ஊழல் என்பது வெறும் லஞ்சம் மட்டுமல்ல; தவறு நடந்தாலும் ஊழல்தான்!
முதலமைச்சருக்கே தெரியாமல், தலைமைச் செயலாளர் உத்தரவு போட்டிருக்கிறாரா?
நம்முடைய பிள்ளைகள் டாக்டர் ஆகக்கூடிய வாய்ப்பைத் தடுக்கக் கூடாது!
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்
சிவகங்கை, ஆக.23 ஊழல் என்பது வெறும் லஞ்சம் மட்டுமல்ல; தவறு நடந்தா லும் ஊழல்தான்! முதலமைச்சருக்கே தெரியாமல், தலைமைச் செயலாளர் உத்தரவு போட்டிருக்கிறாரா? நம்முடைய பிள்ளைகள் டாக்டர் ஆகக்கூடிய வாய்ப்பைத் தடுக்கக் கூடாது! அறிவுக்கும், நீட் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை; ஊழலுக்கும், நீட் தேர்வுக்கும் தான் உறவு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
நேற்று (22.8.2026) சிவகங்கையில், ‘‘எதிர்நீச்சலில் வென்றார் பெரியார் 80 ஆம் ஆண்டு விழா – திறந்த வெளி மாநாட்டில்’’ பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளவேண்டும்!
நூறாண்டு கண்ட தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கமான சுயமரியாதை இயக்கம், தமிழ்நாட்டில் பல ஊர்களில் இந்த நூறாண்டிலே பலத்த எதிர்ப்புகளை எல்லாம் சந்தித்து, வென்றிருக்கிறது. குறிப்பாக, அதை இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பயணம். ஓர் இயக்கத்தை, கொள்கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், அந்த இயக்கத்தினுடைய கொள்கைகள், இன்றைக்கு அரசுகளுடைய திட்டங்களாக வந்திருப்பது என்ப தெல்லாம், அந்த இயக்கத்திற்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும்.

அதை எல்லாம் விட, மக்கள் மத்தியில், அந்த இயக்கம் எவ்வளவு பெரிய எதிர்ப்புகளைச் சந்தித்து, எதிர்நீச்சல் அடித்து, நெருப்பாற்றில் நீந்தி, வெளியே வந்து வெற்றிகரமாக இருக்கிறது என்று சொல்லும்போது, அந்தக் கொள்கைகளுக்காகத் தியாகம் செய்தவர்கள் ஏராளமான பேர் உண்டு. அதே போலத்தான் அந்தக் கொள்கையும் வெற்றிகரமானது.
‘‘என்னுடைய கொள்கைகள் ஒருபோதும் தோற்காது’’ – தந்தை பெரியார்!
தந்தை பெரியார் சொன்னார், ‘‘என்னுடைய கொள்கைகள் ஒருபோதும் தோற்காது; என்னுடைய வெற்றி வேண்டுமானால், போராட்டங்கள் நடக்கும்போது, தாமதிக்கலாமே தவிர, தாமதித்து வருமே தவிர, அது ஒருபோதும் தோற்காது’’ என்று மிகுந்த தன்னம்பிக்கையோடு சொன்னார்கள். அதை இன்றைக்குப் பல நேரங்களிலே, பல செய்திகளிலே நாடு தெளிவாகக் கண்டு கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், குலக்கல்வித் திட்டம் என்று கொண்டு வந்து, நம்முடைய பிள்ளைகளுடைய படிப்பிலே ஆச்சாரியார் மண்ணைப் போட்டார்; பள்ளிக்கூடங்களை மூடினார். அதற்கு ஒரு பெரிய எதிர்ப்பு, தந்தை பெரியாரிடமிருந்துதான் வந்தது. அதில் மிகப்பெரிய அளவில் ஆச்சாரியார் பிடிவாதமாக இருந்தார்; அன்றைய காங்கிரஸ் அரசு. ஆனால், அந்த ஆட்சியே ஆச்சாரியாரை விட்டுப் போகக்கூடிய அளவிற்கு எதிர்ப்பு வந்தது. 1954 இல் காமராஜர் முதலமைச்சர் ஆக வேண்டிய ஓர் அவசியம் ஏற்பட்டது. காமராஜர், ஆச்சாரியார் மூடிய பள்ளிக்கூடங்களைத் திறந்தார்.குலக்கல்வி திட்டத்தை ஒழித்தார். அதுதான் அன்றைக்கு ஒரு திருப்பம்.
முக்கியமான நகரங்களில், திறந்தவெளி மாநாடுகளை நடத்திக் கொண்டு வருகிறோம்!
இன்று புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு எல்லாம் நம்மவர்கள் போயிருக்கிறார்கள். இன்றைக்குக் கணினி அதிகாரிகளாக, பெரிய பெரிய அதிகாரிகளாக வந்திருக்கிறார்கள் என்பது ஒரு திருப்பம். நீதிக்கட்சி, அதற்குப் பிறகு, திராவிட இயக்கம் அண்ணா தலை மையில், கலைஞருடைய தலைமையில், எம்ஜிஆர் அவர்கள் தலைமையில், பிறகு மு.க.ஸ்டாலின் தலை மையில் இப்படிபல திராவிட இயக்க ஆட்சிகள் வந்து, ஒரு பெரிய மாறுதல் வந்த சூழ்நிலை. இந்த இயக்கத்தின் சார்பில் வலிமையான போராட்டங்களும் நடந்து, சிறப்பான வெற்றிகளும் வந்திருக்கின்றன. ஆனால், எதிர்ப்புகளும் இருந்திருக்கின்றன. இவை எல்லாம் வரலாற்றுக் குறிப்புகள். இன்றைய இளைய தலைமுறைக்குத் தெரியாது. புதிய தலைமுறை மக்களுக்குப் புரியாது. அதை விளக்கிச் சொல்ல வேண்டும்; ஓர் இயக்கம் என்றால், அவர்கள் சந்திக்கக்கூடிய எதிர்ப்புகளைக் கண்டு யாரும் பின்வாங்கக் கூடாது, தெளிவு இருக்க வேண்டும். நடந்த சம்பவங்களை எடுத்துச் சொல்வதற்காக, இந்த மாதிரி சில முக்கியமான நகரங்களில், திறந்தவெளி மாநாடுகளை நடத்திக் கொண்டு வருகிறோம்.
திருநெல்வேலியில், பெரியாரை வரவேற்கக்கூட ஆள் இல்லை. அழைத்தவர்களே பயந்து கொண்டு போய்விட்டார்கள். ஆனால், அங்கே பேசி வெற்றி பெற்றார்.
அதேபோல ராஜபாளையத்தில் நிகழ்ச்சி; ராஜ பாளையத்தில், பெரியாரைத் தாக்கவேண்டும் என்ப தற்காக, திருக்கை மீ்ன் வால் முள்ளைக் கொண்டு அடிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அந்த இடத்திலே மாலையில் யாரும் கூட்டம் போட முடியாது என்று சொல்லக்கூடிய எதிர்ப்பு இருந்தது. இன்றைக்குப் பெரியாருக்கு, அவரது கருத்துகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து, எங்களிடம் 35 லட்ச ரூபாய் பெரியார் உலகத்திற்கு நன்கொடை கொடுக்கிறார்கள். ஒரு பெரிய மாறுதல், மக்கள் மத்தியிலே.
பெரியார் இல்லை என்றால், நம்முடைய பிள்ளைகள் படித்திருக்கமாட்டார்கள். அவர் கடவுள் நம்பிக்கையாளர்களாக இருக்கலாம்; புராண நம்பிக்கையாளர்களாக, சம்பிரதாயம், சடங்குகள் நடத்தக்கூடியவர்களாக இருக்கலாம். ஆனாலும், தந்தை பெரியார் என்று வரும்போது, ஒரு பொது மனிதர் என்று நினைக்கக்கூடிய சமூகம் இருக்கிறது. அந்த உணர்வுகள், அதையெல்லாம் மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற திறந்தவெளி மாநாடுகளை நடத்துகிறோம்.
