மும்பை, ஆக.28 மகாராட்டிராவில், கட்டாய மதமாற்றத் தடை சட்டம் முழு வீச்சில் அமலுக்கு வந்துள்ள நிலையில், கிறித்தவ ஆலயங்களுக்கு வருவோரிடம் சுயவிருப்ப பிரகடன படிவம் பெறும் நடைமுறை தொடங்கியுள்ளது.
மகாராட்டிராவில் பா.ஜ.க,வை சேர்ந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அண்மையில் நிறைவேறிய மகாராட்டிரா கட்டாய மதமாற்ற தடை சட்டம் மற்றும் மகாராட்டிரா மத உரிமைகள் சட்டம் – 2026க்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து இச்சட்டம் கடந்த ஜூலை 30 முதல் அமலுக்கு வந்தது. இதன்படி மோசடி, மிரட்டல், ஆசை வார்த்தைகள் கூறி மதமாற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
புதிய சட்டத்தின்படி ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாற வேண்டுமெனில், 60 நாட்களுக்கு முன்பாக ஆட்சியரிடம் தகவல் அளிக்க வேண்டும். சட்டத்தில் உள்ள விதிகளை மதிக்காவிட்டால், ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.
இந்நிலையில், மும்பை புறநகர் பகுதிக்கு உட்பட்ட வசாய் – விராரர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் கிறித்தவ ஆலயங்களுக்குள் புகுந்து, சிலர் பிரச்சினையில் ஈடுபட்டு வருவ தாக கூறப்படுகிறது. இதுவரை 11 கிறித்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாஸ்டர் தேவ்தன் திரிபுவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதை தொடர்ந்து மும்பை பெரு நகர பகுதிகளில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட கிறித்தவ ஆலயங்களில், பிறப்பால் கிறித்துவர் அல்லாதவர்கள் மற்றும் வழக்கமாக வரும் வழிபாட்டாளர் களிடம், ‘வற்பு றுத்தி ஜெபக் கூட்டங்களுக்கு அழைத்து வரப்படவில்லை’ என, சுயபிரகடன படிவம் பெறப்பட்டு வருகிறது.
இது குறித்து மும்பை கத்தோலிக்க சபை செய்தி தொடர்பாளர் டால்பி டிசோசா கூறியதாவது: மத சுதந்திர சட்டம் நிறைவேறியது முதல் இங்கு மோசமான நிலைமை நிலவுகிறது. கட்டாய மதமாற்றம் நடப்பதாக பரப்பப்படும் வதந்திகளால், ஜெபக் கூட்டத்திற்குள் நுழைந்து சிலர் தாக்குதல் நடத்துகின்றனர்.
கிறிஸ்தவ ஆலயங்களின் பாது காப்பை கருதியே சுயவிருப்ப பிரகடன படிவத்தில் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தொடங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
