நீட் தேர்வை நடத்துவதற்குத் தேசிய தேர்வு முகமைக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை!
மாநில அரசுக்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு!
இந்தியாவிலேயே முதன் முதலில் ‘‘நீட்’’ தேர்வின் ஆபத்தை சொன்ன இயக்கம் திராவிடர் கழகம்!
தாம்பரம், ஆக.31 நீட் தேர்வை நடத்துவதற்குத் தேசிய தேர்வு முகமைக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை! மாநில அரசுக்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு! இந்தியாவிலேயே முதன் முதலில் நீட் தேர்வின் ஆபத்தை சொன்ன இயக்கம் திராவிடர் கழகம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இருசக்கர வாகனப் பரப்புரை – நிறைவு விழாப் பொதுக்கூட்டம் – தமிழர் தலைவர் சிறப்புரை!
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் 22.8.2026 முதல் 25.8.2026 ஆகிய நான்கு நாள்கள், ஆறு குழுக்களாக நடைபெற்றது. இருசக்கர வாகனப் பரப்புரையின் முதல் குழுவின் பிரச்சாரப் பயண நிறைவு விழா தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 25.8.2026 அன்று மாலை மேற்குத் தாம்பரம் பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து, பயணக் குழுவினருக்கு வாழ்த்துரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
28.8.2026 அன்று வெளிவந்த அவரது சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமல்ல,
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சேர்த்துதான்!
எனவே, நமக்காக மட்டும் இந்த உரிமை இல்லை. நீட் தேர்வு ஒழியவேண்டும் என்று நாம் சொல்வது கூட, நமக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களுக்காக மட்டுமல்ல, முழுக்க முழுக்க இந்திய திருநாட்டில் உள்ள அனைவருக்கும் சேர்த்துதான்.
அரசியலமைப்புச் சட்ட முதல் திருத்தம் வந்ததி னால், இன்றைக்குக் கொஞ்சம் பேர் படித்தார்கள். அய்ஏஎஸ், அய்பிஎஸ், டாக்டர்களாக ஆகிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், கண்டு பிடிக்கப்பட்டதுதான் EWS என்ற ஒன்று. 10 சதவிகித இட ஒதுக்கீடு என்றார்கள் காங்கிரஸ் ஆட்சியில். ஆந்திரப் பார்ப்பனரான நரசிம்மராவ் அமைச்சராக இருந்தார். அவர் 10 சதவிகித இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றார்.
மண்டல் கமிஷன், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்த நேரத்தில், ‘எங்களுக்கு என்ன?’ என்று உயர்ஜாதியினர் கேட்டார்கள். அவர்களைத் திருப்தி செய்வதற்காகவும், வாக்கு வங்கிய அரசியலுக்காகவும், காங்கிரசே அந்தத் தவறு செய்தது போலானது. முதலில் என்ன செய்தார்கள் என்றால், 10% இட ஒதுக்கீடு கொடுத்தார்கள். ஆனால், அந்த 10 சதவிகிதத்திற்கும், இப்பொழுது, ஒன்றியத்தில் உள்ள மோடி ஆட்சி, பிஜேபி ஆட்சி, ஆர்எஸ்எஸ் ஆட்சி கொடுப்பதற்கும் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால், காங்கிரஸ் ஆட்சியில் எல்லோருக்கும் 10 சதவீதத்தில், Economically Backward என்று ஒரு வார்த்தையைப் போட்டார்கள்.
நேரு அவர்கள் இருக்கும் போதே, இதுகுறித்து விவாதம் செய்தார்கள். Socially and Educationally என்று சொல்கிறீர்களே, Economically என்று ஏன் போடக்கூடாது என்று கேட்டார்கள்.
Socially and Educationally என்றால், அதற்கு ஆதாரம் உண்டு. ஆனால், Economically என்றால், நிரந்தரம் கிடையாது.
இந்த ஆண்டு வருமானம் வேறு; அடுத்த ஆண்டு வருமானம் வேறு. ஒரு விவசாயிக்கு மழை பொழியும்போது வருகிற வருமானம் வேறு; வறட்சியின் போது வருகிற வருமானம் வேறு. அதுபோலவே, சென்னையில சம்பாதிக்கிறவருக்கு ஊதியம் வேறு; பஞ்சப்படியில்லாமல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற இடங்களைத் தாண்டிச் சென்றால், ஊதியம் வேறு. ஆகவே, இது வேறுபடும்; எனவேதான், அது கூடாது என்று முடிவு செய்து, தெளிவாக அந்தப் பொருளாதார அளவுகோல் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அந்த வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது. இவ்வளவு வரலாறு இருக்கிறது.
