எங்களுக்கு அனுமதி மறுக்கிறவர்களுக்கும் சேர்த்துதான் பாடுபடுகிறோம்! காவல்துறைக்கு உதவியாக இருப்போமே தவிர தொல்லை தராதவர்கள் நாங்கள்!
அன்று கலவரம்; இன்றோ வரவேற்கும் நிலவரம்!
அன்று கலவரம்; இன்றோ வரவேற்கும் நிலவரம்!
திருநெல்வேலி, ஆக.20 திருநெல்வேலியில் நடைபெற்ற ‘‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார்!’’ 80 ஆம் ஆண்டு விழா! திறந்தவெளி மாநாட்டில், கழகத் தலைவர் நாங்கள் யாருக்காக பாடுபடுகிறோம்? எங்களுக்கு அனுமதி மறுக்கிறவர்களுக்கும் சேர்த்துதான் பாடுபடுகிறோம்! காவல்துறைக்கு உதவியாக இருப்போமே தவிர தொல்லை தராதவர்கள் நாங்கள்! எண்ணிப் பாருங்கள் என்று விளக்கம் தந்து, 80 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா!’’ திறந்த வெளி மாநாடு
திருநெல்வேலி திராவிடர் கழகம் சார்பில், ‘‘எதிர்நீச்ச லில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா!’’ திறந்த வெளி மாநாடு, வாகையடி அம்மன் கோயில் தெருவில், 19.08.2026 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மேடை குமார விலாஸ் பிரம்ம நாயகம் – வள்ளியூர் நட்சத்திரம் நினைவாக அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு, கழகக் காப்பாளர் காசி, கழகக் கொடியேற்றி வைத்தார். கழகக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை மாநாட்டினை தொடங்கி வைத்து உரையாற்றினார். திருநெல்வேலி மாவட்ட சுயமரியாதைச் சுடரொளிகளின் படங்கள் அடங்கிய பதாகையை கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து, தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் பால்.இராசேந்திரம் உரையாற்றினார். மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் மாநாட்டுத் தலைவராக கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, முன்மொழிந்து உரையாற்றினார். அதை பொதுக்குழு உறுப்பினர் வள்ளியூர் ந.குணசீலன் வழிமொழிந்து பேசினார். தொடர்ந்து, சுயமரியாதைச் சுடரொளிகள் பதாகையைத் திறந்து வைத்து, கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உரையாற்றினார். தி.மு.க.வர்த்தக அணிச் செயலாளர் மாலை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். மாவட்டக் காப்பாளர் வேலாயுதம் பெரியார் வீர விளையாட்டு கழகம் மாநில தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் குமரி மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாநில மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி, குமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், மாமன்ற உறுப்பினர் உலகநாதன், திமுக தலைமைக் கழக பேச்சாளர் நெல்லை முத்தையா, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் முருகன், தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆலடி எழில் வாணன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
கழகத் தலைவர் சிறப்பு செய்தார்
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை உரத்தநாடு இரா.குணசேகரன் மாநாட்டு ஏற்பாடுகளையும், மேடை நிகழ்வையும் ஒருங்கிணைத்து சிறப்பித்தார். நிகழ்வின் தொடக்கத்தில், இயக்கப் புத்தகங்களை அறிமுகப்படுத்தியும், மக்கள் வாங்கிப் பயன்பெறும் வேண்டுகோள் விடுத்தும் பேசினார். நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலமாக உத்தரவு பெற்று நடந்ததால், ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு, கழகப் பொறுப்பாளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. கழகத் தலைவருக்கு மாவட்டக் கழகம் சார்பிலும், மாலை ராஜா உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பிலும் சிறப்பு செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் இயக்கத்தை கட்டமைத்த தோழர்களில் முக்கியமானவரான பிரம்ம நாயகம் அவர்களின் குடும்ப வாரிசுகள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர். அவர்களுக்குக் கழகத் தலைவர் சிறப்பு செய்தார்.
நெல்லையில் தமிழர் தலைவர் முழக்கம்!
அன்று கல் வீசினார்கள்; இன்று சிமெண்ட் மூட்டை தருகிறர்கள்!
கழகத்தின் வெற்றி நடை!
