சென்னை மாநகராட்சியில் ரூ.100 கோடியில் மழைக்கால முன்னெச்சரிக்கைப் பணிகள்: ககன்தீப் சிங் பேடி தகவல்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 31- சென்னையில் வடகிழக்குப் பருவமழை மற்றும் எல் நினோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ரூ.100 கோடி நிதியொதுக்கீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் வடகிழக்குப் பருவமழை ஆயத்தப் பணிகள் குறித்து மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் சேவைத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய ககன்தீப் சிங் பேடி, மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கியதாவது:

பாதிப்பு ஏற்படும் காலங்களில் பயன்படுத்த 215 வெள்ள நிவாரண மய்யங்களும், 111 சமையல் கூடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக மாநகராட்சி சார்பில் 36 படகுகளும், மீன்வளத் துறை மூலமாக 275 படகுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

மழைக்காலப் பணிகளுக்காக வார்டு ஒன்றிற்கு 5 நபர்கள் வீதம் மொத்தம் 1,000 தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் 1,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும், 721 குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்களும் தயார் நிலையில் உள்ளனர். தன்னார்வலர்களை ஒருங்கிணைக்க செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய செயலி (App) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மாநகராட்சியில் உள்ள 1,671 கி.மீ. நீள மழைநீர் வடிகால்கள் மற்றும் 1,10,082 வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 50,625 மரங்களின் கிளைகள் கத்தரிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்படும் பகுதிகள் மீது கவனம்: கண்டறியப்பட்ட 207 பாதிப்புக்குரிய இடங்களில், 117 இடங்களில் வடிகால்களும், 20 இடங்களில் நீர்தேக்கத் தொட்டிகளுடன் கூடிய மோட்டார் பம்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதைகள் மற்றும் ரயில்வே மதகுகள்: சுரங்கப்பாதைகளில் நீர் தேங்குவதைத் தடுக்க 132 பம்புகளும், 36 டீசல் ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. மொத்தமுள்ள 28 ரயில்வே மதகுகளில் 3 இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள இடங்களில் செப்டம்பர் இறுதிக்குள் தூர்வார உத்தரவிடப்பட்டுள்ளது.

துறைகளின் ஒருங்கிணைப்பு: மின்சாரத் துறை சார்பில் மின் கசிவுகளால் உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம், மின் இணைப்புப் பெட்டிகளை உயர்த்தி வைக்கவும், கேபிள்களைப் பாதுகாப்பாக அடியில் கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீர் வடிகால் விடுபட்ட இணைப் புகள், ஆறுகள் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகள், நெடுஞ்சாலைப் பணிகள் என அனைத்து முன்ஏற்பாடுகளையும் சேவைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், 1913 என்ற தொலைபேசி எண் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக வரும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *