“விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு அரசு, உடனடியாக ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை. ஆக. 29– “என் அரசியல் ஆசானாக திருமாவளவனை ஏற்றுக் கொள்கிறேன்” என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் சமூக நீதித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பின் அமைச்சர் வன்னி அரசு நேற்று (28.8.2026) பதிலளித்து பேசும்போது, “திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் நான் நன்றி தெரிவித்தேன். ஆனால், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் யாரும் எங்கள் தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிக்கவில்லை” என்றார்.

இதற்கு பதிலளித்து எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி பேசும்போது, “அமைச்சர் வன்னி அரசு எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார். எனக்கும் நன்றி தெரிவித்தார்.

திருமாவளவனுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் இடையே இருக்கும் உறவு வெறும் தேர்தல் கூட்டணி இல்லை.

தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி ஆகவும், தேர்தல் முடிவு வந்த பிறகு ஒரு கூட்டணியாகவும் மாறும் கூட்டணி இல்லை. அது ஒரு கொள்கைக் கூட்டணி. நான் பெருமையாக கூறிக் கொள்வேன்… என் அரசியல் ஆசானாக திருமாவளவனை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, திருமாவளவனுக்கு என்றைக்குமே எங்கள் நன்றியை தெரிவித்துகொண்டு இருக்கிறோம்” என்றார்.

விலைவாசி உயர்வு

“அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்ற வகையில் ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு அரசு, உடனடியாக ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் நேற்று (28.8.2026) உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி தற்போது நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கின்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை என்ற எந்தப் பொருளை எடுத்தாலும், கடந்த மூன்று மாதங்களில் அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்திருக்கின்றது.

ஏழை, எளிய, நடுத்தர வர்க்க பொது மக்கள் மிகவும் அல்லலுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். குறிப்பாக, இந்த அரசு அமைந்ததில் இருந்து அத்தியாவசியப் பொருட்களுடைய விலை கடுமையாக உயர்ந்திருக்கின்றது.

மே மாதம் ஒரு கிலோ அரிசி 55 ரூபாய்க்கு விற்பனையானது, இன்றைக்கு 75 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 40 ரூபாய், இன்றைக்கு கிலோ 80 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ துவரம் பருப்பு 150 ரூபாய், இன்றைக்கு கிலோ 180 ரூபாய். மே மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 40, இன்றைக்கு ஒரு கிலோ சுமார் 70 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.

இந்த விலை ஏற்றத்தால், மக்கள் மிகவும் பாதிப்படைந்திருக்கிறார்கள். மளிகைக் கடை பக்கம் போவதையே குறைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. உங்களுடைய ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் இதைக் கண்டித்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணத்திற்கு 2007-ஆம் ஆண்டு தேசிய அளவில் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது. அப்பொழுது முதலமைச்சராக இருந்த கலைஞர், தமிழ்நாடு மக்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை அறிவித்தார்கள்.

அந்தத் திட்டத்தின் கீழ் ரேசன் கடைகள் மூலமாக பருப்பு, எண்ணெய், ரவா, மைதா உள்ளிட்ட பொருட்களை, சந்தை விலையை விட குறைவான விலைக்கு மக்களுக்கு வழங்கினார். அதுமட்டுமல்லாமல் கடுகு, சீரகம், வெந்தயம் உள்ளிட்ட 10 மளிகைப் பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கினார்கள்.

கலைஞர் 2007இல் தொடங்கி வைத்த, அந்த சிறப்புப் பொது விநியோகத் திட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ரேசன் கடைகள் மூலமாக சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை தற்போது வழங்கப்படுகின்ற அளவை விட, இன்னும் கூடுதல் அளவு வழங்கிட இந்த அரசு ஆவன செய்ய வேண்டும் என்று உங்கள் மூலமாக கேட்டுக்கொள்கின்றேன்.

முக்கியமாக, முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கின்ற வகையில் ஒரு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைக்கு இந்த அரசு, உடனடியாக ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்.

எங்கள் உறுப்பினர் பேசும்போது இங்கு முதலமைச்சர் 110 அறிவிப்பில் கொடுத்திருக்கிறார். யார் யாருக்கு கார் இல்லையோ அவர்களுக்கு நீங்கள் வாங்கி கொடுங்கள். விவசாயக் கடன்கள் எல்லாம் இன்னும் தள்ளுபடி செய்யவில்லை.

அவையெல்லாம் நீங்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி. ஆட்சி பொறுப்பேற்கும்போது என்ன சொன்னீர்கள் என்றால், சென்ற அரசு கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டார்கள் என்று குறை சொல்லிக்கொண்டு இருந்தீர்கள்.

எனவே, எங்களின் திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த நிலைப்பாடு. திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் எங்களுக்கு தேவையில்லை என்று தெளிவாகச் சொல்லிவிட்டோம். நீங்கள் யாரும் கார் வாங்கிக்கொள்ள கூடாது என்று சொல்லவில்லை. கார் வாங்கிக் கொள்ளுங்கள். எல்லா தொகுதியும் சுற்றுங்கள். எங்கள் சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து மூன்றாவது முறையாக அந்தத் தொகுதியில் நின்று, மக்களின் வாக்குகளைப் பெற்று வென்று வந்துள்ளார். எனவே, அவரைக் கொச்சைப்படுத்தி பேசக்கூடாது.

இங்கு ‘கார் ரேஸ்’ பற்றி ஒரு பேச்சு வருகிறது. அது ஒரு இன்டர்நேஷனல் ரேஸ். ஆசியாவிலேயே முதன்முறையாக இரவு நேரத்தில் நடத்திக் காட்டுவோம் என்று நடத்திக் காட்டினோம். இதைத் தடுப்பதற்கு அப்போது பலபேர் நீதிமன்றத்துக்கு எல்லாம் சென்றார்கள்.

பாதுகாப்பு இல்லை, கார்கள் எல்லாம் வேகமாகச் செல்லும் என்று சொல்லி, அதை நிறுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால், அவர்களையெல்லாம் நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.

பன்னாட்டு அளவிலான ஒரு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறீர்கள். இதை நீங்கள் நடத்த வேண்டும் என்று வெற்றிகரமாக எங்கள் ஆட்சியில் அதை நடத்தினோம். கார் ரேஸை கொச்சப்படுத்துவது, நீங்கள் எங்களைக் கொச்சைப்படுத்தவில்லை. அந்த விளையாட்டு வீரர்களைக் கொச்சைப் படுத்தி இருக்கிறீர்கள்” என்று உதயநிதி பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *