பாரதிதாசன் ராமன்

ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பயில்வதற்காக – ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்டம்’ – கடந்த தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தற்போது பல்வேறு ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 213 மாணவர் களுக்கு உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் 362 மாணவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டை விட 2026 ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, வரவேற்கத்தக்கது.
ஆனால், உதவித் தொகையில் எந்தவிதமான மாற்றமும் நிதி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், மாணவர்கள் வெளிநாடு செல்வதற்குத் தேவையான நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால், மாணவர்களின் ‘விசா’ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது!
2026 ஆம் ஆண்டுக்கான ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் திட்ட’த்தின் கீழ் விண்ணப்பங்கள் ஏப்ரல் 14 அன்று பெறப்பட்டு, அதற்கான முடிவுகள் ஜூலை 28 இல் வெளியிடப்பட்டன. ஆனால், மாநில அரசுகள் வழங்கும் உதவித் தொகையை ஏற்றுக் கொள்ள இயலாது என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. அதன் விளைவாக, ‘விசா’ வழங்கப்படாது என்றும் அந்நாட்டு (UK) அரசு ஜூன் மாதம் தெரிவித்துள்ளது.
பிற மாநிலங்களில் நிதி அதிகரிப்பு
தமிழ்நாட்டைத் தவிர, பிற மாநிலங்களில் உயர் கல்வி பயிலும் பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், கல்விக் கட்டணத்தில் 100 சதவீதம் வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் முதல் 15 லட்சம் வரை இருந்தால், 50 சதவீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், ஆண்டு வருமானம் ரூபாய் 15 லட்சம் முதல் 25 லட்சம் வரை இருந்தால், 33 சதவீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மகாராட்டிரா மாநிலத்தில், குடும்பத்தின் ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 6 லட்சம் வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த வருமான வரம்பிற்குள் வரும் மாணவர் களுக்கு, அரசின் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கருநாடக மாநிலத்தில் கல்விக் கட்டணத்திற்கு (Tuition Fee) 100% வரை உதவி வழங்கப்படுவதுடன், ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் ரூபாய் வரை வாழ்வாதாரச் செலவுகள், நூல்கள் மற்றும் ஆய்வுக்குத் தேவையான நூல்கள் வாங்குவதற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கப்படுகிறது. தவிர, ‘விசா’ மற்றும் காப்பீட்டுச் செலவுகளுக்கும் தனியாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மகாராட்டிரா மாநிலத்தில் வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய உண்மையான கல்விக் கட்டணத்திற்கு (Actual Tuition Fees) ஏற்ப நிதி உதவி வழங்கப்படுகிறது. அத்துடன், ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் ரூபாய் வரை கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கான உதவி வழங்கப்படுகிறது. தவிர, விமானப் போக்குவரத்து, நூல்கள் மற்றும் பிற தேவைகளுக்கான செலவுகளுக்காக, சுமார் 9 லட்சம் ரூபாய் வரை உதவி வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை, குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் வரை இருந்தால், அதிகபட்சமாக ரூபாய் 36 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் முதல் 12 லட்சம் வரை இருந்தால், ரூபாய் 24 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் தற்போதைய திட்டத்தில் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 36 லட்சம் ரூபாய் மட்டுமே அதிகபட்சத் தொகையாக வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித் தொகை, மிகவும் குறைவாக உள்ளது. இதனால், மாணவர்கள் கல்விக் கட்டணத்தை வங்கிக் கடன் பெற்று செலுத்தினாலும் – வெளிநாட்டில் தங்குமிடம், உணவு, மருத்துவக் காப்பீடு மற்றும் பிற இன்றியமையாத செலவுகளை – சமாளிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அய்ரோப்பிய நாடுகளில்
அதிகரித்துள்ள கல்விக் கட்டணம்
இந்த ஆண்டு ‘தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரம் போதுமானதாக இல்லை’ என்ற காரணத்தால், தமிழ்நாட்டு மாணவர்களின் ‘விசா’ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தமிழ்நாடு மாணவர்கள் தங்களுடைய உயர் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில், குறிப்பாக இங்கிலாந்து நாட்டில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, ‘பிரிஸ்டல் பல்கலை’க் கழகத்தில் (Bristol University) ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் சுமார் 40 லட்சம் ரூபாயாகும். அதேபோல், ‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், பாடப்பிரிவைப் பொருத்து ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமாக கல்விக் கட்டணம் தேவைப்படுகிறது.
தவிர, வெளிநாடுகளில் முதுகலைப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, பல பல்கலைக் கழகங்களில் குறைந்த பட்சமாகவே ஆண்டுக்கு சுமார் 40 முதல் 43 லட்சம் ரூபாய் வரை கல்விக் கட்டணத்திற்கு மட்டுமே செலவாகிறது. தமிழ்நாடு மாணவர்கள் வங்கிக் கடன் பெற்று வெளிநாடு சென்றாலும் தமிழ்நாடு அரசு வழங்கும் சுமார் 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகையும், வங்கிக் கடனாகக் கிடைக்கும் தொகையும் – பெரும்பாலும் கல்விக் கட்டணம், விமானப் பயணம் மற்றும் ‘விசா’ உள்ளிட்ட – தொடக்கக் கட்ட செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது.
ஆனால், மாணவர்கள் வெளிநாட்டில் தங்கியிருந்து படிக்கும் காலத்தில் உணவு, தங்குமிடம், போக்குவரத்து, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட இன்றியமையாத வாழ்வாதாரச் செலவுகளைச் சமாளிப்பது, மிகப்பெரிய பொருளாதாரச் சுமையாக மாறுகிறது. இதனால், பல மாணவர்கள் வெளிநாடு சென்ற பின்னரும் பல்வேறு மன உளைச்சல்களையும் பொருளாதாரச் சிக்கல்களையும் சந்திக்கின்றனர்.
‘விசா’ பெறுவதிலும் சிக்கல்
தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை மட்டுமே நம்பி வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு ‘விசா’ பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெளிநாட்டில் உயர் கல்வி பயிலத் தயாராக இருந்த சுமார் 113 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி சுமார் 131 கோடி ரூபாய். இத்தொகை, பிற மாநிலங்கள் வழங்கும் உதவித் தொகையுடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவாக உள்ளது. மாணவர்கள் வெளிநாடு சென்று தங்களுடைய உயர் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, மிகவும் வேதனைக்குரியது. எனவே, மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வெளிநாடு செல்கின்றனர். பொதுவாக, வங்கிகள் மாணவர்களுக்கு சுமார் 5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை கல்விக் கடன் வழங்குகின்றன. இந்தத் தொகை பெரும்பாலும் ‘விசா’ கட்டணம், விமானப் பயணக் கட்டணம் மற்றும் வெளிநாட்டில் கல்வியைத் தொடங்குவதற்கான தொடக்கச் செலவுகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், மாணவர்கள் வெளிநாடு சென்ற பிறகு தங்குமிடம், உணவு, போக்குவரத்து, மருத்துவம் மற்றும் அன்றாட வாழ்வாதாரச் செலவுகள் போன்றவற்றை சமாளிப்பதில் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, அரசால் வழங்கப்படும் உதவித்தொகை, மாணவர்களின் உண்மையான கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லாததால், அவர்கள் கூடுதல் கடன் பெறும் நிலைக்கும், குடும்பத்தினரின் பொருளாதாரச் சுமையை அதிகரிக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர்.
‘விசா’ மற்றும் விமானப் பயணத்திற்கான செலவுகளை முன்கூட்டியே செலுத்த முடியாத காரணத்தால், பொருளாதார வசதி இல்லாத பல திறமையான மாணவர்கள் – தங்களுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பல்கலைக்கழக சேர்க்கை வாய்ப்புகளையே – இழக்கும் நிலை ஏற்படுகிறது. கல்வித் தகுதியும் திறமையும் இருந்தும் – பொருளாதார வசதி இல்லாத ஒரே காரணத்தால் – உயர் கல்வி வாய்ப்பை இழப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.
தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?
கருநாடகா மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் வழங்கப்படும் வெளிநாட்டு உயர்கல்வி உதவித் தொகைத் திட்டங்களைப் போன்று, தமிழ்நாடு அரசும் வெளிநாட்டில் உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுக்கு – பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே – தேவையான தொடக்கக்கட்ட செலவினங்களுக்கான தொகையை வழங்கும் நடைமுறையைக் கொண்டுவர வேண்டும்.
குறிப்பாக, மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்பாக ‘விசா’ கட்டணம், விமானப் பயணக் கட்டணம், குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிடச் செலவுகள் உள்ளிட்ட தொடக்கக் கட்ட செலவினங்களுக்கான தொகையை தமிழ்நாடு அரசு முன்கூட்டியே வழங்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, ‘விசா’ தொடர்பான பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். 2025–2026 கல்வி ஆண்டில், இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 213 மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி பயில்வதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய (2026–2027) கல்வி ஆண்டில், இந்த எண்ணிக்கை 149 ஆக அதிகரித்து, 362 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயலக மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பிக்கத் தொடங்கி, அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் – அதற்குரிய நிதி அதிகரிக்கப்படாமலும் உரிய நேரத்தில் வழங்கப்படாமலும் இருப்பது – அதன் நோக்கத்தையே பாழ்படுத்துவதாக உள்ளது.
டாக்டர் அம்பேத்கர், அவருடைய மாணவர் பருவத்தில் சந்தித்த இன்னல்களைத் தொகுத்து, ‘விசாவுக்காகக் காத்திருக்கிறேன்’ என்ற உருக்கமானதொரு குறிப்பை எழுதினார். இக்குறிப்பை டாக்டர் அம்பேத்கர் எழுதி – 90 ஆண்டுகளுக்குப் பிறகும் – நூற்றுக்கணக்கான ஒடுக்கப் பட்ட மாணவர்கள், ‘விசா’வுக்காகக் காத்துக் கிடக்கின்றனர்!
நன்றி: தலித் முரசு