உயர்ஜாதி ஏழைகளுக்கு
10 சதவிகித இட ஒதுக்கீடு!
சமயம் பார்த்துக்கொண்டே இருந்தது, ஆர்எஸ்எஸ். ஏனென்றால், ஆரியம் எப்பொழுதுமே கூர்ந்து கவனிக்கும். அப்படி கவனித்ததினுடைய விளைவாக, பிஜேபி, ஆர்எஸ்எஸ் கூட்டம் பொருளாதார அடிப்படையை உண்டாக்கி, இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, முதல் கட்டமாக என்ன செய்தார்கள் என்றால், EWS என்று உயர்ஜாதி ஏழைகளுக்கு இடம் கொடுக்கிறோம் என்றார்கள். எல்லோரும் ‘‘ஏழைகளுக்குத் தானே கொடுத்திருக்கிறார்கள்’’ என்றார்கள்.
இந்த தவறை, இந்தச் சட்ட திருத்தத்தைப்பற்றி நாங்கள் தெளிவாகச் சொன்னோம். இரண்டு அமைப்பு தான் இதைச் சொன்னது. நாடாளுமன்றத்தில் திரா விட முன்னேற்றக் கழகம்தான் எதிர்த்தது; காங்கிரஸ் இதற்கு ஆதரவு கொடுத்தது, வடநாட்டில். ஏனென்றால், அவர்களுக்கு அங்கே பார்ப்பனர்களின் தயவு வேண்டும் என்று நினைத்தார்கள். அதே மாதிரி சிபிஅய் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொருளாதார அளவு கோலை வரவேற்றார்கள். அ.தி.மு.க. இதில் வேடிக்கையாக நடந்துகொண்டார்கள். அவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தால், இந்த மசோதா வெற்றி பெற்றிருக்காது. ‘‘நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்’’ என்று சொல்லி, வெளிநடப்புச் செய்தனர். ஏனென்றால், அன்றைக்கு அண்ணா திமுகவாக இல்லை; அமித்ஷா திமுகவாக இருந்தது. கனிமொழி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ராஜா இவர்கள் எல்லோரும் எதிர்த்து ஓட்டு போட்டார்கள். கடைசியில், சொற்பமான ஓட்டில்தான் வெற்றி பெற்றார்கள். விவாதம் நடக்கவில்லை; அதை வேகமாக எதிர்க்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அமளி தொடர்ந்தது; அந்த சத்தத்தோடு சேர்த்து, அந்த மசோதாவை நிறைவேற்றினார்கள்.
மூன்று நாள்களுக்குள் அவைத் தலைவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார். உடனே குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிக்கிறார். அம்மசோதா அமலானவுடனே, நிதி கொடுக்கிறார்கள்.
என்னய்யா, அர்த்தம்?
நீட் தேர்வை ஏன் கொண்டு வந்தார்கள்? நம்மாட்கள் எல்லாம் டாக்டர்களாக வருகிறார்கள். அப்பவே ஆரம்பித்தார்கள். இட ஒதுக்கீடு, தகுதி திறமை மோசடி என்றார்கள். டாக்டர் படிப்பெல்லாம் தகுதி உள்ளவர்கள் படிக்கவேண்டும் என்றார்கள்.
பெரியார், திராவிட இயக்கம் பாடுபட்டதினால்…
உங்களுக்கு ஒரு தகவல் சொல்கிறேன். நம் பிள்ளைகளுக்கு சாதாரணமாக இந்த உணர்வு வந்ததா? இன்றைக்கு அவர்கள், எம்எஸ், எம்சிஎச், அதே மாதிரி எம்டி, டிஎம் எல்லாம் பெரிய பெரிய பட்டம்; சூப்பர் ஸ்பெஷாலிட்டி, இதெல்லாம் பொத்தென்று கீழே விழ வில்லை; சரஸ்வதியினால் வரவில்லை. ‘‘பெரியார், பெரியார், பெரியார்’’ பாடுபட்டதினால்; ‘‘திராவிட இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்’’ போன்ற இயக்கங்கள் பாடுபட்டதினால்தான் இன்றைக்கு இந்த வாய்ப்புகள் வந்திருக்கின்றன. இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. அப்படி வந்த உடனே நண்பர்களே, எப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலை என்று சொன்னால், நீட் தேர்வு என்ற ஒன்று, அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்று. இந்தப் புத்தகம் உங்களுக்கெல்லாம் கிடைக்கும். புத்தகக் கடை இருக்கிறது, அங்கே கிடைக்கும். அந்தப் புத்தகத்தின் தலைப்பு, ‘‘நீட்தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி!’’ நாங்கள் பொறுப்பேற்கிறோம், இந்தப் புத்தகத்தில் நாங்கள் தவறாகச் சொன்னால், வழக்குப் போடுங்கள், சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.
