‘‘பல காலமாக இருக்கக்கூடிய வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கிறோம்; அடுத்த தலைமுறையை உண்டாக்குகிறோம்; அதற்காகவே இட ஒதுக்கீடு!’’
அரசியலமைப்புச் சட்டத்தினுடைய முதலாவது சட்டத் திருத்தம், தந்தை பெரியாரால் வந்தது!
இந்தியாவில் இருக்கிற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்தச் சட்டம் பயன்பட்டது
சென்னை, ஆக.29 பல காலமாக இருக்கக்கூடிய வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கிறோம். அடுத்த தலைமுறையை உண்டாக்குகிறோம். அதற்காக இட ஒதுக்கீடு. அரசியலமைப்புச் சட்டத்தினுடைய முதலாவது சட்டத் திருத்தம், தந்தை பெரியாரால் வந்தது. இந்தியாவில் இருக்கிற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கும் இந்தச் சட்டம் பயன்பட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இருசக்கர வாகனப் பரப்புரை – நிறைவு விழாப் பொதுக்கூட்டம் – தமிழர் தலைவர் சிறப்புரை!
‘நீட்’ தேர்வு, உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரை தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் 22.8.2026 முதல் 25.8.2026 ஆகிய நான்கு நாள்கள், ஆறு குழுக்களாக நடைபெற்றது. இருசக்கர வாகனப் பரப்புரையின் முதல் குழுவின் பிரச்சாரப் பயண நிறைவு விழா தாம்பரம் மாவட்டக் கழகம் சார்பில், கடந்த 25.8.2026 அன்று மாலை மேற்குத் தாம்பரம் பாரதி திடல், சண்முகம் சாலை, பெரியார் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்து, பயணக் குழுவினருக்கு வாழ்த்துரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
நம்மையே பார்த்துக் கேட்கிறான், ‘‘இன்னமும் நீங்கள் அந்தக் கட்சியில்தான் இருக்கீங்களா?’’ என்று. காலை யில், மத்தியானம், சாயந்திரம், பொழுது விடிந்தால், எந்தக் கட்சிக்கு, எங்கே போனால், நன்றாக இருக்கும் என்றுதான் பார்க்கின்றார்கள். அது மட்டுமல்ல, அதற்கு ஒரு பெயர். குதிரை எந்தப் பாவமும் செய்யவில்லை. அது பாவம் சுமந்துகொண்டிருக்கிறது. அதைப் பார்த்து ‘குதிரை பேரம், ‘குதிரை பேரம்’ என்று சொல்கிறார்கள்.
‘‘பார்ப்பனர்களே, நீங்கள் படித்துவிட்டீர்கள்; எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்’’ என்று உருவாக்கப்பட்டதுதான் திராவிடர் இயக்கம்!
ஆனால், வடநாட்டில் அதற்கு ஒரு பெயர் வைத்திருந்தார்கள். ‘‘ஆயாராம் காயாராம்’’ என்பதுதான் அது. ஏனென்றால், ராமன் ஆளைப் பிடித்தே பழக்கப்பட்டவன் என்பதற்காக. அந்த மாதிரியான சூழ்நிலையில், இன்றைக்கு நினைத்துப் பாருங்கள்; அதனால்தான் இந்தக் கல்வியே கொடுக்கலாகாது என்று சொல்லும்போது, மீறிப் படிப்பதற்கு இயலாதது, அந்தக் காலகட்டம். ஆனால், ஒவ்வொரு காலகட்டமும் மாறுகிறது. அப்படி மாறிய உடனே, ‘‘பார்ப்பனர்களே, நீங்கள் படித்துவிட்டீர்கள்; எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்’’ என்று உருவாக்கப்பட்டதுதான் திராவிடர் இயக்கம். 1916 இல் உருவானது. 1916 இல் உருவாகிய இயக்கம், 1920 இல் ஆட்சியைப் பிடிக்கிறது.
ஒடுக்கப்பட்டோருக்கு கல்விக்கண் திறந்த பெருமை திராவிடர் இயக்கமான நீதிக் கட்சிக்குத்தான்!
நீதிக் கட்சி, பானகல் அரசர் முதலமைச்சர். அவருக்கு இரத்தம் கொதிக்கிறது. என்ன இவ்வ ளவு அக்கிரமமாக இருக்கிறதே? முதலில் எல்லோ ருக்கும் படிப்பைக் கொடுக்க வேண்டும். யார் யாருக்குக் கல்வி மறுக்கப்பட்டதோ, அந்த சமு தாயத்துக்குக் கல்விக்கண் திறந்த பெருமை திராவிடர் இயக்கமான நீதிக் கட்சிக்குத்தான்.
ஆட்சிக்கு வந்த உடனே முதல் திட்டம். டாக்டர் படிப்பு என்பது, மனிதர்களைக் காப்பாற்ற வேண்டிய படிப்பு அது; மனிதனுடைய ஆயுளை நீடிக்க வேண்டிய படிப்பு. அந்த மருத்துவப் படிப்பு அவ்வளவு முக்கியமானது. ஆனால், அந்த மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்றால், மனு கூட போட முடியாது. மனு வாங்குவதற்குத் தகுதி என்னவென்றால், சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். சமஸ்கிருதத்தில் நீங்கள் தேர்வாகி இருக்கிறீர்களா? என்றுதான் முதலாவதாகப் பார்ப்பார்கள்.
என்னய்யா அநியாயம் இது! சமஸ்கிருதத்துக்கும், மருத்துவப் படிப்பிற்கும் என்ன சம்பந்தம்? டாக்டர் ஏதாவது மந்திரம் சொல்லப் போகிறாரா? அல்லது நோய் போக்குவதற்காக ஏதாவது சமஸ்கிருத மந்திரம் சொல்லி, அந்த நோயை ஓட்டப் போகிறாரா?
திராவிடத்தால் ஒருபோதும்,
எவரும் வீழ்ந்திருக்க முடியாது!
இதைப் பார்த்ததும், என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார் பானகல் அரசர். அந்த நேரத்தில்தான் பெரியார் போன்ற தலைவர்கள், அதை ரத்து செய்ய வேண்டும் என்று சொன்னவுடனே, நாமெல்லாம் டாக்டராக முடியாது என்று நினைத்தவர்களுக்கு நம்பிக்கையாக, சமஸ்கிருதம் தெரிந்தால்தான், மருத்துவப் படிப்பிற்கே மனு போட முடியும் என்ற முறையைத் தூக்கி எறிந்தவிட்டு, எல்லோரும் மருத்து வப் படிப்புப் படிக்கலாம், டாக்டராகலாம் என்று செய்த இயக்கம் திராவிடர் இயக்கம். இந்த வரலாறு தெரிய வேண்டும் முதலில். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்கள்; திராவிடத்தால் ஒருபோதும், எவரும் வீழ்ந்திருக்க முடியாது. வேண்டுமானால் டாஸ்மாக்கால் வீழ்ந்திருப்பானே தவிர, திராவிடத்தினால் யாரும் வீழ்ந்திருக்க மாட்டார்கள். அப்பேர்ப்பட்ட ஓர் இயக்கம் இந்த இயக்கம்.
எப்படிப் பாம்பு அடிவாங்கிக் கொண்டு புற்றுக்குள் நுழைகின்றதோ, அந்த அளவிற்கு, இந்த ஆரியம், நம்முடைய கல்வித் தடுப்பு, நம்முடைய கல்வி மறுப்புக்குச் சூழ்ச்சி செய்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி அறிவு வந்துவிட்டால் என்னாவது? என்று நினைத்தார்கள்.
கலைவாணரின் ‘கிந்தனார்’ நாடகம்!
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், ‘நந்தனார்’ என்பதற்குப் பதிலாக ‘கிந்தனார்’ என்ற நாடகம் நடத்தினார். அந்தக் கிந்தனாரைப் பார்த்தால், உங்களுக்கெல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஒரு சாதாரண ஆதிதிராவிடப் பையன், படிக்க முடியாத சமுதாயத்திலிருந்து வந்த பையன், மிகப்பெரிய அளவிற்குப் படித்து வந்தார். அவரே, பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்ய வருகின்ற கல்வி அதிகாரியாக வரும்படி யான ஒரு காட்சியை வைத்திருப்பார். ஆகவே, அதுதான் சமுதாய மாற்றம்.
அறிவுக்கு விலங்கு போட்டார்கள்; அதை உடைத்த பெருமை, தந்தை பெரியாரைச் சாரும், சுயமரியாதை இயக்கத்தைச் சாரும், இன்றைக்கும் திராவிட இயக்கத்தைச் சாரும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அடுத்த கட்டம்; வகுப்புவாரி உரிமை கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள். அது எளிதில், பார்ப்பனர்களுக்குத்தான் கிடைத்தது. ஏனென்றால், அவர்கள் முதலில் படித்து அதிகாரிகளாக அமர்ந்துவிட்டார்கள். வெள்ளைக்கார கவர்னர்கள் இருந்தார்கள், அவர்களையும் சரிப்படுத்திவிட்டார்கள்.
வெள்ளைக்காரர்கள் காட்டிய
அலட்சியம்!
அப்படி சரிப்படுத்திவிட்டதினால், பார்ப்பனர்கள் ‘‘வகுப்புவாரி உரிமைக்கு உத்தரவைப் போட்டால், நமக்கு சங்கடம் வரும்; ஆகவே, இந்த உத்தரவைப் போடக்கூடாது’’ என்றார்கள். வெள்ளைக்காரர்களும் என்ன நினைத்தார்கள் என்றால், ‘‘நாம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கின்றோம்; இங்கே இருக்கின்ற மக்கள் என்ன சொல்கிறார்களோ, அதைக் கேட்டுக்கொண்டு, இருக்கின்ற வரையில், நாம் இருந்துவிட்டுப் போவோம்’’ என்று அவர்களுக்கு அலட்சியம்; நம்முடைய படிப்பைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
அதற்காகப் பாடுபட்டு, 1921 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், சமூகநீதிச் சட்டம், வகுப்புரிமைச் சட்டம் என்று, அரசாணைப் போடுகிறார்கள். ஆனால், அதை அமல்படுத்தவில்லை. விடவில்லை பானகல் அரசர். இரண்டாவது அரசாணை போட்டார். அதையும் அமல்படுத்தவிடவில்லை. மூன்றாவது அரசாணை போட்டார்.
ஆரிய – திராவிட போராட்டம்;
தேவாசுரப் போராட்டம்!
அய்யா தந்தை பெரியார் சொல்லுவார், ‘‘தமிழ்நாட்டு வரலாற்றில், இந்திய வரலாற்றில் அரசியல் போராட்டம் என்பது போல தெரியுமே தவிர, அது அரசியல் போராட்டம் அல்ல; முழுக்க முழுக்க இனப் போராட்டம். ஆரிய – திராவிட போராட்டம்; தேவாசுரப் போராட்டம் என்று அவன் புராண மொழியில் சொல்லுவான்’’ என்று. அதுதான் தொடர்ந்து நடந்து கொண்டு வந்த ஒரு செயல்.
