எதிர்காலச் சமுதாயத்தின் மேலோங்கிச் சிறந்த வாழ்க்கை முறைகளுக்குப் பெரிதும் அடிப்படையானது கல்வி கற்றலே ஆகும். அந்தக் கல்வியைத் தெளிந்த நீரோடையின் சலனமற்றப் பயணம் போன்று மாணவர்களுக்குத் தரவேண்டியது உரிய வழிகளைக் கையாளும் அதிகாரம்மிக்க அரசாங்கத்தின் பொறுப்பும் ஆகும்.
ஆனால், நடைமுறையில் ஒன்றிய அரசு அத்தகைய பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுகின்றதா என்றால் – இல்லை என்பதே இன்றைய கல்வி முறையில் நிகழ்ந்து வருகின்ற அத்தனைக் குறைபாடுகளுக்கும் உரிய காரணமாகும்.
விளைவு எத்தகையது?
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையா? இதுபோன்ற தேர்வுகள் இந்தியா முழுவதிலும் கணக்கிலடங்கா மாணவர்களின் உயிரைப் போக்கிக் கொல்லுகின்ற அவல நிலையை மொத்த விளைவாகத் தருவதுதான் கொடுமையிலும் கொடுமை!
தமிழ்நாட்டில் முன்பு அமலில் இருந்தது போல 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்வி போன்ற உயர்கல்விச் சேர்க்கையை நடத்தினால் என்ன?
கூடுதல் சுமையை ஏற்படுத்துகின்ற நுழைவுத் தேர்வுகளைத் திணித்து மாணவர்களின் திறமையை வளர்க்கின்றோம் என்று உயர் ஜாதிக்காரர்களின், பணக்காரர்களின் கைப்பாவை போன்று செயல்பட்டு, பெரும்பான்மை மாணவர்களின் எதிர்காலத்தை திட்டமிட்டுப் பாழ்படுத்துவது ஒன்றிய அரசாங்கத்தின் அணுகுமுறையாக இருப்பதா?
விமர்சனத்திற்குள்ளானது
இந்திய நாட்டின் 80ஆவது ஆண்டு சுதந்திர நாள் உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டது என்ன? “போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கின்ற தனியார் பயிற்சி மய்யங்களின் நிதிச் சுமையைக் குறைப்பதற்கு, அந்தத் தேர்வுகளுக்கு இணைய வழி (ON-LINE) இலவசப் பயிற்சி ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்படும்” என்கின்ற மோடியின் அறிவிப்புச் சரியானதா? இந்த அறிவிப்பு தீவிர விமர்சனங்களை எழுப்பியுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டாமா?
மருத்துவக் கல்வி உள்பட உயர் கல்வியின் மீதுள்ள பேரார்வத்தில் மாணவர்களும், அவர்தம் பெற்றோர்களும் தனியார் பயிற்சி மய்யங்களை நாடிச் சென்று கோடி கோடிப் பணத்தைக் கொட்டி அழுகின்றனர். அத்தகையத் தனியார் பயிற்சி மய்யங்களின் சுமையைக் குறைக்கப் போகின்றேன் என்று ஒரு பிரதமர் அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயமானது!
சிரிப்பாய்ச் சிரிக்கின்ற நிலை!
பண வேட்டைக்காரர்களின் குழுமமாக இந்தப் பயிற்சி மய்யங்கள் கோலோச்சுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பிரதமர் மோடியின் கண்களுக்கு மட்டும் இது தெரியாமல் போவது விசித்திரமே!
உயர்கல்வித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு உள்பட பல சீர்கேடுகளுக்கும் இந்தத் தனியார் பயிற்சி மய்யங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் பெரும் காரணகர்த்தாக்கள் என்பது உச்சநீதிமன்றம் வரை சென்று சிரிப்பாய்ச் சிரிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதே – சிந்திப்பாரா – பிரதமர் மோடி!
இவை சம்பந்தப்பட்ட குற்றங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புடையவர்களின் அசையும், அசையா சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கும், வினாத்தாள் கசிவு குற்றங்களுக்குக் கடும் தண்டனைகள் வழங்குவதற்கும் எவ்விதத் தடையும் இருக்காது எனவும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை அமைந்துள்ளதே – இதுவே இத்தேர்வுகளின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளதே!
பள்ளிகளில் கற்பித்தல் தரம் சீராக இல்லாததும், பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாத சூழலுமே தனியார் பயிற்சி மய்யங்கள் (Coaching Centers) பெருகுவதற்கு முக்கியக் காரணம் அல்லவா?
குறிப்பாக, உயர் கல்விக்கான போட்டித் தேர்வர்களின் பெயரால் நடக்கின்ற தனியார் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை பிள்ளைகளின் உயர்கல்விக்கு விருப்பப்படுகின்ற பெற்றோர்களை – ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைப் பெரிதும் பாதிக்கின்றதே!
நுனிக்கிளையில் நீரூற்றுவதா?
பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தி, கற்றல் முறையைச் சீர்படுத்தினாலே போதுமானது. இதன்படி மாணவர்களால் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
அதை விடுத்து அரசு சார்பில் தனியாக இணைய வழிப் பயிற்சி அளிப்பது என்பது அத்தியாவசியப் பிரச்சினையை விடுத்து மாற்று வழியைத் தேடும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது. அடித்தளத்தை விட்டுவிட்டு நுனிக்கிளையில் நீரூற்றுவதா?
ஒன்றிய அரசு அறிவித்துள்ள இந்த இணைய வழிப் பயிற்சி மய்யங்களை எந்தத் தனியார் நிறுவனங்கள் இயக்கப் போகின்றன? அதில் வெளிப்படைத் தன்மை இருக்குமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
நிரந்தரத் தீர்வாகுமா?
அடிப்படைக் கல்வி முறையைச் சீரமைக்காமல் இணைய வழிப் பயிற்சிகளை மட்டும் அறிமுகப்படுத்துவது – வீசிக் குப்பையில் எறிய வேண்டிய தேவையில்லாத ஆணியின் மீது நம்பிக்கை வைப்பது போன்றதே!
இம்முயற்சி நுழைவுத் தேர்வு முறையை நியாயப்படுத்தும் முயற்சியே தவிர, கல்விச் சுமையின் அடிப்படைச் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வாகாது.