பெரியாரும், பானகல் அரசரும்,
நீதிக்கட்சியும் மாற்றினார்கள்!
ஆனால், தொடர்ந்து தொல்லைகள் இருக்கும். ஏனென்றால், மனுதர்ம ஆட்சி நடக்கிறது – இன்றைய ஆட்சி மனுதர்ம ஆட்சி. அதனுடைய விளைவுதான் நீட் தேர்வு. முன்பு டாக்டருக்குப் படிக்க வேண்டும் என்று சொன்னால், சமஸ்கிருதம் படித்திருக்கவேண்டும் என்று சொன்ன நிலை இருந்தது. அதை பெரியாரும், பானகல் அரசரும், நீதிக்கட்சியும் மாற்றினார்கள்.
தேர்வுகள் நடத்த யாருக்கு உரிமை இல்லையோ, அவர்கள் தேர்வு நடத்துகிறார்கள்!
இன்றைக்கு அது வேறு ரூபத்தில், நீட் தேர்வு என்ற பெயரில் வந்திருக்கிறது. அதே மாதிரி நீட் மட்டுமல்ல, ஒன்று வந்த உடனே க்யூட் தேர்வு என்று வந்தது. பிறகு ‘நெக்ஸ்ட்’ தேர்வு என்று வந்தது. பள்ளிக் கல்வித் துறையின்மூலம் தேர்வு நடத்தாமல், யாரோ நடத்தக்கூடிய அளவுக்கு இருக்கிறது. தேர்வுகள் நடத்த யாருக்கு உரிமை இல்லையோ, அவர்கள் தேர்வு நடத்து கிறார்கள். யார் உரிமையோடு பள்ளிக்கூடத்தில், பல்கலை கழகத்தில் தேர்வு நடத்த வேண்டுமோ, அவர்களுக்கு அந்த வாய்ப்பு வெறும் சம்பிரதாயத் தேர்வாக இருக்கிறது. இடையிலே வந்து மிகப்பெரிய அளவுக்கு பன்னாட்டு அமைப்புகள் உள்ள புகுந்து கொண்டு, பல லட்சக்கணக்கான ரூபாய்களை வாங்கிக்கொண்டு, நாங்கள் உங்களுக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு வந்து, எங்கேயோ போய்விட்டது. இதனால், ஏழை எளியோர் வர முடியவில்லை; ஒடுக்கப்பட்டவர்கள் வர முடியவில்லை.
நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்த இயக்கம், திராவிடர் கழகம்தான்!
ஆகவேதான், நீட் தேர்வு எதிர்ப்பு என்பதற்காக மீண்டும் பிரச்சாரம். முதன் முதலில், இந்தியாவிலே நீட் தேர்வை எதிர்த்த ஒரே இயக்கம், திராவிடர் கழ கம்தான். முதலில் இது மற்றவர்களுக்குப் புரியவில்லை. நம்மவர்களில் கூட பல பேர், படித்தவர்கள் கூட, எந்த மக்கள் பாதிக்கப்படுகின்ற மக்களோ அந்த சமுதாயத்தில இருந்து என்ன சொன்னார்கள்? ‘‘ஏங்க, நீட் தேர்வு நல்லதுதானே; அவர்கள் தகுதி திறமையைப் பார்த்து தானே வருகிறார்கள். அரசியல்வாதிகள் தலையிட்டு வருவதில்லையே’’ என்று சொன்னார்கள். ஆனால், இன்றைக்கு ஊழலுக்கு அதுதான் ஊற்றுக்கண். இதை நாம் சொல்லவில்லை, உச்சநீதிமன்றம் வரையில் போயாயிற்று. இருந்தாலும் வீண் பிடிவாதம்; அதாவது ‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’’ என்று சொல்கிற மாதிரி, ஒரு முதலைப் பிடிவாதத்தோடு, வெறும் வறட்டுக் கவுரவத்திற்காக, எவ்வளவு ஊழல் நடந்தாலும், நீட் தேர்வு இருக்கும் என்று சொல்லி, இதுவரையில், 120 பிள்ளைகளுக்கு மேல், தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதில், இளம் பிள்ளைகள் – டாக்டர் ஆகவேண்டும் என்கிற கனவோடு இருந்தவர்கள். அவர்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. மனம் நொந்து போயிருக்கின்ற நேரத்தில், ஒன்றிய அமைச்சரை மாற்றினால் மட்டும் போதாது; மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள் வடக்கே இருக்கிற கரப்பான்பூச்சி கட்சியினர்.
ஆனால், அதைவிட ஆழமானது என்னவென்றால், அமைச்சர் மாற்றம் அல்ல; நீட் தேர்வு இருக்கக்கூடாது. இந்த அமைச்சர் போய், இன்னொரு அமைச்சர் வந்து, அதையே செய்யப் போகிறார். அதே கொள்கை, அதே ஆட்சிதான் இருக்கிறது. மோடி ஆட்சிதான் இருக்கிறது; ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான் இருக்கிறது. மனுதர்மத்தில், ‘‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்க கூடாது.’’ ஒடுக்கப்பட்ட மக்களுக்கு – அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில்
நான்கு நாள்கள் பிரச்சாரம்!
ஆகவேதான், இந்தப் பிரச்சாரம் என்பது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தை தமிழ்நாடு, புதுச்சேரியில் செய்யவிருக்கிறோம். திரு நெல்வேலி முதல் திருத்தணி வரை நடைபெற விருக்கிறது. சென்னை போன்ற எல்லா இடங்களிலேயும் நடைபெறுகிறது. இன்றையிலிருந்து நான்கு நாள்கள், ஆறு குழுக்கள் இப்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.
இது முதன் முறை இல்லை. அ.தி.மு.க. அரசாங்கத்தில், பிரச்சாரம் நடத்தி இருக்கிறோம். தி.மு.க. ஆட்சியிலும் இடையறாது மக்கள் மத்தியில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு செய்தி என்னவென்றால், இவ்வளவு நாள்களாகப் போராடிக் கொண்டிருக்கிறீர்களே, நீங்கள் தோல்விதானே அடைந்திருக்கிறீர்கள், வெற்றி அடையவில்லையே என்று.
உங்களில் ஒரு சில பேருக்கு சந்தேகம் இருக்கலாம். ஆனால், நாங்கள் எப்பொழுதும் வெற்றி கிட்டும் வரை விடமாட்டோம்.
21 ஆண்டுகள் போராடி, எம்.ஜி.ஆர். கொண்டு வந்த நுழைவுத் தேர்வை ஒழித்தோம்!
நுழைவுத் தேர்வை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். அதன் மூலமாகத்தான் மருத்துவப் படிப்பு இடங்க ளுக்கான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று. அதிலேயும் தவறு நடக்க ஆரம்பித்தது. அப்படியானால், நுழைவுத் தேர்வு கூடாது; எளிய மக்கள் வர முடியாது என்பதை எடுத்துச் சொல்லி, 21 ஆண்டுகள் தொடர்ந்து போராடினோம். கலைஞர் ஆட்சிக்கு வந்த உடனே, அந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் என்பது மட்டுமல்ல, ஏழை எளிய மக்கள் படிக்கக்கூடிய அளவுக்கு வந்தது. அதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து ஆவன செய்தார். அந்தக் கமிட்டியின் மூலமாக, நிறைய பேர் மருத்துவப் படிப்புப் படித்து டாக்டர் ஆனார்கள். அவர்கள்தான், இன்றைக்கு வெளிநாடுகளில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் யாரும், நீட் தேர்வு எழுதியவர்கள் அல்ல.
அறிவுக்கும், நீட் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை; ஊழலுக்கும், நீட் தேர்வுக்கும் தான் உறவு!
இன்னுங்கேட்டால், பிரதமராக இருக்கிறவருக்கு வைத்தியம் பார்க்கிறவர், நீட் தேர்வு எழுதி, தேர்வானவர் அல்ல. அதேபோன்று, குடியரசுத் தலைவருக்கு வைத்தியம் பார்க்கிறவர், நீட் தேர்வு எழுதி, தேர்வானவர் அல்ல. அதனால், நீட் தேர்வு எழுதியவர்கள்தான் திறமை சாலி, மற்றவர்கள் எல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் என்பது கிடையாது. அமெரிக்காவில், லண்டனில் மற்றும் வெளிநாடுகளில் டாக்டர்களாக இருப்பவர்கள் எல்லாம் நீட் தேர்வு எழுதாதவர்கள்தான். நீட் தேர்வு எழுதாதவர்கள்தான் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். அதனால், அறிவுக்கும், நீட் தேர்வுக்கும் சம்பந்தம் இல்லை; ஊழலுக்கும், நீட் தேர்வுக்கும் தான் உறவு.
ஆகவேதான், இவற்றையெல்லாம் விளக்கிச் சொல்வ தற்காகத்தான் மாலையில் கூட்டம் நடைபெறுகிறது.
220 இடங்களில் பரப்புரை நடைபெறவிருக்கிறது!
மொத்தம் ஆறு குழுக்கள், இருசக்கர வாகன குழுக்கள். அதில், 220 இடங்களில் பரப்புரை நடைபெறவிருக்கிறது. கிராமம், நகரத்தில் உள்ள மக்கள் மத்தியில், விழிப்புணர்வு வர வேண்டும். பெற்றோர்கள், மணவர்கள் நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பிரச்சாரம்.
ஒரு குழுவில் 20 இரு சக்கர வாகனங்கள். 40 பேர் பயணம் செய்கிறார்கள். மதுரை, திருமங்கலத்தில் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தை காலையில் தொடங்கி வைத்துவிட்டுதான் இங்கே வந்திருக்கிறேன். ஊடகங்களில் இருக்கிற செய்தியாளர் நண்பர்கள் நீங்கள், உங்களுக்கெல்லாம் தெரியும். இந்தப் பிரச்சாரத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. இந்த அரசாங்கமும் நீட் தேர்வை ஒழிக்கவேண்டும் என்று தீர்மானமும் போட்டிருக்கிறது. அரசுக்கு ஆதரவாக, துணையாகத்தான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறோம். அதற்காக எங்களுக்கு மாலை போட்டு உற்சாகப்படுத்த வேண்டும். அதற்குப் பதிலாக, நரி வலப்பக்கம் போனால் என்ன? இடப்பக்கம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்பது போன்று, தேவையில்லாத காரணங்களைச் சொல்லி, அந்தப் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்தார்கள்.
எங்களால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது. பொது மக்களுக்கு அசவுரிகயம் உண்டாகாது. பொதுச் சொத்துக்கு நாசம் வராது; பொது அமைதிக்குப் பங்கம் வராது; பெரியார் சொல்வார், ‘‘போராட்டம் என்றால், அப்படித்தான் நடத்த வேண்டும்’’ என்று சொல்லுவார். எங்களுடைய தலைவர் வழிகாட்டியது அப்படித்தான்.
இன்றைக்கு அவர்களுடைய பாதுகாப்போடு பிரச்சாரம் நடக்கிறது!
ஆகவே, அதனுடைய அடிப்படையில், உயர்நீதிமன்றத்துக்குப் போனோம். பேச்சுரிமைக்கு, கருத்துரிமைக்கு நீதிமன்றத்திேலயே உத்தரவு கொடுத்தார்கள். அதுவரையில், காத்திருந்தோம்; அதே அரசாங்கம், அனுமதி மறுத்த அதே காவல்துறை, அனுமதி கொடுத்த பிற்பாடு இன்றைக்கு அவர்களுடைய பாதுகாப்போடு பிரச்சாரம் நடக்கிறது.
இன்றைக்கு ஆறு குழுக்கள் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. முதல் குழு சென்னையிலிருந்து – தாம்பரம் வரை; இரண்டாவது குழு திருவண்ணாமலையிலிருந்து – ஆத்தூர் வரை; மூன்றாவது குழு திருப்பூர் முதல் கோபிசெட்டிபாளையம் வரை; நான்காவது குழு திண்டிவனம் முதல் புதுச்சேரி வரை; அய்ந்தாம் குழு மன்னார்குடி முதல் பட்டுக்கோட்டை கிராம பகுதிகள்வரை; ஆறாவது குழு மதுரை திருமங்கலம் முதல் தென்காசி வரை.
நம்முடைய பிள்ளைகள் டாக்டர் ஆகக்கூடிய வாய்ப்பைத் தடுக்கக் கூடாது!
ஆகவே, எல்லா பகுதிகளிலும் விழிப்புணர்வு வரவேண்டும். இந்தக் கொடுமைகள் மக்களுடைய உணர்வுகளை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான். இதில் வீண் பிடிவாதம் பிடித்து, நம்முடைய பிள்ளைகள் டாக்டர் ஆகக்கூடிய வாய்ப்பைத் தடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பிரச்சாரப் பயணம்.
நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் சம்பாதிக்கிறவர்கள் ஏழைகளாம்!
அதே மாதிரி EWS என்று சொல்லி, 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுத்திருக்கிறார்கள். 3 சதவிகிதமாக உள்ளவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கொடுக்கிறார்கள். அவர்களுக்குப் பணத்தை ஒதுக்கிக் கொடுக்கிறார்கள். அவர்கள் யார் என்றால், உயர்ஜாதி ஏழைகள்? ஏழைகளில், உயர்ஜாதி ஏழைகளாம். ஏழைகள் எல்லாருக்கும் உதவி செய்தால், நியாயம். அதை விட்டுட்டு, உயர்ஜாதி ஏழைகள் என்றால் என்ன அர்த்தம்? அந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு இவர்களுக்கு கணக்கு என்னவென்றால், நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் சம்பாதிக்கிறவர்கள், ஒன்றிய அரசு, மோடி அரசு கீழ் ஏழைகள். அதே நேரத்தில், 5 லட்சம் ரூபாய் வருமானம் வந்தால்கூட வருமான வரித் துறை வரி போடுகிறது. அதே நேரத்தில், மகாத்மா காந்தி திட்டத்தை பெயர் மாற்றினார்கள். வி.பி.ஜி. ராம்ஜி திட்டம் என்று. அந்தத் திட்டத்தில், ஒரு நாளைக்கு 100 ரூபாய். ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்றால், 150 ரூபாய் கொடுப்போம் என்று சொன்னார்கள், அப்பொழுதும் அதற்கு ஆள்கள் வரவில்லை. அந்தக் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் கூட எவ்வளவு வருகிறது? ஆனால், ஒரு நாளைக்கு 2500 ரூபாய் வருமானம் வாங்குகிறவர்களை ஏழைகள் என்று சொல்லி, நமக்கு வரவேண்டிய இட ஒதுக்கீடு பங்கை உயர் ஜாதிக்குத் திருப்பி விடுகிறார்கள். மடை மாற்றம், வேறு ஒன்றுமே இல்லை. இதெல்லாம் தடுக்கவேண்டும்; மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும், இதைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் மாலையில் நடைபெறுகின்ற கூட்டம்.
முதலமைச்சருக்கே தெரியாமல், தலைமைச் செயலாளர் உத்தரவு போட்டிருக்கிறாரா?
செய்தியாளர்: தமிழக வெற்றிக்கழக ஆட்சி 100 நாளைக் கடந்துவிட்டதே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: ஆட்சி 100 நாளைக் கடந்தி ருக்கிறது என்பது நாள் கணக்குத்தான். ஆனால், இதில், தெளிவாக, முரண்பாடு இல்லாமல், நீதிமன்றங்களுக்கு வழக்குப் போனாலும், ஆதரிக்கக்கூடிய அளவுக்கு எத்தனை திட்டங்கள் நடந்திருக்கிறது? அதே மாதிரி சட்டமன்றத்தை எடுத்துக்கொண்டால், ஆளுங்கட்சி யைச் சேர்ந்தவர்கள் பேசக்கூடியதைத்தான் அதிகமாக நீக்குகிறார், பேரவைத் தலைவர். அது ஒன்றே போதும்; அனுபவம் இல்லாதது காரணமாக இருக்கலாம். அது தவறில்லை. ஆனால், அனுபவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறோம். குறிப்பிட்ட சில கட்சிகளுடைய ஆதரவைப் பெற்றுதான் – இடதுசாரிகள், மற்றவர்களின் ஆதரவைப் பெற்றுத்தான் இந்த த.வெ.க. ஆட்சி அமைந்திருக்கிறது. முழு பெரும்பான்மை பெறவில்லை. 108 இடங்கள்தான் அவர்களுக்கு. ஆகவே, பல கட்சியினர் ஆட்சி அமைவதற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.