1928 ஆம் ஆண்டு முத்தையா முதலியார் வந்தார்; சுயேச்சை உறுப்பினர் டாக்டர் சுப்பராயன் ஆதரவு கொடுத்தார். 1928 இல் சூழ்நிலைகள் நிலைத்து 1950 வரைக்கும் தொடர்ந்தது. 1947 இல் சுதந்திரம். அந்த சுதந்திரம் என்ற பெயராலே அரசியலமைப்புச் சட்டம். அந்த அரசியலமைப்புச் சட்டத்தில் சமூக நீதி இடம் பெற வேண்டும் என்றார்கள். அம்பேத்கர் அவர்களை சுதந்திரமாகச் செயல்படவில்லை. நான்கு பார்ப்பனர்கள்; அம்பேத்கர் மட்டும் தனி ஆள்; இன்னொருவர் இஸ்லாமியர்; அவர் பெரும்பாலும் இந்தக் கூட்டத்துக்கே வந்ததில்லை. இந்த ஆறு பேர், அம்பேத்கர் அவர்களை வதைத்தார்கள். அதையும் தாண்டிதான், அம்பேத்கர் அவர்கள் சமூக நீதியைக் கொண்டு வந்தார். வந்த உடனே, தயாராக இருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் வந்தவுடனே, அதை எழுதியவர்களில் முக்கியமான ஒருவர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். பிரபலமான மூத்த வழக்குரைஞர். அவர் பிராக்டீசை விட்டு நீண்ட நாள்கள் ஆயிற்று. அவர் போய் உட்கார்ந்துருக்கார். ஆனால், ஓர் அம்மையார், பொய்யான அபிடவிட் போட்டு, மருத்துவக் கல்லூரிப் படிப்பிற்கு மனுவே போடாமல், மனு போட்டேன் என்று சொன்னார். அந்த அம்மையார் பெயர் செண்பகம் துரைராஜன். பொய்யான வழக்குப் போட்டு உயர்நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தைக் காட்டி, 1949 ஆம் ஆண்டுதான் அரசியலமைப்புச் சட்டம் வந்தது என்கிற காரணம் காட்டி, 1928 ஆம் ஆண்டு போட்ட ஜி.ஓ. செல்லாது என்று ஆக்கினார்கள்.
உங்களுக்காக மட்டும்
சொல்லவில்லை!
இதுவரையில் நம்முடைய பிள்ளைகள் படித்தார்கள் பாருங்கள், அப்பொழுதுதான் டாக்டர் ஆகி, அப்பொழுதுதான் வக்கீல் ஆகி, அப்பொழுதுதான் பேராசிரியர், ஆசிரியர் ஆகி இருந்தார்கள். அந்தக் கட்டத்துக்குக் கல்விக் கண்ணைத் திறப்பது போன்று. ஒரு பெரிய மிகப்பெரிய தடை ஓட்டப் பந்தயமாக இருந்தது என்பதை அறிவார்ந்த இந்த மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், உங்களுக்காக மட்டும் இதைச் சொல்லவில்லை; உலகம் முழுவதும் உள்ளவர்கள் இந்தக் கூட்டத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, அவர்களுக்கு இந்த வரலாறு தெரிய வேண்டும். இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும். இது சாதாரணமாக சத்தம் போடுகிற விஷயம் இல்லை. இந்த அளவிற்கு எப்படி வந்தோம்? இன்றைக்கு எப்படி இவ்வளவு தூரம் நாம் வந்திருக்கின்றோம்? முழங்காலுக்குக் கீழே வேட்டிக் கட்டக்கூடாது, தோளில் துண்டு போடக்கூடாது என்று இருந்த ஒரு சமுதாயம், படித்த பிற்பாடு, அறிவு கொளுத்திய பிற்பாடு, மானத்தோடு, தன்மான உணர்வோடு வரக்கூடிய உணர்வைப் பெற்றார்கள்.
உச்சநீதிமன்றம் என்ன?
மக்கள் மன்றத்தை விட தாண்டியதா?
வகுப்புரிமை செல்லாது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது; அதுதான் கடைசி என்றார்கள். தந்தை பெரியார் அவர்கள் விடவில்லை. உச்சநீதிமன்றம் சொன்னால் என்ன? அதைவிட முக்கியமாக மக்கள் மன்றம் இருக்கிறது. ஆகவே, மக்கள் மன்றத்தின்முன் நான் போராடுகிறேன் என்று, பெரியார் அவர்கள், தன்னந்தனியாகப் போராடினார். அய்யாதான் இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் எதிர்த்து, உச்சநீதிமன்றம் என்ன? மக்கள் மன்றத்தை விட தாண்டியதா? என்று போராடினார். எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்ன வென்றால், அந்த வகுப்புரிமைப் போராட்டத்தின் போது, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் போராட்டத்தில், கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்றைய மாண வர்களுக்கு எல்லாம் முன்னோடி கிளர்ச்சி அதுதான்.
அரசியலமைப்புச் சட்டத்தினுடைய முதலாவது சட்டத் திருத்தம், தந்தை பெரியாரால் வந்தது!
உடனே எல்லா இடத்திலும் அந்தப் போராட்டம் நடந்தது. நேரு, பார்த்தார்; தமிழ்நாட்டிலுள்ள காமராஜரி டம் கேட்கிறார். தமிழ்நாட்டில் சமூகநீதி உணர்வு மேம்பட்டு இருக்கிறது என்று அவர் சொன்னபோது, அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருக்கிறார். உடனே அரசியலமைப்புச் சட்டத்தினுடைய முதலாவது சட்டத் திருத்தம், தந்தை பெரியாரால் வந்தது. அம்பேத்கரை, நேரு அவர்கள் நிறைவேற்றச் சொன்னார்.
நாளைக்கு இந்தியா முழுவதிலும்
பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது!
ஒரே ஒரு மாநிலத்துக்காக, இந்தியா முழுவதும் மாற்றவேண்டுமா? என்று கேட்டார்கள். இன்றைக்கு இல்லாமல் இருக்கலாம்; நாளைக்கு இந்தியா முழு வதிலும் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, இதைச் செய்ய வேண்டும் என்று அம்பேத்கர் வலி யுறுத்தினார். அதனால் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.
வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு – அடுத்த தலைமுறையை உண்டாக்க இட ஒதுக்கீடு!
வழக்குரைஞர்களுக்குத் தெரியும், 15(4) என்று ஒரு திருத்தத்தைக் கொடுத்தார்கள். கல்வியில், இட ஒதுக்கீடு உள்ளே போகும்போது, அந்த கல்வியில், எப்படி அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யலாம், யாருக்கு, எவ்வளவு கொடுக்கலாம் என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்டது. அரசி யலமைப்புச் சட்டத்திலேயே அதற்கு என்ன பெயர் என்றால், compensatory justice. ‘‘பல காலமாக இருக்கக்கூடிய வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுக்கிறோம். அடுத்த தலைமுறையை உண்டாக்குகிறோம். அதற்காக இட ஒதுக்கீடு’’ அதை உண்டாக்க வேண்டும் என்று – சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், socially and educationally என்ற பிரிவுள்ள backward classes உள்பட, எல்லோருக்கும் எஸ்.சி., எஸ்.டி. எல்லோருக்குமே இட ஒதுக்கீடு என்று உறுதி செய்தார்கள்.
இந்தியாவில் இருக்கிற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்தச் சட்டம் பயன்பட்டது!
இதில், பெரிய வசதி என்னவென்றால், இந்தி யாவில், தமிழ்நாட்டுக்கு, சென்னை ராஜதானி என்றுதான் அன்றைக்குப் பெயர்; தமிழ்நாடு என்று பின்னாளில்தான் பெயர் வருகிறது. ஆகவே, அப்படி வரும்போது, அந்த சென்னை ராஜதானிப் பகுதியில் மட்டும் பயன்பெற்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, எதிர்பாராத ஒரு பெரிய லாபமாக, இந்தியாவில் இருக்கிற அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்தச் சட்டம் பயன்பட்டது.
(தொடரும்)
