தமிழ்நாடு அரசியலில் சொற்களுக்கு எப்போதும் தனித்த மவுசும், வலிமையான வரலாறும் உண்டு. அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியிருக்கும் ஒரு சொல் “உளமாற” (Solemnly Affirm).
அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவில், அவர் “உளமாற” என்பதற்குப் பதிலாக “ஆண்டவன் பெயரால்” என்று உறுதிமொழி ஏற்றது, வெறும் தனிநபர் விருப்பமாகப் பார்க்கப்படாமல், ஒரு கருத்தியல் மோதலாகவே உருவெடுத்துள்ளது.
சார்லஸ் பிராட்லா: ஒரு சொல்லின் பிறப்பு
இந்த வார்த்தைப் போரின் தொடக்கம் 19-ஆம் நூற்றாண்டின் பிரிட்டனில் உள்ளது. தீவிர நாத்திகரான சார்லஸ் பிராட்லா, 1880இல் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, “இல்லாத கடவுள் மீது நான் ஏன் ஆணையிட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
மக்களின் பிரதிநிதியாகத் தன்னைத் தேர்ந்தெடுத்தவர்களின் உரிமையை நிலைநாட்ட அவர் நடத்திய 6 ஆண்டுகாலப் போராட்டத்தின் விளைவாகவே, 1886இல் “உளமாற/மனசாட்சிப்படி” உறுதிமொழி ஏற்கும் சட்டம் உருவானது.
தமிழ்நாடு அரசியலில் அண்ணாவின் புரட்சி!
பிரிட்டனில் தொடங்கிய இந்தச் சிந்தனைக்குத் தமிழ்நாட்டில் அரசியல் வடிவம் கொடுத்தவர் பேரறிஞர் அண்ணா. 1967இல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபோது, “கடவுள் பெயரால்” என்பதை நிராகரித்து “உளமாற” என்று உறுதிமொழி ஏற்று புதிய மரபைத் தொடங்கி வைத்தார்.
அதற்கு அவர் அளித்த விளக்கம் காலத்தால் அழியாதது: “கடவுளிடம் பரிகாரம் செய்து சமரசம் செய்யலாம்; ஆனால், மனசாட்சியிடம் முடியாது.” கடவுளின் பெயரால் உறுதி எடுக்கும்போது பொறுப்பு மேலுலகிற்குச் செல்கிறது; ஆனால், ‘உளமாற’ என்று சொல்லும்போது அந்தப் பொறுப்பு நேரடியாகத் தன் மனசாட்சிக்கே வந்து நிற்கிறது என்பதே அதன் தத்துவம்.
திராவிட மரபும், மாற்றமும்!
அண்ணாவைப் பின்பற்றி கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோர் “உளமாற” என்றே பதவியேற்றனர். ஆனால், ஜெயலலிதா அவர்கள் “ஆண்டவன் மீது ஆணையிட்டு” என்று இந்த மரபில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். 2021இல் மு.க.ஸ்டாலின் மீண்டும் “உளமாற” என்று பதவியேற்றபோது, அது திராவிட அரசியலின் மீள் அறிவிப்பாகப் பார்க்கப்பட்டது.
விஜய்யின் முன்னெடுப்பும், விமர்சனங்களும்!
தன்னைத் திராவிடக் கொள்கைகளின் வழித்தோன்ற லாகவும், மாற்று அரசியலின் முகமாகவும் முன்னிறுத்தும் விஜய், தனது அரசியல் தொடக்கத்திலேயே அண்ணா நிலைநிறுத்திய “உளமாற” என்ற சொல்லைத் தவிர்த்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொறுப்புக்கூறல்: “ஆண்டவன் பெயரால்” என்பது தனிப்பட்ட நம்பிக்கையாக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அது பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகப் பகுத்தறிவாளர்களால் விமர்சிக்கப்படுகிறது.
அரசியல் அடையாளம்: தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளியது மற்றும் உறுதிமொழியில் மாற்றத்தைக் கொண்டு வந்தது ஆகியவை, அவர் சொல்லும் “திராவிட மாடல்” கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது.
“உளமாற” என்பது வெறும் நாத்திகம் சார்ந்த சொல் அல்ல; அது ஜனநாயகம், பகுத்தறிவு மற்றும் மனசாட்சிக்கு மதிப்பளிக்கும் ஒரு வரலாற்றுப் போராட்டம். தமிழ்நாடு அரசியலில் ஒரு சொல்லின் தேர்வு என்பது, அந்தத் தலைவன் எந்தப் பாதையில் பயணிக்கப்போகிறான் என்பதைக் காட்டும் திசைகாட்டியாகும். அந்த வகையில், விஜய்யின் இந்தத் தேர்வு ஒரு விவாதப் பொருளாகவே மாறியுள்ளது.