‘‘தந்தை பெரியார் அவர்கள் இங்கு வந்ததோ, அவரு டைய வாழ்நாள் தொண்டர்களாக இருக்கக்கூடிய எங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதோ புதியது அல்ல. எங்கள் வழியில் கிடக்கும் கல்லோ, முள்ளோ அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு, எங்கள் பயணத்தைத் தொடரக்கூடியவர்கள் நாங்கள். இப்போது வந்திருக்கும் இளைய தலைமுறையினருக்கு இது தெரியாது. காவல்துறைத் தலைவர்களுக்கும் கூட முழுமையான தகவல்கள் தெரியாது. அதனால், அவர்கள் அச்சப்பட்டிருக்கலாம். அதனாலேயே ஒரு தவறான முடிவை எடுத்திருக்கலாம். அவர்களுக்கும் சேர்த்து விளக்க வேண்டியது எங்களைப் போன்ற எளிய பெரியார் தொண்டர்களுடைய கடமை. 80 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் கொள்கைகளுக்கு இங்கே இன்று பலத்த எதிர்ப்பு இருந்தது. இங்கே, புதுமையாக சிமெண்ட் மூட்டை தந்தார்கள். 80 ஆண்டுகளுக்கு முன்பு, பெரியார் இங்கே வந்து பேசிய போது, 13 வயது சிறுவனாக நானும் அந்த மேடையில் இருந்தேன். அப்போது கல் வீசினார்கள். இப்போது சிமெண்ட் தந்திருக்கிறார்கள். அந்தக் கல்லுக்கு நன்றாக சிமெண்ட் பூசுங்கள். பெரியார் உலகம் வரட்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்’’ என்று அந்தக் காலத்தையும், இந்தக் காலத்தையும் பெரியார் உலகத்துடன் இணைத்து நகைச்சுவை கலந்து பேசி மகிழ்ந்து, மகிழ்வித்தார் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (திருநெல்வேலி, 19.08.2026).
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின்
93 வயதை முன்னிட்டு…
93 வயதை முன்னிட்டு…
கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றி வேந்தன், மாவட்டத் தலைவருடன் இணைந்து ‘விடுதலை’ சந்தா 20,000/- ரூபாயை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். தொடர்ந்து, களக்காடு சுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன், முத்துலட்சுமி, மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் உள்ளிட்டோர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 வயதை முன்னிட்டு, பெரியார் உலகம் நன்கொடையாக, அதன் கட்டுமானத் தேவைக்காக, 93 மூட்டை சிமெண்ட் வழங்குவதாக அறிவித்து, அடையாளத்துக்காக ஒரு மூட்டை சிமெண்ட் வழங்கி, 93 மூட்டைக்கான தொகை 35,000/- ரூபாயை, கழகத் தலைவரிடம் வழங்கி மகிழ்ந்தனர். டேவிட் செல்லத்துரை 7 சிமெண்ட் மூட்டைக்கான தொகையை தந்து, நிகழ்ச்சியை வரலாற்றில் நிற்கும்படி செய்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
இரவு 8.20 மணிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில், சுயமரியாதைச் சுடரொளிகள் பதாகையை சுட்டிக்காட்டி, ‘‘வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டம் போல், குமார விலாஸ் பிரம்மநாயகம் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டி ருப்பது இந்த நிகழ்ச்சிக்கு தனிச்சிறப்பு’’ என்றே மகிழ்ச்சியுடன் தொடங்கினார். தொடர்ந்து அவர், ‘‘பிரம்ம நாயகம் தான் இந்த மாவட்டத்தின் முதல் மாவட்டத் தலைவராக இருந்தவர். அவர் நடத்திய குமார விலாஸ் எனும் சிறப்பான உணவு விடுதிதான் அந்தக்காலத்தில் எங்களுக்கெல்லாம் சத்திரம் போல் விளங்கியது’’ என்று 80 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலைச் சுட்டிக்காட்டிப் பேசினார். மேலும் அவர், ‘‘80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கொள்கைகளுக்கு இந்தப் பகுதியில் பலமான எதிர்ப்பு இருந்தது. படிப்படியாக மக்கள் கழகத்தின் அருமையை; தேவையை; உணர்ந்து, இன்றைக்கு மாறி இருக்கின்றனர். இது நீரூற்றி வளர்த்த இயக்கம் அல்ல! இரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம்! ஆகவே, இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது’’ என்று உரத்தக் குரலில் முழங்கிய போது, மக்கள் உணர்ச்சிவசப்பட்டு கைகளைத் தட்டி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
சுயமரியாதைச் சுடரொளிகளின் படங்கள் அடங்கிய பதாகை!
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற, ‘‘எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆம் ஆண்டு விழா’’ திறந்த வெளி மாநாட்டில், நெல்லை குமார விலாஸ் பிரம்ம நாயகம், வள்ளியூர் ஸ்டார் சி.நட்சத்திரம், டி.ஏ.தியாகராசன், மு.சங்கரலிங்கம், டி.ஏ.திருமலை சுந்தரம், ச.காந்திமதிநாதன், நெல்லை வாதுகாபுரம் சு.நெல்லையப்பா, நெல்லை வாதுகாபுரம் கா.சண்முகவடிவு, கு.நம்பிநாராயணன், பல.இராமலிங்கம், செ.முத்துக்கிருட்டிணன், கோ.இராமன், செல்ல பெருமாள், டி.எஸ்.ஏ.பாண்டி ஆகிய சுயமரியாதைச் சுடரொளிகளின் படங்கள் அடங்கிய பதாகையை கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் திறந்து வைத்தார் (திருநெல்வேலி திறந்தவெளி மாநாடு 19.08.2026).
