கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை தலைவர்கள் கண்டனம்!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 17- கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக அந்தோணி சாமி, ஜான்ரோஸ் பீட்டர், குமார் ஆகிய 3 தமிழர்கள் கருநாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியிருப்ப தாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கருநாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமாக சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம்அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

குற்றமிழைத்தவர்களை காப்பாற்றும் முயற்சிகளில் கருநாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதை கொலை வழக்காகப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரண மானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: தங்கள் குற்றத்தை மறைக்க, அவர்கள் வேட்டையாடினார்கள் என்று பொய் குற்றச்சாட்டை வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டுக் கொலையை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: இந்த கொலையை எவ்வகையிலும் நியாயப் படுத்த முடியாது. இக்கொலையை செய்த வனத்துறையினரைப் பணிநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். கொலைக் குற்றமாக வழக்கை கருநாடக அரசு பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஒன்றியப் புலானாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்: எவ்வளவு பெரிய குற்றம் இழைத்தவராக இருந்தாலும், அவரை கைது செய்து சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டுமே தவிர மோதல் சாவு செய்வது சரியான வழிமுறையாகாது. இந்த சம்பவத்தில் முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழர்கள் மீதான இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன். தமிழர்கள் மீதான இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு சரியான நீதி வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *