காங்கோ குடியரசில் அதிவேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை 2,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், அந்நாட்டின் வரலாற்றிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிக மோசமான எபோலா பாதிப்பாக இது உருவெடுத்துள்ளது. காங்கோவில் ஏற்படும் 17-ஆவது எபோலா பாதிப்பு இதுவாகும். இதற்கு முன்பு 2018-2020 காலகட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பில் 3,481 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு 2,299 போ் உயிரிழந்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது.
திங்கள்கிழமை வெளியான அரசுத் தரவுகளின்படி, இதுவரை 4,945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2,325 போ் உயிரிழந்துள்ளனர். 1,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், 730 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 101 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 33 பேர் உயிரிழந்துள்ளனா். முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பரவி வரும் இந்தத் தொற்று, 2014-16-இல் மேற்கு ஆப்பிரிக்காவில் 11,000 போ் உயிரிழந்த எபோலா பாதிப்பின் தீவிரத்தை விஞ்சும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தோனேசியாவில்
மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவு
இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாள்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 17 அன்று 5.9 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் (ஆஃப்டர் ஷாக்) பதிவாகியுள்ளது.
ஆறு மாவட்டங்களை உலுக்கிய இந்த தொடர் நிலநடுக்கங்கள் காரணமாகப் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் புள்ளிவிவரங்களின்படி, இடிபாடுகளில் சிக்கி இதுவரை குறைந்தது 54 பேர் உயிரிழந்துள்ளனர். 199 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 9,963 பேர் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் மொத்தம் 2,403 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அவற்றுள் 1,543 வீடுகள் கடுமையாகவும், 328 வீடுகள் மிதமாகவும், 532 வீடுகள் லேசாகவும் சேதமடைந்துள்ளன. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மய்யத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்குச் செல்ல அஞ்சி, திறந்தவெளிகளிலும் வீதிகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
