அமெரிக்க மதத் தலைவர்கள் அறிக்கை
நியூயார்க், செப்.4 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் “ஒன்றுபட்ட உலகம், ஒரே மனிதநேயம்” (One World One Humanity)என்ற தலைப்பில் நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திற்காகஅமெரிக்க வாழ் இந்தியர்கள் (இந்து அமைப்பினர் சார்பில்) ஏற்பாடு செய்தது ஆகும். நியூயார்க் ரிவர்சைடு தேவாலயத்தின் மூத்த போதகர் ரெவ். அட்ரியன் தார்ன் (கிறிஸ்தவம்), நியூயார்க்கைச் சேர்ந்த இமாம் ஷம்சி அலி(முஸ்லிம்) ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் மேடையைப் பகிர்ந்துகொள்ள இந்துத்துவாஅமைப்பினர் எங்களை தவறாக வழிநடத்தியுள்ளனர் என அட்ரியன் தார்ன், ஷம்சி அலி ஆகிய இருவரும்தனித்தனியாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அட்ரியன் தார்ன்
இதுதொடர்பாக அட்ரியன் தார்ன் கூறுகையில், “மதங்களுக்கு இடையேயான அமைதி, ஒத்து ழைப்பை மய்யமாகக் கொண்ட ஒருகூட்டம் என்று கூறி அழைப்பு விடுத்தனர். ஆனால் மோகன் பகவத்தோ அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்போ இதில் கலந்துகொள்ளும் என்பது பற்றி அமைப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள் மற்றும் பிறர் மீதான வன்முறை மற்றும்பாகுபாடுகளில் ஆர்எஸ்எஸ் ஆற்றிய பங்கு பரவலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
மோகன் பாகவத்தை மய்யமாகக் கொண்ட நிகழ்வு என்று தனக்குத் தெரிந்திருந்தால், தான் அதில் கலந்துகொண்டிருக்க மாட்டேன். ஆர்எஸ்எஸ் அல்லது அதன் சித்தாந்தத்திற்கு ஆதர வளிப்பதாகக்கூறப்படுவதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். கிறிஸ்தவ மேலாதிக்கம், முஸ்லிம்க ளின் மேலாதிக்கம், யூத மேலாதிக்கம், மதவெறி மற்றும் ஒரு சமூகத்தை மற்றொன்றை விட உயர்த்திக் காட்டும்ஒவ்வொரு சித்தாந்தத்தையும் நான் எவ்வாறுமறுக்கிறேனோ, அதேபோல் இந்து மேலாதிக்கத்தையும் நான் மறுக்கிறேன். மதம், ஜாதி அல்லது அடையாளம் காரணமாக இந்தியாவில் வன்முறை அல்லது பாகுபாட்டை அனுபவித்த அனைத்து மக்களுடனும் நான் உறுதுணையாக நிற்கிறேன். நான் ஆர்எஸ்எஸ் நிகழ்வில் கலந்துகொண்டிருக்கக் கூடாது. நான் தவறாகவழிநடத்தப்பட்டேன்” என்று அவர் கூறினார்.
இமாம் ஷம்சி அலி
தொடர்ந்து இமாம் ஷம்சி அலி கூறுகையில், “ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் அமைதி குறித்த பேச்சுகள் வெறும் வாய் வார்த்தைகள் மட்டுமே. குறிப்பாக அவரது பேச்சு இந்தியாவில் முஸ்லிம்களும் பிற சிறுபான்மையினரும் எதிர்கொள்ளும் யதார்த்தத்திற்கு முரணானவை. யோகா இன்டர்நேஷனல் அமெரிக்க அமைப்பைச் சேர்ந்த அமைப்பாளர்கள் பாவா ஜெயின், திலீப்ஜி குமார் ஆகியோர் தன்னை அழைத்ததின் பெயரில்தான் நான் அங்கு சென்றேன். ஆனால் மோகன் பாகவத் தான் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்வார் என்று தன்னிடம் கூறப்படவில்லை. மோகன் பாகவத்தைக் கவுரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது எனக்குத் தெரிந்திருந்தால், நான் உடனடியாக மறுத்திருப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.
