புற்றுநோய் சிகிச்சையில் புதிய முன்னேற்றங்கள்

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

உலகின் முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினை களில் ஒன்றாகப் புற்றுநோய் இருந்து வருகிறது. உலகச் சுகாதார நிறுவனம் (WHO) ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் புதிய புற்றுநோய் பாதிப்புடையோர் கண்டறியப்படுகின்றனர்.

அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் 9 லட்சத்து ஆயிரத்து 828 பேர் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 33 லட்சம் பேர் புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். மருத்துவச் செலவுகளில் நோயாளிகள் தங்களது சொந்தப் பணத்திலிருந்து நேரடியாகச் செலுத்தும் தொகை (Out-of-Pocket Expenditure) 2014ஆம் ஆண்டில் 64.2 சதவீதமாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 43.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் ஓர் அறிகுறியாகும்.

அதேவேளையில், இந்தியாவில் வயதானவர் களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் புற்றுநோய் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், 75 வயதிற்கு முன் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 11.2 சதவீதமாகவும், அதனால் உயிரிழக்கும் அபாயம் 6.8 சதவீதமாகவும் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. எனவே, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் தேவையான மருத்துவக் கட்டமைப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இந்தியாவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வசதிகள் இன்னும் போதுமான அளவில் இல்லை. நோயைக் கண்டறிவதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், ஆய்வகங்கள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வளங்களின் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால், புற்றுநோய் தடுப்பு, ஆரம்பகட்ட நோயறிதல் மற்றும் மேம்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அந்த வகையில், புற்றுநோய் சிகிச்சையில் அண்மைக்கால முக்கிய முன்னேற்றங்களில் ஒன்றாக தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசிகள் கருதப்படுகின்றன.

தனிப்பயனாக்கப்பட்ட (Personalized) mRNA தடுப்பூசி

ஒரே தடுப்பூசி அனைவருக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையைத் தாண்டி, ஒவ்வொரு மருத்துவப் பயனாளியின் புற்றுநோய் செல்களில் காணப்படும் குறிப்பிட்ட மாற்றங்களுக்கு ஏற்ப தனித்தன்மையாகத் தயாரிக் கப்படும் தடுப்பூசி முறையே தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி ஆகும்.

இந்தத் தடுப்பூசியின் முக்கிய நோக்கம், மருத்துவப் பயனாளியின் புற்றுநோய் செல்களில் காணப்படும் குறிப்பிட்ட அம்சங்களை அடையாளம் கண்டு, அவற்றை நோக்கி நோயெதிர்ப்பு மண்டலத்தைத் துல்லியமாகத் தூண்டுவதாகும். இதன் மூலம், புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு அவற்றைத் தாக்குவதற்கு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிக்க முடியும்.

அறிவியல் அரங்கம்

பாரம்பரிய புற்றுநோய் சிகிச்சை முறைகளில், புற்றுநோய் செல்களுடன் சில ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படுவதால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படலாம். சில நோயெதிர்ப்பு சிகிச்சைகள் ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் மாற்றக்கூடும். இதற்கு மாறாக, தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி குறிப்பிட்ட புற்றுநோய் செல்களை குறிவைத்து நோயெதிர்ப்பு எதிர்வினையை உருவாக்குவதால், சிகிச்சையை மேலும் துல்லியமாக மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

மெர்க் (Merck) மற்றும் மாடர்னா (Moderna) நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட மருத்துவ ஆய்வுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவப் பயனாளிகளிடம் இந்த சிகிச்சை அணுகுமுறை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதில் தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசியுடன் ‘கீட்ரூடா’ (Keytruda) எனப்படும் நோயெதிர்ப்பு சிகிச்சை மருந்தும் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. இது தோல் புற்றுநோய் நோயாளிகளில் செய்யப்பட்ட ஆய்வாகும்.

ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைகளில், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு புற்றுநோய் மீண்டும் ஏற்படும் அபாயத்தை இந்தக் கூட்டு சிகிச்சை கணிசமாகக் குறைத்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சில ஆய்வுகளில் நோய் மீண்டும் ஏற்படுதல் அல்லது இறப்பு ஏற்படும் அபாயம் சுமார் 50 சதவீதம் வரை குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நீண்டகால ஆய்வுகள் இதில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோய் கண்டறிதலில்
செயற்கை நுண்ணறிவின் (ஏஅய்) பயன்பாடு

புற்றுநோய் சிகிச்சையில் மற்றொரு முக்கியமான முன்னேற்றமாக செயற்கை நுண்ணறிவின் (ஏஅய்) பயன்பாடு உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையில் துல்லியமான நோய் கண்டறிதல், மருத்துவப் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தல் மற்றும் சிகிச்சைத் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஏஅய் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கல்லீரல் புற்றுநோயைக் கண்டறிவதில் ஏஅய் பயன்படுத்தப்பட்ட ஆய்வுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. சுமார் 6,500 மருத்துவப் பயனாளிகளின் மருத்துவத் தரவுகள் மற்றும் கல்லீரல் சிடி பரிசோதனைப் படங்களை அடிப்படையாகக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்ட ஏஅய் அமைப்பு, மருத்துவர்கள் கண்டறியத் தவறிய சில புற்றுநோய் பாதிப்புகளையும் கண்டறிந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 51 மருத்துவப் பயனாளிகளின் பாதிப்புகளை ஏஅய் அடையாளம் கண்டுள்ளது. அவர்களில் 15 பேர் தீவிரமான நிலையில் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதுபோன்ற ஆய்வு முடிவுகள், நோய் கண்டறிதலில் செயற்கை நுண்ணறிவின் திறன் வேகமாக வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன. குறிப்பாக, மனிதர்களால் கவனிக்கத் தவறக்கூடிய சிறிய மாற்றங்களையும் மருத்துவப் படங்களில் ஏஅய் கண்டறியக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்குவதற்கு ஏஅய் உதவக்கூடும். எனினும், செயற்கை நுண்ணறிவை மருத்துவர்களுக்கு மாற்றாக அல்லாமல் அவர்களுடன் சேர்த்து அணுகுவது சரியாக இருக்கும்.

மொத்தத்தில், புற்றுநோய் சிகிச்சை தற்போது பொதுவான சிகிச்சை முறைகளிலிருந்து தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் துல்லியமான சிகிச்சை முறைகளை நோக்கி நகர்ந்து வருகிறது. தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசிகள் மருத்துவப் பயனாளியின் தனிப்பட்ட புற்றுநோய் செல்களை அடிப்படையாகக் கொண்டு நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டும் புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளன. அதேபோல், செயற்கை நுண்ணறிவு ஆரம்பகட்ட நோயறிதலை மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

– மகேஸ்வரன் ப

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *