புதுப்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில் கழகத் தலைவர் பெருமிதம்!

5 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம் உருவான சேலம் மாநாட்டுக்குப் பிறகு நடைபெற்ற முதல் மாநாடு புதுப்பேட்டை மாநாடுதான்!
அன்றைக்கு மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட விதைகளால்
ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் ஏராளம்… ஏராளம்!

பண்ருட்டி, ஆக.31. ‘‘நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து 1944 இல் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில்தான் திராவிடர் கழகம் உருவானது” என்றும், ‘‘அதற்குப் பிறகு நடைபெற்ற முதல் மாநாடு பண்ருட்டி புதுப்பேட்டை மாநாடுதான்” என்றும், “அந்த மாநாட்டின் காரணமாக சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளமாக இருக்கின்றன” என்றும், பண்ருட்டி புதுப்பேட்டையில் நடைபெற்ற மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி எழுச்சி உரையாற்றினார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அண்ணா கிராமம் ஒன்றியங்கள் சார்பில், 03.02.1945 இல் ”தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாணவர் மாநாடு” நடைபெற்ற அதே புதுப்பேட்டையில் உள்ள, பேட்டைத் தெருவில் 30.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, “திராவிடர் கழக திறந்தவெளி மாநாடு” நடைபெற்றது. சுயமரியாதைச் சுடரொளிகள் மிசா மா.நடேசன், வை.சு.அரங்கநாதன், இரா.கோவிந்தசாமி, நாகராஜன், து,செல்வராசு ஆகியோரின் நினைவாக மேடை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர் கோ.புத்தன் தலைமையேற்க, மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். மாவட்ட மகளிரணித் தலைவர் செ.முனியம்மாள் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். சுயமரியாதைச் சுடரொளிகள் பதாகைகளை சிதம்பரம் மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன் திறந்து வைத்தார்.

புதுப்பேட்டை மக்கள்  கொடுத்த வரவேற்பு

திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா, விருதை மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கடலூர் மாநகரத் தலைவர் தென்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் க.எழிலேந்தி, மாவட்டத் துணைச் செயலாளர் நா.பஞ்சமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் சி.மணிவேல், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.பெரியார் செல்வம், பெரியார் வீரவிளையாட்டுக்கழகம் தோழர் இரா.மாணிக்கவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். மாநாட்டைத் திறந்துவைத்து கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உரையாற்றினார். முன்னதாக, கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேனாள் அமைச்சர் சி.வெ.கணேசன் உரையாற்றிவிட்டு, கழகத் தலைவர் அனுமதியுடன் விடைபெற்றுச் சென்றார்.  அவருக்கு   கழகத் தலைவர் சிறப்பு செய்தார். இதற்கிடையில் மாணவர்கள், பொதுமக்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தனிமனிதர்கள் என எல்லா தரப்பினரும் இயக்கப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு, மேடையேறிச் சென்று கழகத் தலைவரிடம் புத்தகத்தில் அவருடைய ஒப்பம் பெற்றும், அவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டும், பெருமிதத்துடன் திரும்பிக்கொண்டிருந்தனர். அத்துடன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு சிறப்பு செய்யப்பட்டது. பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும், இயக்கப் பற்றாளர்களும் வரிசையாக வந்திருந்து ஆசிரியர் அவர்களுக்கு பயனாடையணிவித்து சிறப்பித்து மகிழ்ந்தனர். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.

இந்தியா

அவர் தமது உரையை, “பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய நாள் இந்நாள்” என்றும், “புதுப்பேட்டை மக்கள் எனக்குக் கொடுத்திருக்கிற வரவேற்புக்கு நன்றி சொல்ல முடியாத அளவுக்கு திக்கு முக்காடிப் போயிருக்கிறேன்” என்றும்,  “80 ஆண்டுகளுக்கு முன்பு, காணாமல் போன பிள்ளை திரும்பி வந்தால் எப்படி மகிழ்ச்சியடைவோமோ அதுபோன்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது” என்றும், “புதுப்பேட்டையில் அன்றைக்குப் போட்ட விதை நன்றாக விளைச்சலைத் தந்திருக்கிறது” என்றும், “இதற்காக எத்தனை கல்லடிகள்; சொல்லடிகள் பட்டிருக்கிறோம்” என்றும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கினார். தொடர்ந்து, அந்த விளைச்சல் எந்த அளவுக்கு வந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட, “தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமானால், பெரியார் படத்தை போட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற அளவுக்கு நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன” என்றார். மேலும் அவர், “சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பெயர் மாற்றம் மாநாடுக்குப் பின்னர், நடைபெற்ற முதல் மாநாடு புதுப்பேட்டை மாநாடுதான்” என்று கூறிவிட்டு, 03.02.1945 இல் ”தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாணவர் மாநாட்டை சுட்டிக்காட்டிய அவர், 1943 இல் குடந்தையில், இரட்டைப் பானைத் தண்ணீர் காரணமாக தவமணி ராசன், கருணாநந்தம் உள்ளிட்டோரால் உருவான, திராவிட மாணவர் கழகம், அடுத்ததுதான் 1944 இல் திராவிடர் கழகம். அடுத்த ஆண்டே, புதுப்பேட்டையில் நடைபெற்ற தென்னார்க்காடு திராவிட மாணவர் மாநாடு என்று மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில் திருப்பு முனைகளை ஏற்படுத்திய மாநாடுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

‘எங்கள் தந்தை பெரியார் ராமசாமி துணை’

தொடர்ந்து, “பண்ருட்டி முகுந்தன், பத்மநாபன், பண்ருட்டி நடேசன் போன்ற அந்தக்காலத்து இயக்கத் தோழர்களை நினைவூட்டி, மிசா காலத்தில் 1 ஆண்டு சிறையில் நடேசன் இருந்தார் என்ற கூடுதல் தகவலையும் சேர்த்துச் சொன்னார். அதிலும் டி.வி.நமச்சிவாயம் கச்சேரி பற்றி ஒரு சுவையான தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதாவது, “டி.வி.நமச்சிவாயம் திருவாரூர்க்காரர். மாநாட்டில் மாலை இன்னிசைக்கச்சேரி நடத்துவார். பாடலின் முதல் அடியை, ‘ராமசாமி துணை’ என்று தொகையறா வகையறா போலத் தொடங்குவார். தோழர்கள் அதிர்ச்சியடைந்து போனார்கள். அவர் அடுத்த அடியை, ‘எங்கள் தந்தை பெரியார் ராமசாமி துணை’ என்று பாடினார். எல்லாரும் எழுந்து நின்று கைதட்டினர்” என்று சொன்னதும் அதைக்கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கும் அதே மகிழ்ச்சி உணர்ச்சி உண்டாகி, படபடவென்று கைகளைத் தட்டி மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து, நீட் தேர்வு, EWS 10 சதவீத இடஒதுக்கீட்டை நாம் ஏன் கூடாது என்று சொல்கிறோம் என்பதற்கு உரிய தரவுகளை எடுத்து வைத்து உரையாற்றினார். இறுதியாக, ”புதுப்பேட்டை புதிய கோட்டையாக விளங்குகிறது” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார். அடுத்து மாநாட்டுக்கு உழைத்த தோழர்கள் அனைவருக்கும் கழகத் தலைவர் சளைக்காமல், சலிக்காமல் பயனாடையை அணிவித்து மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து, பண்ருட்டி நகரத் தலைவர் ந.புலிக்கொடி நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ப.க. செயலாளர் வீ.அருணாச்சலம், இளைஞரணித் தோழர் கோ.வேலு, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் டிஜிட்டல்.ராமநாதன், மாவட்ட மகளிரணித் தோழர்கள் குணசுந்தரி, சத்தியவதி, பண்ருட்டி நகரக் கழகச் செயலாளர் கோ.காமராஜ், அண்ணா கிராம ஒன்றியச் செயலாளர் பா.ஆறுமுகம், அண்ணா கிராமம் ஒன்றியத் தலைவர் இரா.கந்தசாமி, பண்ருட்டி ஒன்றியச் செயலாளர் செ.பன்னீர்செல்வம், அண்ணா கிராமம் ஒன்றியச் செயலாளர் இரா.இராசேந்திரன், விழுப்புரம் மாவட்டத் தோழர் கோபண்ணா, அரங்க.பரணிதரன் மற்றும் அக்கம் பக்கத்துக்குப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்துக் கட்சித் தோழர்கள். கட்சிகளுக்கு அப்பார்ப்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு மாநாட்டை சிறக்க செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *