சென்னை, ஆக. 26- ‘கருநாடக மாநிலத்தில் வனத்துறையினரால் சித்ரவதை செய்து சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிதி மற்றும் சட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று (25.8.2026) நேரமில்லா நேரத்தில் அவர் பேசியதாவது:
கருநாடக மாநிலம், ஹனூர் அருகே அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்கள் அம்மாநில வனத் துறையால் கடந்த 15ஆம் தேதி அதிகாலை சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களின் உடற்கூராய்வு அறிக்கை இன்று வெளிவந் துள்ளது. அதில் மூன்று பேருமே சித்ரவதை செய்யப்பட்டு, மிக அருகில் நிற்கவைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
உடல் முழுக்க படுகாயங்கள் உள்ளன என்றும், விலா எலும்பு முறிக்கப்பட்டுள்ளது என்றும் உடற்கூராய்வு அறிக்கை தெளிவாகக் கூறுகிறது. இதுமுழுக்க முழுக்க ஒரு படுகொலை. இதற்கு எதிராக இந்த ஆட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
குறைந்தபட்சம் அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறதா? கடந்த வாரம் தென்மண்டல மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கருநாடக முதலமைச்சர் தமிழ்நாடு வந்தார்.
அப்போது நேரிலாவது தமிழ்நாடு அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதா? கருநாடக மாநில காவல்துறைக்கு பதிலாக ஒரு மேல்மட்ட நீதி விசாரணை செய்ய தமிழ்நாடு வலியுறுத்த வேண்டும் என்று ஏற்கெனவே இந்த அவையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
அதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப் பட்டதா? இந்தப் பிரச்சினை நடந்த உடனே முதலமைச்சரோ, அமைச்சர்களோ கருநாடகம் சென்று, அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து இருக்கவேண்டும்.
மூன்று தமிழர்களின் மரணத் துக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்கவேண்டும். அந்த குடும்பங்களுக்கு தேவையான நிதி உதவியும், சட்ட உதவியும் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் பேசிய பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், ‘இதற்கான உரிய பதிலை பெற்று சட்டத்துறை அமைச்சர் ஓரிரு நாளில் வழங்குவார்’ என்றார்.
