டோக்கியோ, ஆக. 16- நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என அவ்வப்போது இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் ஜப்பான், தற்போது வரலாறு காணாத கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் டோக்கியோவின் முக்கிய பன்னாட்டு விமான நிலையமான நாரிடா விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பல ஆயிரக்கணக்கானோர் அரசு கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
டோக்கியோவுக்கு கிழக்கே அமைந்துள்ள சிபா மாகாணத்தில் 13.8.2026 அன்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. சிபா உள்ளிட்ட பகுதிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கனமழை காரணமாக சுமார் 45,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிபா மாகாணத்தின் சில பகுதிகளில் ஒரே மணி நேரத்தில் 115 மில்லிமீட்டர் மழை பதிவானது. இது வழக்கமாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் பதிவாகும் மழையின் அளவுக்கு சமமானதாகும்.
சிபா மாகாணத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ஜப்பான் வானிலை ஆய்வு மய்யம் முதன்முறையாக மிக உயர்ந்த 5-ஆம் நிலை எச்சரிக்கையை வெளியிட்டது.
இச்சிக்காவா நகரில் வெள்ளத்தில் மூழ்கிய சாலையில் இருந்து சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. சகுரா நகரில் வெள்ளநீரில் கார் சிக்கியதில் 66 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் தங்களது கார்களில் இருந்து வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். நாரிடா விமான நிலையத்தில் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் தங்கியிருந்த நிலையில், சுமார் 1,700 பேர் சிபா மாகாண அரசு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.
14.8.2026 அன்று மழை ஓரளவு தணிந்தாலும், வெள்ள அபாயம் தொடர்ந்து நீடிப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் இருந்து மக்கள் விலகி, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