‘‘நீட்தேர்வு நிரூபிக்கப்பட்ட
பச்சை மோசடி’’
‘‘நீட்தேர்வு நிரூபிக்கப்பட்ட பச்சை மோசடி’’ என்று புத்தகத்தில் சொல்லியிருக்கிறோம், தேசிய தேர்வு முகமை (National Testing Agency – NTA) என்ற உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளை நடத்தும் ஒன்றிய அரசு அமைப்பாகும். ஆனால், நீட் தேர்வை நடத்துவதற்கு அந்த அமைப்பிற்கு அதிகாரம் இல்லை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி.
மாநில அரசுக்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு மட்டும்தான் உரிமை!
அரசியலமைப்புச் சட்ட விதிப்படி, பல்கலைக் கழகங்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு. அதிலும், மாநில அரசுக்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு மட்டும்தான் உரிமை.
பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்குக் கூட ஒன்றிய அரசுக்கு அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்துவிட்டார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்பவர்கள் என்று தங்களைக் காட்டிக் கொண்டார்கள்!
ஆனால், மிகப்பெரிய அளவுக்கு வித்தை காட்டுவார் நம்முடைய பிரதமர். பதவி ஏற்பதற்கு முன், மேடையிலிருந்து கீழே இறங்கிப் போவார்; அரசியலமைப்புச் சட்ட கல்வெட்டின் மீது தலையை வைத்துக்கொண்டு, கையெடுத்துக் கும்பிட்டு விட்டு வந்துதான் பதவியேற்பார். இரண்டாவது, மூன்றாவது முறையாகப் பதவியேற்கும்போதுகூட. அந்தக் காட்சியைத் தொலைக்காட்சியில், நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அரசியலமைப்புச் சட்டத்தை அந்த அளவிற்கு மதிப்பவர்கள் என்று தங்களைக் காட்டிக் கொண்டார்கள்.
அந்த அரசியலமைப்புச் சட்டத்தில், நீட் தேர்வை நடத்துவதற்குத் தேசிய தேர்வு முகமைக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. அதை மீறி, தூக்கிப் போட்டுவிட்டுதான் நீட் தேர்வு. அப்பொழுது என்ன சொன்னார்கள், ‘‘எல்லாம் ஊழலுங்க; அரசி யல்வாதிகள் எல்லாம் பணம் வாங்குறாங்க, அதனால் இட ஒதுக்கீடு; இவர்கள் போனால், தேர்வு எழுதின உடனே கம்ப்யூட்டரில் அப்படியே வருது’’ என்று.
150–க்கும் மேற்பட்டோர் தற்கொலை!
நம்ம படித்த புத்திசாலிகள் இருக்கிறார்கள் பாருங்கள், நம்மாளும் சேர்த்து, ஏனென்றால், எப்பொழுதுமே தலையாட்டியே பழக்கம். அதனால், ‘‘நமக்கு நல்லதுதானே’’ என்றார்கள். அப்புறம்தான் அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. இந்தியாவிலேயே முதன் முதலில் இந்த ஆபத்தை சொன்ன இயக்கம் திராவிடர் கழகம். அதை அப்படியே உடனே ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இரண்டு இயக்கங்கள்தான் நீட் தேர்வின் ஆபத்தைச் சொன்னது. பிறகு மற்றவர்களெல்லாம் கொஞ்சம் ஒத்தையா, இரட்டையா? என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் சில பேர், எங்களுடைய கட்சி ‘ஆல் இந்தியா கட்சி’ என்று சொன்னார்கள். தமிழ்நாடு மட்டும்தானே எதிர்க்கிறது; மற்ற மாநிலங்கள் எல்லாம் வரவேற்கிறதே என்று சொன்னால், என்ன செய்ய முடியும்? வேறு வழி இல்லை என்று பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள். அதனுடைய விளைவுதானே அனிதாவிலிருந்து நிறைய பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த நீட் தேர்வினால், இதுவரையில் இந்தியா முழுவதும் தற்கொலை செய்து கொண்ட பிள்ளைகள், பெற்றோர்கள் உள்பட 150 அய் தாண்டும். இதை இல்லை என்று மறுக்க முடியுமா?
(தொடரும்)
