னை எப்படி நடத்தி இருக்கும் என்று அவர் யோசித்தார். அதனால்தான் பெண்களின் வலிகளை, துயரங்களை அவரால் முழுமையாக உணர முடிந்தது. அந்த ஒத்தறிவால் தான் அவர் வாழ்நாள் முழுவதும் போராடினார். பெரியாரிடம் வெறும் பரிதாப உணர்வு மட்டுமே இருந்திருந்தால் அவர் ஒரு சாதாரண கொடையாளியாகவோ, தர்மகர்த்தாவாகவோ மட்டுமே இருந்து இருப்பார். அவரிடம் இருந்தது ஒத்தறிவு. அதனால் தான் தீவிரப் புரட்சியாளராகப் போராடினார்.
19ஆம் நூற்றாண்டில் மகாராட்டிராவில் பெண்களுக்குக் கல்வியும், ஒடுக்கப்பட்ட மக்க ளுக்குச் சமத்துவமும் கிடைக்கப் போராடிய ஜோதிராவ் புலே மனநிலை ஒத்தறிவால் ஆனது. ‘ஆடு மேய்ப்பதை விட்டுப் பள்ளிக்குப் போனா எனக்கு யார் சோறு போடுவா?” எனக் கேட்ட சிறுவனின் பசியையும், வறுமையையும் தன் பசியாக உணர்ந்த காமராசர்தான் பள்ளி களில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஒரு குழந்தையின் பசி அவனது கல்வியை ஒருபோதும் தடுத்து விடக் கூடாது என்ற ஒத்தறிவே லட்சக்கணக்கான பிள்ளைகளைப் படிக்க வைத்தது.
இப்படி ஒத்தறிவு மனநிலை கொண்டவர்களால் தான் சமூகத்தில் மிகப் பெரிய சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் இன்றைய அதிவேக டிஜிட்டல் காலகட்டத்தில் மனிதர்களிடம் ஒத்தறிவை விட பரிதாப உணர்ச்சி மட்டுமே அதிகளவில் காணப்படுவதான நிலை இருக்கிறது. வருத்தப்படக்கூடிய செய்தி என்னவென்றால் ஒத்தறிவு என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் அரிய பண்பாக மாறி விடுமோ என்கிற ஓர் அச்சம் தோன்றுகிறது.
ஒத்தறிவு என்பது உடனடியாக ஓர் எதிர்வினை, ஒரு நிகழ்வைப் பார்த்ததும் ஒரு பாவம், பரிதாபம் அதோடு கடந்து சென்று விடக்கூடிய நிலை – அதிகமாக ஒரு இறப்புக்குக் கூட எமோஜி (emoji) போட்டு நடந்து செல்லும் நிலைமை. ஒத்தறிவு குறைகிறது. அது பரிதாபம் மட்டும் இல்லை. அடுத்தவர் உணர்வோடு கலந்து நிற்பது. தன் உணர்வாக உணர்வது. இன்றைய சூழலில் இது குறைய முக்கியக் காரணங்கள் நம்முடைய மிக மிக வேகமான வாழ்க்கை முறை, மனிதர்கள் தங்களின் சொந்த வாழ்க்கை, வேலை, பொருளாதார அழுத்தம் ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது, இது மற்றவர்களின் நிலையை ஆழமாக யோசிக்கத் தேவையான பொறுமையும் நேரமும் பலருக்கும் இல்லாமல் போனது, இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் மனிதர்கள் சுயநலமாகிக் கொண்டு வருவது ஆகியவற்றைச் சொல்லலாம்.
மனிதர்கள் நேருக்கு நேர் பார்த்துப் பேசுவது என்பதே அரிதாகி விட்டது. திரையின் மூலம் மட்டுமே மற்றவர்களைப் பார்க்கும் போது எதிராளியின் உண்மையான வலியையும், உணர்ச்சிகளையும் உணரும் திறன் [Emotional Connection] மழுங்கி விடுகிறது. அன்றாடம் ஆயிரக்கணக்கான சோகச் செய்திகளையும், வன்முறைகளையும் இணையத்தில் பார்த்துப் பார்த்து மனது மரத்து உணர்ச்சியற்றதாக மாறி எதையும் எளிதில் கடந்து விடுகிறது.
பரிதாபப்படும் சமூகத்தால் ஓரளவுக்கு ஆறுதல் மட்டுமே தரமுடியும் அது நிரந்தரமல்ல. ஆனால் ஒத்தறிவு உள்ள சமூகம் மட்டுமே மனிதர்களை மேன்மையாக இணைக்கவும், மாற்றங்களைக் கொண்டு வரவும் இயலும். ஒரு சமூகம் ஆரோக்கியமாக இயங்க “நுண்ணறிவு” எந்த அளவிற்கு முக்கியமோ அதைவிட முக்கியம் மனிதநேயமும் சுயமரியாதையும். அது காக்கப்பட வேண்டும் எனில் உணர்வு சார்ந்த அறிவு அதாவது ஒத்தறிவு மிக மிக அவசியம். மனிதனை மற்ற இனத்திடம் இருந்து பிரித்துக் காட்டுவது இந்த ஒத்தறிவு மட்டுமே. ஒத்தறிவு இல்லாத மனிதகுலம் மனிதாபிமானமற்ற உணர்ச்சியற்ற சமூகமாக மாறிவிடும்.
ஜாதி, மதம், இனம், பாலினம் மற்றும் ஏழை, பணக்காரன் போன்ற பாகுபாடுகளைக் கடந்து “எதிரில் இருப்பவனும் என்னைப் போன்ற ஒரு மனிதனே” என்ற எண்ணத்தை விதைக்க ஒத்தறிவு அவசியம். ஒத்தறிவு அதிகம் கொண்டவர்களே சிறந்த தலைமைப் பண்பு கொண்டவர்கள். அவர்களே மக்கள் வலியை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
அவர்களே மக்கள் தேவைகளை நன்கு உணர்ந்து சிறப்பானச் செயல் திட்டங்களை வகுப்பார்கள். மக்கள் நலனுக்காக ஓயாது உழைப்பார்கள். எத்துணை இடர் வரினும் இது மக்களின் அவசியமான தேவை என்று பொது உணர்வோடுச் செயல்பட முடியும். ஒத்தறிவு இருப்பவர்களிடம் மட்டுமே எந்த ஒரு சிக்கலான சூழ்நிலையையும் பதற்றமின்றி எதிர்கொள்ளும் மனமுதிர்ச்சி [Emotional maturity] கிடைக்கும். அதனால் சமூகம் பலன்பெறும்.
ஒத்தறிவு என்பது ஏதோ சில தலைவர்களுக்கோ அல்லது உயர்ந்தவர்களுக்கோ மட்டுமான பண்பு அன்று. அது ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய அடிப்படைக் குணமுமாகும். நாம் பிறருக்குக் கொடுக்கும் ஆகச்சிறந்த பரிசு “அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது தான்”. ஒத்தறிவு நிறைந்த தனிமனிதர்களே ஆரோக்கியமானக் குடும்பத்தை உருவாக்க முடியும். அத்தகைய குடும்பங்களே அமைதியான சமத்துவமான உலகை உருவாக்க முடியும்.
