திருவனந்தபுரம், ஆக. 25 விண்வெளி ஆராய்ச்சியைத் தனியார்மயமாக்கி இஸ்ரோவின் பங்கை பாஜக வலுவிழக்கச் செய்ய முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியை தனியார்மயமாக்கும் திட்டம் பற்றிய செய்திகள் அண்மை யில் வெளியாகின. இது தொடர்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் பாஜகவைக் கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நமது நாட்டின் விண்வெளி ஆய்வுத் திட்டத்தில் இஸ்ரோவின் எதிர்காலப் பங்கு தொடர்பாக கடந்த சில நாள்களாக செய் திகள் வெளியாகி வருகின்றன.
விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், பிரம்ம பிரகாஷ், யு. ஆர். ராவ், ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் பல புகழ் பெற்ற விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களின் தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் காரணமாக கடந்த 60 ஆண்டுகளாக கவன மாகத் திட்டமிடப்பட்டு, கட்ட மைக்கப்பட்ட இஸ்ரோவின் திறன், ஆற்றல் மற்றும் அதன் தகுதியைக் கருத்தில் கொள்ளும்போது தற்போது வெளியாகும் செய்திகள் நியாயமான கவலைகளை எழுப்புகின்றன.
அணுசக்தியைப் போன்று விண்வெளித் திட்டத்திலும் மோடி அரசு தீவிரமான தனி யார்மயமாக்கல் கொள்கையைப் பின்பற்றுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதற்கான உந்துதல் பிரதமர் அலுவலகத்திடம் இருந்தே வருவதும் தெளிவாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ராக்கெட் உருவாக் குதல் மற்றும் உற்பத்தியில் இஸ்ரோவின் பங்கு வெகுவாகக் குறைக்கப்படவுள்ளது. அதே போல, இஸ்ரோவின் செயற்கைக்கோள் தொடர்பான சொத்துக்கள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. அது மட்டுமின்றி, இஸ்ரோவின் ரூ. 1,000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் அமையவுள்ள இரண்டாவது விண்வெளி ஏவுதளமும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் படவுள்ளது. இதுபோன்று மாறிவரும் சூழலில் வரலாற்றுச் சிறப்புமிக்க சிறீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தின் நிலைமை என்னவாகும் என்றே தெரியவில்லை.
இஸ்ரோ இந்தியாவை பலமுறை பெருமைப்படச் செய்துள்ளது. அந்தப் பெருமைகளில் பலமுறை பிரதமரும் முழுமையாகத் திளைத்துள்ளார். விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு நிச்சயமாக ஊக்கமும் ஆதரவும் அளிக்கவேண்டும். ஆனால், நீண்ட காலமாக தனியார் துறையுடன் பயன்சார்ந்த கூட்டணி வைத்திருந்த இஸ்ரோ ஏன் திடீரென வலிவிழக்கச் செய்யப்படவேண்டும்?
ஏற்கனவே, இதுபோன்ற மாற்றங்கள் வரவிருப்பதை உணர்ந்து 100 – 200 முக்கிய இஸ்ரோ வல்லுநர்கள் வேலையை விட்டு விலகி யுள்ளனனர்.
பிரதமரின் மீதான ஈர்ப்பால் கடந்த 2018-ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த இஸ்ரோவின் புகழ் பெற்ற முன்னாள் தலைவர் கூட இஸ்ரோவின் தனியார்மயமாக்கல் நடவ டிக்கை தொடர்பாக தனது சந்தேகங்களை எழுப்பியுள் ளாரே தவிர, தற்போதுள்ள மற்ற 5 புகழ்பெற்ற இஸ்ரோவின் தலைவர்கள் ஏன் இந்த முக்கியப் பிரச்சினை குறித்து குரல் எழுப்பவில்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
