சென்னை, ஆக. 16- தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் பி.இ, பி.டெக். படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு 2026-2027ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப் பித்தனர். இவர்களுக்கான 2 கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதில், சிறப்பு மற்றும் முதற்கட்ட கலந்தாய்வில் 28,979 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2ஆம் கட்ட கலந்தாய்வில், 60,508 மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுள்ளனர்.
காலியிடங்கள்
தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, நாளை (17ஆம் தேதி) முதல் நடக்கிறது. இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்வு 1,31,094 முதல் 2,33,812 வரை தரவரிசை பெற்ற மாணவர்களுக்கான விருப்பத்தேர்வு இணையதளம் மூலம் தொடங்குகிறது. நடப்பாண்டு இரண்டு கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளபோதிலும், இன்னமும் பல முன்னணி கல்லூரிகளில் மாணவர்களுக்கான காலியிடங்கள் காத்திருக்கின்றன. பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலந்தாய்வில், மாணவர்கள் விழிப்புடன் இருந்து செயல்படுவது அவசியம். குறிப்பாக, முன்னணி பொறியியல் கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவைப் பெற நினைக்கும் மாணவர்கள், கடைசி நேர இணையதளச் சிக்கல்களைத் தவிர்க்க, முன்கூட்டியே லாக்-இன் செய்து கொள்வது சிறந்தது. விருப்பப் பட்டியலைச் சேமிப்பதற்கு முன்பாக, கல்லூரி குறியீடுகள் மற்றும் பாடப்பிரிவுகளைக் கவனமாகச் சரிபார்க்க வேண்டும்.
சீட் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க, மாண வர்கள் அதிக எண்ணிக்கையிலான விருப்பங்களை சேர்க்கலாம். மாணவர்கள் தங்களது தேர் வுகளை லாக் செய்யாவிட்டாலும், வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு அவை தானாகவே லாக் ஆகிவிடும். எனவே, அதற்கு முன்பாகவே விருப்பங்களைச் சரிபார்ப்பது, கடைசி நேரத் தவறுகளைத் தவிர்க்க உதவும். இந்த 3ஆம் கட்ட கலந்தாய்வுக்கான சாய்ஸ் பில்லிங், கட்-ஆப் விவரங்கள் மற்றும் தற்காலிக இடஒதுக்கீடு முடிவு வரும் 21ஆம் தேதியன்று வெளியாகும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டை ஆய்வு செய்து, 22ஆம் தேதிக்குள் அதை உறுதி செய்ய வேண்டும். முந்தைய சுற்றுகளின் கட்-ஆப் நிலவரத்தை ஆராய்ந்து விருப்பங்களை வரிசைப்படுத்துவது புத்திசாலித்தனமான தேர்வுக்கு உதவும்.
முதலில் உங்களின் முதன்மை விருப்பங்களுக்கும், அதைத் தொடர்ந்து சாத்தியமான பிற தேர்வுகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். காலியாக உள்ள இடங்களின் பட்டியலை சரியாக ஆய்வு செய்வது, சிறந்த முடிவை எடுக்க உதவும். சீட்டை ஏற்றுக்கொண்டு சேர விரும்பும் மாணவர்களுக்கு 23ஆம் தேதியன்று தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்படும். இவர்கள் ஆகஸ்ட் 23 முதல் 27ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் நேரில் சென்று தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நேரில் செல்லாவிட்டால், ஒதுக்கப் பட்ட சீட் தானாகவே ரத்தாகிவிடும்.
கல்விச் சான்றிதழ்கள்
எனவே, தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கட்டண ரசீதுகளைத் தயாராக வைத்திருப்பது, கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பை எந்தவித சிரமுமின்றி முடிக்க உதவும். பொதுப்பிரிவு பொறியியல் மாணவர்களுக்கு இந்த 3ம் கட்ட கலந்தாய்வே கடைசி வாய்ப்பாகும். எனவே, அதிகாரப்பூர்வ காலி இடங்கள் தொடர்பான விவரங்களைப் பார்த்து, கவனமாக விருப்பப் பட்டியலைத் தயார் செய்து லாக் செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
