புதுடில்லி, ஆக.18 அதானி குழுமம் குறித்து ‘தி வாசிங்டன் போஸ்ட்’ செய்தி நிறுவனத்துடன் இணைந்து கட்டுரை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் ரவி நாயரின் இல்லத்தில், டில்லி காவல்துறையின் உதவியுடன் குஜராத் காவல்துறை தீவிர சோதனை மேற் கொண்டது.
அதானி குழுமத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ரவி நாயர் மீது முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இச்செய்தியை வெளி யிட்ட ‘தி வாசிங்டன் போஸ்ட்’ நிறு வனத்தின் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனங்கள் பறிமுதல்
நீதிமன்ற நடுவரின் சோதனை ஆணையைக் காட்டி காவல் துறையினர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் போது ரவி நாயரின் 2 கைப்பேசிகள், அவருடைய மகனின் மடிக்கணினி மற்றும் சம்பவ இடத்தில் தற்செயலாக இருந்த, இவ்வழக்கில் தொடர்பில்லாத அவருடைய நண்பர் ஒருவரின் மடிக் கணினி மற்றும் அய்பேட் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
டிஜிட்டல் சாதனங்களைப் பறி முதல் செய்யும்போது, அவற்றில் உள்ள தரவுகள் பின்னர் மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய வழங்கப்படும் ‘ஹேஷ் வேல்யூ’ – (டிஜிட்டல் சான்றொப்ப எண்) விவரங்களை வழங்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர் .பத்திரிகையாளர் மீதான இந்த நடவடிக்கை ஊடக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாட்டு அளவில் புகழ் பெற்ற ‘தி வாசிங்டன் போஸ்ட்’ நிறுவ னத்துடன் இணைந்து இக்கட்டுரை வெளியிடப்பட்ட போதிலும், அந்த செய்தி நிறுவனத்தின் மீது வழக்கு ஏதும் பதிவாகாமல், தனிப்பட்ட ஒரு பத்திரிகையாளர் மீது மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
விசாரணையோடு தொடர்பில்லாத குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களின் டிஜிட்டல் சாதனங்களைப் பறிமுதல் செய்தது அதிகார வரம்பை மீறிய செயலாகும்.
‘ஹேஷ் வேல்யூ’ சான்றை வழங்க காவல்துறை மறுத்தது சட்டப் பாதுகாப்பு வழிமுறைகளை அப்பட்ட மாக மீறும் செயலாகும்.
ஜனநாயகத்தின் முதன்மைத் தூணாக விளங்கும் ஊடகத் துறை யையும், அதிகார வர்க்கத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் பத்திரிகை யாளர்களையும் இத்தகைய கெடுபிடிகள் மூலம் அச்சுறுத் துவது ஆரோக்கியமான ஜனநாயக சூழலுக்கு உகந்ததல்ல என்பன அனைத்துத் தரப்பினரின் கருத்தாக உள்ளது.
