மலையாளத்தில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் நாட்டுப்புறக் கதையாடல்களின் படி, ஓணம் என்பது அதிகாரத்தை இழந்த ஒரு மக்கள் நல மன்னனை நினைவுகூரும் விழாவாகும். மாவலி சக்கரவர்த்தி தனது கருணை, வள்ளல் தன்மை மற்றும் சமத்துவ ஆட்சியால் மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார்.
கைக்கொட்டிக் களி பாட்டு
மாவேலி தம்புரான் வாழுன்ன காலம்
மானுஷரெல்லாரும் ஒன்னுபோல…
ஆமோ அஹ்லாதேனாடெங்கும்
ஆபத்தொன்னுமில்லாதே வாழுன்ன காலம்…”
மாவலி சக்கரவர்த்தி ஆண்ட காலத்தில் மனிதர்கள் அனைவரும் சமமாக வாழ்ந்தார்கள். துன்பமோ நோயோ இல்லாமல் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த காலம் அது என்று ஒரு பாடல் சொல்கிறது.
மன்னனின் அதிகாரத்தைப் பறிக்க வேடமிட்டு வந்தவர், அவரிடமிருந்த செல்வம், ஆளும் நிலம் அனைத்தையும் கொடையாகப் பெற்றார். இறுதியில், உயிர்க் கொடை என்ற பெயரில் மன்னனை மண்ணுக்குள் புதைத்து வீழ்த்தியதாக இந்நாட்டுப்புறப் பாடல்கள் விவரிக்கின்றன.
ஆளுகையை இழந்து மறைந்த மன்னன், ஆண்டுக்கு ஒருமுறை தனது மக்களைக் காண மீண்டும் வருவதாகக் கருதியே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
புராணக் கதையாடலும் மூடநம்பிக்கை விமர்சனமும்
திராவிடச் சமூக மன்னர்களின் கொடைத் தன்மையையும் சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டதையும் மறைக்கவே பல புராணக் கதைகள் கட்டமைக்கப்பட்டன. அதில் மாவலிச் சக்கரவர்த்தி கதையும் ஒன்று ஆகும்
மூன்று அடி நிலம் கேட்டதாகக் கூறி, மகாவிஷ்ணுவின் வாமன அவதாரக் கதையாடலாக இதை மாற்றி, மக்கள் மத்தியில் ஒரு மூடநம்பிக்கையை விதைக்கும் நம்பிக்கை கதையாக இது நிலை நிறுத்தப்பட்டது என்ற விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.
உண்மை என்னவென்றால், கேரள மக்கள் இந்த மூடநம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் குள்ளப் பார்ப்பானைக் கும்பிடாமல் மாவலி மன்னரை மட்டும் கொண்டாடுகின்றனர். நாட்டின் பிற பகுதிகளைப் கேரள அவதாரக் கதை நாயகனை சேரல மக்களைக் கொண்டாட்டவைக்க முடியவில்லை
ஒரு மக்கள் நல மன்னனின் வீழ்ச்சி, தெய்வத்தின் அவதார லீலையாக புராணமயமாக்கப்பட்டு, அதன் பின்னால் இருந்த அரசியல் சூழ்ச்சி மறைக்கப்பட்டது.
அடக்கு முறைக்கு எதிரான ‘வாம(ன)ன்’ என்ற சொல்லாடல்
தமிழ்நாட்டில் ‘பார்ப்பனர்’ என்ற சொல் பயன்படுத்தப் படுவதைப் போல, மகாராட்டிராவிலும் மத்திய/மேற்கு இந்தியாவிலும் ஒரு குறிப்பிட்ட சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஒடுக்குமுறை மற்றும் சூழ்ச்சியின் குறியீடாக ‘வாமன்’ என்ற சொல்லை ஜோதிபா புலே தனது எழுத்துகளில் பரவலாகப் பயன்படுத்தினார்.
புலேவின் நூல்கள் பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டபோது, ‘வாமன்’ என்ற சொல் நேரடி அர்த்தச் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டு ‘பிராமன்’ என மாற்றப்பட்டதன் மூலம், அச்சொல்லுக்குப் பின்னிருந்த வரலாற்றுப் பின்னணியும் விமர்சன வீச்சும் குறைக்கப்பட்டன.
‘ஓணம்’ என்பது வெறும் சமயச் சடங்கு சார்ந்த பண்டிகை மட்டுமல்ல; அது ஆரிய-திராவிட பண்பாட்டு மோதல், மன்னராட்சி அதிகாரம் பறிக்கப்பட்ட வரலாறு மற்றும் சமூக நீதி சார்ந்த விவாதங்களை உள்ளடக்கிய ஒரு பண்பாட்டு அடையாளமாகும். புராணப் பூச்சுகளைத் தாண்டி, மக்களின் மன்னனான மாவலியின் சமத்துவ ஆட்சியையும், அதிகார சூழ்ச்சிகளையும் வெளிக்கொணர்வதே உண்மையான சமூக நீதிப் பார்வையாகும்.
மாவலியைப் போற்றிக் கொண்டாடப்படும் ஓணம் திருநாளை ‘வாமன ஜெயந்தி’ என்னும் பெயரில் விஷ்ணுவைக் கொண்டாட வேண்டும் என்று சில ஆண்டுகளுக்குமுன் அமித்ஷா கூறியபோது ஒட்டு மொத்த மலையாளிகளும் எதிர்த்துக் கொந்தளித்தது மிக முக்கியமான வரலாறாகும்!
– பாணன்
