பிரஸ்ஸல்ஸ், ஆக. 16- அய்ரோப்பாவை கடுமையாக தாக்கி வரும் வெப்ப அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.
அய்ரோப்பா நாடுகளான பெல்ஜியம், பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகியவை வெப்ப அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது. குளிர் பிரதேசமாக அறியப்பட்ட பெல்ஜியத்தில் மட்டுமே, இந்த வெப்ப அலையால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த நாட்டின் தெற்குப் பகுதியான வாலோனியாவில், வழக்கமாக எதிர்பார்க்கப்பட்டதை விட இறப்பு விகிதம் 77% அதிகமாக இருந்தது.
வெப்ப அலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. காலநிலை மாற்றத்தின் காரணமாக இப்படியான கோடைகாலங்கள் இன்னும் மோசமான நிலையை எட்டக்கூடும் என்றும், எதிர்காலத்தை எதிர்கொள்ள நாடுகள் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் காலநிலை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

மின்சாரத்தில் இயங்கும்
உலகின் முதல் பெரிய விமானம் சோதனை வெற்றி
நியூயார்க், ஆக. 16- முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மிகப்பெரிய விமானமான ‘எக்ஸ்1’-யை வெற்றிகரமாக பறக்கவிட்டு அமெரிக்காவின் ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
நியூயார்க் விமான நிலையத்தில் நடந்த சோதனையின்போது அந்த விமானம் 1,100 அடி உயரம் வரை சென்று 27 நிமிடங்கள் பறந்து தரை இறங்கியது. இதற்கு வெறும் ரூ.477 மதிப்புள்ள மின்சாரம் மட்டுமே செலவானதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுவே தற்போது உலகின் மிகப்பெரிய பேட்டரியில் இயங்கக்கூடிய மின்சார விமானம் என்ற சாதனையை பெற்றுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் 30 பேர் அமரக்கூடிய வணிகரீதியான பயணிகள் விமானத்தை உருவாக்கி வருகிறது.