தீட்டிய மரத்திலேயே, கூர் பார்ப்பது என்பது மாதிரி, கூட்டணிக் கட்சிக்காரர்களுடைய மாணவர்கள் போராட்டமா? யார் யார் இருக்கிறார்கள், பட்டியல் எடுங்கள்? என்று ஒரு சுற்றறிக்கை வந்து, அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு வந்தவுடன், ‘‘சும்மா இருக்கின்ற சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். ஆண்டி ஊதிக் கெடுக்கவில்லை; இப்பொழுது அரசு ஊதிக் கெடுக்கிறது.
பெரிய அளவில் எதிர்ப்பு வந்ததும், அதை நிறுத்தினார்கள். இப்பொழுது அதற்கு யார் காரணம் என்று சொன்னால், அரசுதானே முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்.
ஆனால், தலைமைச் செயலாளரை நீக்குங்கள் என்று போராட்டம் நடத்தக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. தலைமைச் செயலாளர் உத்தரவு போட்டால், முதலமைச்சருக்கு பொறுப்பு இல்லையா? முதல மைச்சருக்கே தெரியாமல், தலைமைச் செயலாளர் உத்தரவு போட்டிருக்கிறாரா? அப்படிப்பட்ட ஓர் அரசு எப்படி நடக்க முடியும்? இந்த மாதிரி குழப்பங்கள் பொதுவாக இருக்கிறவர்களுக்கு ஏற்படத்தானே செய்யும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இதை நான் சொல்கிறேன்.
ஆக்க ரீதியான மாற்றமாக இருக்க வேண்டுமே தவிர, அது ஏமாற்றமாக ஆகிவிடக்கூடாது!
ஆகவே, ஆட்சி ஆட்சியாக நடக்கட்டும், வெறும் காட்சியாக அது இருக்கக்கூடாது. மாற்றம் மாற்றம் என்று சொன்னார்கள். மக்களும், மாற்றத்திற்காகத்தான் ஓட்டுப் போட்டிருக்கிறார்கள். அதை வரவேற்கிறோம். ஜனநாயகத்தில், மக்களுடைய தீர்ப்பை அலட்சி யப்படுத்தக் கூடாது. ஆனால், அந்த மாற்றம் உண்மையாகவே ஆக்க ரீதியான மாற்றமாக இருக்க வேண்டுமே தவிர, அது ஏமாற்றமாக ஆகிவிடக்கூடாது. இதுதான் எஞ்சிய நாள்களுக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேர்தலை விட தலைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிற திராவிடர் கழகத்தினுடைய தெளிவான கருத்து.
ஊழல் என்பது வெறும் லஞ்சம் மட்டுமல்ல;
தவறு நடந்தாலும் ஊழல்தான்!
செய்தியாளர்: த.வெ.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு ஊழல் குறைந்திருக்கிறது என்று மக்கள் எல்லாம் பேசிக் கொள்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: ஊழல் குறைந்தால் நல்லதுதான். ஆனால், அதே நேரத்தில், இந்த ஊழலுக்கு அடித்தள மானதெல்லாம் தேர்தல் முறை. இந்தத் தேர்தல் முறையையே மாற்றி அமைக்க வேண்டும். ஊழல் குறைந்திருக்கிறது என்றால், வரவேற்க வேண்டும்தான். எந்த ஆட்சியாக இருந்தாலும். ஆனால், எது ஊழல்? எந்த அளவுக்கு வந்திருக்கிறது? என்பது போகப் போகத்தான் தெரியும்.
ஒரு சாரார், இப்படிச் சொல்கிறார்கள். இன்னொரு சாரார் அதிகமான அளவுக்குச் சங்கடங்கள் பெருகி யுள்ளது என்கிறார்கள். ஊழல் இல்லாத ஆட்சி வர வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கருத்தும். ஆகவே, அது முழுமையாக நடந்தால் சரி. ஆனால், அரசாங்கத்துக்குள்ளயே யார் முடிவெடுக்கிறார்கள் யார் அறிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஊழல் என்பது வெறும் லஞ்சம் மட்டுமல்ல; தவறு நடந்தாலும் ஊழல்தான்
தமிழ்நாடு என்று சொன்னால்,
அதற்குத் தனி மரியாதை உண்டு!
செய்தியாளர்: சட்டமன்றத்தில் மக்களுக்கானக் கருத்துப்பற்றிப் பேச வேண்டும். ஆனால், அங்கே பாடல் பாடுவதும், ஒருவர் மாற்றி, ஒருவர் மீது குறை சொல்வதிலேயே இருக்கிறார்களே, இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: பொதுவாக சட்டமன்றம் என்பது, சட்டங்கள் இயற்றுவதற்கும், மக்களுக்கான ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் உரியதாக இருக்கவேண்டும். ஒன்றே ஒன்று சொல்கிறேன், எதிர்க்கட்சியான தி.மு.க.வின் தலைவராக இருக்கின்ற மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘‘ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி யாக இருப்போம்’’ என்று சொன்னார். அதே மாதிரி முதலமைச்சரும் என்ன சொன்னார், ‘‘ஆக்கப்பூர்வமான ஆட்சியைத் தருவோம்’’ என்றார். எனவே, இரண்டு பேரும், அதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.
இப்பொழுது பேரவைத் தலைவருக்கு வேலையே, சட்டமன்றத்தில் பேசுவதை நீக்குவது, நீக்குவது என்பதுதான். அந்த நீக்கத்தினுடைய நோக்கம் இப்பொழுது நிறைவேறாது. அதில், ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால், நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முன்பெல்லாம் நேரடி ஒளிபரப்பு கிடையாது; பேசுவதை நீக்கினால், அதில் உள்ளபடியே பலன் ஆட்சியாளர்களுக்கு இருக்கும். இப்பொழுது அப்படி இல்லை, உடனே, சமூக தளத்தில் அவையெல்லாம் பதிவு செய்யப்படுகிறது.
பேரவைத் தலைவர் நீக்கியது என்று எதுவுமே எடுபடாத அளவுக்கு இருக்கிறது. சமூக வலைதளங்கள் வந்த உடனே, தொலைக்காட்சிகள் செய்தியே பழசாகப் போய்விடுகிறது. நாம் ஒன்றை எழுதி, பேசி, நாளைக்கு வரப்போகிறது. ஆனால், அய்ந்து நிமிடத்திற்குள் சமூக வலைதளத்திற்குக் கொடுத்துவிடுகிறர்கள்.
எனவேதான், எச்சரிக்கையோடு இருசாராரும் இருக்க வேண்டும் என்பதுதான் பொதுவாக இருக்கிற என்னுடைய கருத்து. ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் செய்யட்டும். மக்கள் நல்வாழ்வையும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கிற உரிமையும் இருக்க வேண்டும். பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்றாலும், அந்தக் கண்ணியம் குறையாமல் இருக்க வேண்டும். தமிழ்நாடு என்று சொன்னால், அதற்குத் தனி மரியாதை உண்டு. அந்தப் பாரம்பரியத்தை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும்.
தனிப்பட்ட தாக்குதல்கள் அல்லது குடும்பப் பிரச்சினைகள் அல்லது மகளிரைக் கொண்டு வந்து முன்னிறுத்திப் பேசுவது, இவை போன்று யார் செய்தாலும், அவை ஏற்புடையது அல்ல!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
