ஆயுள் தண்டனைக் கைதிக்குச் சிறந்த ஆசிரியர் விருதா? 40 ஆண்டுகள் தலைமறைவாக அரசுப் பணியாற்றிய நபர் கைது!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

விஜயவாடா, ஆக. 31– கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஒருவர், பரோலில் வெளிவந்து 40 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்ததுடன், அரசுப் பள்ளி ஆசிரிய ராகப் பணியாற்றி ‘சிறந்த ஆசிரியர் விருதும்’ பெற்று ஓய்வுபெற்ற நிகழ்வு தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு எதிராகச் சிறைத்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய தெலங்கானா உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தெலங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டம், பெத்தமுப்பாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தெல வீரன்னா (73). கடந்த 1983-ஆம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் இவருக்கு வாராங்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

அதே ஆண்டு டிசம்பரில், 3 மாத கால நிபந்தனைப் பரோலில் வெளியே வந்த வீரன்னா, பரோல் காலம் முடிந்ததும் சிறைக்குத் திரும்பாமல் தலைமறைவானார்.

தலைமறைவாக இருந்த காலத்தில், தன் தண்டனை விவரங்களை மறைத்து மஹபூபாபாத் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 2004-ஆம் ஆண்டு ‘சிறந்த ஆசிரியர் விருதையும்’ பெற்ற வீரன்னா, 2013-இல் பணியில் இருந்து பணிநிறைவு (Retirement) பெற்றார்.

40 ஆண்டுகளாகப் காவல் துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவி வாழ்ந்து வந்த இவரை, 2024-ஆம் ஆண்டு சிறப்பு அதிரடிப் படையினர் (Special Task Force) கண்டுபிடித்து மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மீண்டும் சிறையிலடைக்கப்பட்ட வீரன்னாவுக்கு, 3 ஆண்டுகளுக்குப் பரோல் மற்றும் தண்டனை குறைப்புச் சலுகைகள் மறுக்கப்பட்டன. சிறைத்துறையின் இந்த உத்தரவை எதிர்த்தும், வயது முதிர்வு மற்றும் மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டியும் வீரன்னாவின் மனைவி தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிபதி டி. மாதவிதேவி தலைமையிலான அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த முக்கிய உத்தரவுகள்:

“மனுதாரரின் கணவர் வேண்டுமென்றே கைதிலிருந்து தப்பித்துள்ளார். தன் தண்டனையை மறைத்து மோசடியாக அரசு வேலை பெற்று, வாழ்க்கையின் பொன்னான காலத்தைச் சிறைக்கு வெளியே கழித்து அனைத்துப் பலன்களையும் அனுபவித்துள்ளார்.”

“இந்த நிகழ்வு சிறைத்துறையின் அலட்சியத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டு. இது போன்ற குறைபாடுகள் பிற கைதிகளையும் பரோல் காலத்தைத் தாண்டி வெளியே தங்க ஊக்குவித்து விடும்.”

பரோலில் செல்லும் கைதிகளைக் தீவிரமாகக் கண்காணிக்க ‘டிராக்கிங் சிஸ்டம்’ (Tracking System) உள்ளிட்ட வழிகாட்டுதல்களைச் சிறைத்துறை உடனடி யாக உருவாக்க வேண்டும் கைதிக்குத் தேவையான மருத்துவ வசதிகள் சிற வளாகத்திலேயே வழங்கப்படுவதால், பரோல் வழங்க முடியாது எனக் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தண்டனை பெற்ற ஒரு கைதி, எந்தச் சான்றிதழைக் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்தார், இத்தனை ஆண்டுகளாகப் பள்ளி நிர்வாகமும் கல்வித் துறையும் எப்படி இவ்வளவு மெத்தனமாக இருந்தது, பின்னணி சரிபார்ப்பு இன்றி அவருக்கு எப்படிச் ‘சிறந்த ஆசிரியர் விருது’ வழங்கப்பட்டது என்பது குறித்த கேள்விகளுக்கு காவல் துறையும், நீதித்துறையும், அரசும் என்ன செய்து கொண்டிருந்தன என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *