எரிமலை எதிர்ப்பை ஈரோட்டுப் பூகம்பம் வென்றிட்டது நெல்லை வரலாறு வியந்திட்டது-முனைவர் க. அன்பழகன்

சிறப்பு புத்தக சலுகைகள்

தந்தை பெரியாரின் பொது வாழ்வில் தனி இயக்கம் காண அடிக்கோடிட்ட சரித்திர நிகழ்வு சேரன்மாதேவி என்னும் ஊரில் நடந்து வந்த குருகுலத்தில் நடைபெற்ற பார்ப்பன ஆதிக்கக் கொடுமையே முக்கிய காரணமாக அமைந்தது. அதன்பின் வகுப்புரிமை கோரிக்கைகள் என வளர்ந்து பின் 1925இல் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார்.

1925இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கிய பெரியார் திருநெல்வேலியில் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்திற்காக 1929ஆம் ஆண்டு கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களோடு செல்கிறார்.

நெல்லையை வந்தடைந்த பெரியாருக்கு முதலில்  ஒரு துண்டறிக்கையை படிக்க நேர்ந்தது. அத்துண்டறிக்கையில் புராணங்கள் எல்லாம் பொய் என்று சொல்லும் நாத்திகரான ராமசாமி இன்று திருநெல்வேலிக்கு வருகிறார். அவரை நாம் பேச விடக்கூடாது என்று அச்சிடப்பட்டிருந்தது.

மேலும், கூட்டம் ஏற்பாடு செய்திருந்தவர்கள் யாரும் வரவில்லை. என்ன செய்யலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, கி.ஆ.பெ. அவர்கள் இதற்குமேல் இங்கு பிரச்சாரம் செய்வதற்கு வாய்ப்பில்லை. திரும்பிச் சென்று விடலாம் என்று பெரியாரியிடம் கூறினார்.

தந்தை பெரியார் ஒரு  ஜட்கா ஏற்பாடு செய்ய கி.ஆ.பெ. அவர்களிடம் கூறுகிறார். எட்டணா பேசி ஜட்கா ஒன்றுக்கு கி.ஆ.பெ. ஏற்பாடு செய்ய, ஜட்காவில் ஏறினர்.

பெரியார் ஜட்காவை கூட்டம் நடைபெறும் பகுதி வழியே போகச் சொல்கிறார். அப்படி செல்லும்போது அவ்விடத்தில் மேடையோ – நாற்காலியோ இல்லை. கூட்டம் மட்டும் 500, 600 பேர்கள் குழுமியிருந்தனர்.

தந்தை பெரியார் திடீரென கீழிறங்கி, மக்கள் கூட்டத்திற்கு முன்னே தனியாளாகப் போய் நின்று, ஒரு விளக்கத்தைச் சொல்லத் தொடங்கினார்.

‘‘பொது மக்களே! நான் உங்கள் முன்னால் இப்பவும் பேச வரவில்லை. ஓர் உண்மையை சொல்லிப் போகவே வந்தேன். புராணங்களை எல்லாம் பொய்யென்று சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள். அதை நான் சொல்லவில்லை. சைவப் புராணங்களை எல்லாம் பொய்யென்று கண்டுபிடித்துச் சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்களை எல்லாம் பொய்யென்று கண்டுபிடித்துக் கொள்ளவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணமும், பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு. அந்தப் புராணங்களை பொய்யென்று சொன்னவர்கள் சைவ – வைணவப் பண்டிதர்கள். இதைச் சொல்லிப் போகவே நான் வந்தேன். என் மேல் பழி போடாதீர்கள் என்று பெரியார்  சொன்னதும், ஓயாமல் கை தட்டிய மக்கள் ஆரவாரம் செய்தார்கள். அதன்பின் தந்தை பெரியார் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டேயிருந்தார்! மக்கள் அனைவரும் அமைதியாயிருந்து கேட்டார்கள்’’

–ஆதாரம்: அறிவுக்கதைகள்
– கி.ஆ.பெ. விசுவநாதன்

இந்நிகழ்வு நடைபெற்று இன்றைக்கு 97 ஆண்டுகள் ஆகிறது. அப்போதே எதிர்ப்பெனும் எரிமலைக் குழம்பு கக்கப்பட்ட நேரத்தில்  தனக்குப் பின்னே ஒருவர்கூட இல்லாத நிலையில், தனியொருவனாக மக்கள் எதிர்ப்பை சந்தித்து, மக்கள் கூட்டத்துக்குள் சென்று ஒன்றரை மணி நேரம் பேசினார் தந்தை பெரியார்.

எத்தனை எதிர்ப்பு எரிமலைகளையும் இடறிச் சென்ற வீரர் தந்தை பெரியார்! சிங்கத்தை அதன் குகைக்குள் சந்திக்கும் விந்தையாளர் தந்தை பெரியார் என்பதற்கு இதுவே சான்று.

1929இல் மிகப் பெரும் எதிர்ப்பு – கூட்டம் ஏற்பாடு செய்தோர் காணவில்லை. பெரியார் தனியாக துணிவோடு நின்று – பேசி  – எதிர்ப்பு எரிமலையை நிர்மூலமாக்கியிருக்கிறார்.

அதே இடத்தில்  தத்துவத் தலைவர் தந்திட்ட தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 97 ஆண்டுக்கு பின்பு 93ஆம் வயதில் அதே நெல்லையில், தந்தை பெரியார் எதிர்ப்பு  எரிமலைகளை இடரித் தள்ளிய இடத்தில், 19.8.2026 அன்று பெரியாரின் கொள்கை வெற்றிகளை அடுக்கிக் காட்டி அரிய உரை ஆற்ற இருக்கிறார். நெல்லை மாநகரில் எதிர்ப்பு எரிமலைகளுக்குள் பயணம் செய்த தந்தை பெரியார் இன்று ‘‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்’’ என்று உச்சந்தொட்டு நிற்கிறார்.

பெரியார் உலகம் அமைய இருக்கிறது. மாநாட்டில் தமிழர் தலைவர் சொல்லைக் கேட்க நெல்லைக் காத்திருக்கிறது. சந்திப்போம் நெல்லையில்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *