புதுச்சேரி, மே 3 புதுச்சேரி பள்ளி களில் பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு, ஹிந்தியைக் கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் உத்தரவு, அந்த மாநிலத் தில் அசாதாரணச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது!
அவசரகதி சி.பி.எஸ்.இ…
மும்மொழிக் கொள்கை!
புதுச்சேரியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க., முதலமைச்சர்ரரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பிடித்தது. அதே வேகத்தில் கல்வித்துறையைக் கேட்டுப் பெற்ற பா.ஜ.க., அசுர வேகத்தில் அரசுப் பள்ளிகள் அனைத்தையும் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றி உத்தரவிட்டது. அதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிவித்த எதிர்ப்புகளை, கண்டும் காணாமல் கடந்து சென்றது அரசு. அதன் தொடர்ச்சியாக, 2023-2024 கல்வியாண்டில் புதுச்சேரியில் 10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டதாக முதலமைச்சர் ரங்கசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
ஆனால், அதற்கும் முதலமைச்சர் ரங்கசாமியும், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயமும் எந்தவித எதிர்வினையையும் ஆற்றவில்லை. இந்த நிலையில்தான் தற்போது, `புதுச்சேரி சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 2026-2027 கல்வியாண்டில் மும்மொழிக் கல்வி அமல்படுத்தப்படும்’ என்று உத்தரவிட்டிருக்கிறது ஒன்றிய அரசின் இடைநிலைக் கல்வி வாரியம். அதன் மூலம் புதுச்சேரி பாடத் திட்டத்தில் விருப்பத் தேர்வாக இருக்கும் பிரெஞ்சு மொழி நிரந்தரமாக நீக்கப்பட்டு ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் கட்டாயம் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