80 ஆண்டுகளுக்குப் பிறகும்
இங்கே பேச வந்திருக்கிறோம்!
இங்கே பேச வந்திருக்கிறோம்!
1929 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களுடன் தந்தை பெரியார் வந்த வரலாற்று நிகழ்வை விவரித்தார். ‘‘நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களைக் காணவில்லை; கூட்டத்திற்குப் போகவேண்டாம்’’ என்று கி.ஆ.பெ. தடுத்தும் தந்தை பெரியார் ஒரு ஜட்கா வண்டியில் ஏறிக்கொண்டு, கூட்டம் நடக்க இருந்த பாதையில் செல்லப் பணிக்கிறார். அங்கு மக்கள், இராமசாமி அப்படி என்னதான் பேசப்போகிறார் என்று காத்திருக்கின்றனர். அவர்களிடம் சென்று பெரியார், ‘‘நான்தான் இராமசாமி’’ என்று அறிமுகம் செய்துவிட்டு, ‘‘புராணங்கள் எல்லாம் பொய் என்று நான் சொல்லவில்லை. சைவர்கள் வைணவப் புராணங்களை பொய் என்கிறார்கள். வைணவர்கள் சைவப் புராணங்கள் பொய் என்று என்கிறார்கள். நான், இரண்டும் பொய் என்கிறேன் அவ்வளவுதான் என்று ஒரு மணிநேரத்திற்கு மேல் பேசினார். அப்படிப்பட்ட துணிச்சலுக்குச் சொந்தக்காரர் பெரியார்தான்’’ என்றதும் மக்கள் பலமாக கைதட்டினர். தொடர்ந்து, ‘‘1946 வரும் பெரியார் இங்கே பேச வந்திருக்கிறார். அப்போதுதான் கற்கள் வீசப்பட்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் 13 வயது சிறுவனாக நானும் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன். 80 ஆண்டுகளுக்குப் பிறகும் இங்கே பேச வந்திருக்கிறோம்’’ என்று சொல்லி விட்டு, ‘‘நாங்கள் யாருக்காக இப்படிப் பாடுபடுகிறோம்? அனுமதி மறுக்கிறவர்களுக்கும் சேர்த்துதான் பாடுபடுகிறோம். அவர்கள் பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்புக்காகத்தான் போராடுகிறோம். இதில் காவல்துறைக்கு உதவியாக இருப்போம். தவிர, தொல்லை தராதவர்கள் நாங்கள். எண்ணிப்பாருங்கள்!’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்த இயக்கத்தை விட்டால், வேறு நாதி ஏது?
தொடர்ந்து பேசிய ஆசிரியர், ‘‘அன்றைக்கு ராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராம், இன்றைக்கு, அகில இந்திய காங்கிரசுக் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகாஜுர்ன கார்கே’’ போன்றவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று காரணம் காட்டி, அவமதித்திருப்பதை என்று வேதனையுடன் குறிப்பிட்ட திராவிடர் கழகத் தலைவர், ‘‘இது தேசிய அவமானம் இல்லையா?’’ என்றொரு கேள்வியை வேத னையுடன் வெளிப்படுத்தினார். மேலும் அவர், அக்னி ஹோத்திம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய, ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ சில பகுதிகளை வாசித்துக் காட்ட இந்த இழிவை நீக்குவதற்கு இந்த மக்களை சமூகப் பொருளாதாரத்தில் உயரச் செய்வதற்கு இந்த இயக்கத்தை விட்டால், வேறு நாதி ஏது? ஆகவே, அதைப் பற்றி பிரச்சாரம் செய்வதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறோம் என்று கூறி, பலத்த கைதட்டல்களுக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் செ. மாரி கணேசு நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி நிறை வுற்றது. இயக்கத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி நிறைவு பெறும் வரையிலும் மக்கள் கூட்ட மும் கலையாமல் அப்படியே இருந்தது. நாற்காலி இல்லாமல் ஏராளமானோர் நின்று கொண்டும் கழகத் தலைவர் உரையை செவி மடுத்தனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு நடக்கும் கூட்டம் என்பதால் ஏராளமான காவல் துறையினர் மேடைக்கு முன்புறமும், பின்புறமும் காவலில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
