சென்னை, ஆக.25 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்ட மன்றத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு மற்றும் பணிப் பலன்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் இது தொடர்பான தனித் தீர்மானத்தைக் கொண்டுவந்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் தொழில் மட்டும் அல்ல. அது மனித வளத்தை உருவாக்கி சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் ஓர் உயரிய பொறுப்பாகும். மேலும், பாடத் திட்டங்களை மாணவர்களின் வயது மற்றும் புரிந்து கொள்ளும் திறனுக்கேற்ப எளிமையாகக் கற்பித்தல், அவர்களின் கற்றல் குறைபாடுகளைக் கண்ட றிந்து நிவர்த்தி செய்தல், அறிவோடு சேர்த்து நற்பண்புகள், சமூகப் பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை மாணவர்களிடம் வளர்த்தல், ஒவ்வொரு மாணவரிடமும் உள்ள தனித்துவமான திறன்களான விளையாட்டு, பேச்சு, எழுத்து, அறிவியல் ஆர்வம் ஆகிய வற்றைக் கண்டறிந்து அவற்றை ஊக்கப்படுத்து தல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய பணியாக உள்ளன.
டெட் தேர்ச்சி கட்டாயம்
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 23.08.2010 ஆம் நாளில் தேதியிட்ட அறி விக்கையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு உரிய தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வு – டெட் கட்டாயமாக்கப்பட்டது. ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக குறிப்பாக 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித இடையூறுமின்றி தங்களுடைய பணியை சிறப்பாக ஆற்றி வரும் நிலையில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், பணியில் இருக்கும் ஆசிரி யர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று 1.09.2025 ஆம் நாளிட்ட உரிமையியல் மேல்முறையீட்டு சிவில் அப்பீல் எண் 1405-2025, 1385-2025, 1386-2025 இல் உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவால் தமிழ்நாட்டில் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரத்து 701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பதவி உயர்வைப் பெற இயலும். தேர்ச்சி பெறவில்லை எனில் பணி இழப்புக்கும் ஆளாக நேரிடும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
டெட் தேர்வில் விலக்கு
மேலும், சீராய்வு மனுவின் மீதான 29.05.2026 ஆம் நாளிட்ட தீர்ப்பில் பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028–க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை தடையின்றி பணியாற்றி ஓய்வுபெறும் ஆசிரியர்களைத் தகுதித் தேர்வு எழுத வற்புறுத்து வது அவர்களது வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயலாகும்.
எனவே, இதனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, நீண்ட கால சேவை, வாழ்வாதாரம் மற்றும் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாடு பள்ளிகளில் 23.08.2010–க்கு முன்பாக அன்றைய விதிமுறைகள் மற்றும் நடைமுறையின்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்களின் நீண்ட கால பணி அனுபவம் மற்றும் பணிப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்திய பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.
அதிகாரப்பூர்வ அறிக்கை
இதற்கேற்ப இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 23 இல் உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு
23.08.2010–க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில், தேவையான சட்டப்பூர்வ ஏற்பாடுகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வாயிலாக இதுதொடர்பான தெளிவான மற்றும் ஒருமித்த அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலி யுறுத்துகிறது.
மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் நீண்ட காலமாக பணியாற்றி வரக்கூடிய ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட உரிய பணிப் பலன்கள் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசை பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று கூறினார்.
அரசின் தனித் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனையடுத்து அரசின் தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
