கரிபா, ஆக.13- ஜிம்பாப்வே-ஜாம்பியா நாடுகளுக்கு இடையே எல்லையாக அமைந்துள்ள கரிபா ஏரியில், அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்த தகவல்கள்
அரசு முகமையால் இயக்கப்பட்டு வந்த அப்படகில் 90 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உள்ள நிலையில், கடந்த 11.8.2026 அன்று விபத்து நிகழ்ந்தபோது 114 பெரியவர்கள், 5 பணியாளர்கள் என குறைந்தது 119 பேர் பயணித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயணச்சீட்டு பெற்றவர்கள் மட்டுமே இந்த கணக்கில் அடங்குவர் என்பதால், பயணச்சீட்டு தேவையில்லாத சிறுவர்கள் எத்தனை பேர் படகில் இருந்தனர் என்பது துல்லியமாகத் தெரியவில்லை.
விபத்து நடந்தவுடன் ஹெலிகாப்டர், விரைவுப் படகுகள் மூலம் நடைபெற்ற மீட்புப் பணியில் 77 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் ஏரியிலிருந்து தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருவதாக ஜிம்பாப்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.
