சென்னை, ஆக.16- தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2026-20–27ஆம் கல்வி ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொழிற்பயிற்சி நிலையங்களிலேயே நேரடிச் சேர்க்கை பெற இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலவசப் பயிற்சி & உதவித்தொகை: பயிற்சிக் கட்டணம் முழுவதும் இலவசம். மாதம் ரூ. 750 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.
கூடுதல் நிதியுதவி
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களின் கீழ் கூடுதலாக மாதம் ரூ. 1,000 வழங்கப்படும்.
இலவச மிதிவண்டி, சீருடை, மூடுகாலணிகள், பயிற்சிக் கருவிகள் மற்றும் இலவசப் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும். சில மய்யங்களில் விடுதி வசதியும் உண்டு.
கூடுதல் கல்வி தகுதி: 8 மற்றும் 10-ஆம் வகுப்பு முடித்துச் சேரும் மாணவர்கள், மொழித்தேர்வுகளை எழுதி 10 மற்றும் 12-ஆம் வகுப்புச் சான்றிதழ்களையும், நேரடியாக பாலிடெக்னிக் 2-ஆம் ஆண்டிலும் சேரும் வாய்ப்பைப் பெறலாம்.
நவீன தொழில்நுட்பப் பயிற்சி: தொழில் 4.0 (Industry 4.0) உள்ளிட்ட அதிநவீன தொழில் நுட்பப் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அய்டிஅய் முடித்தவர்களுக்கு ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை தொடக்க மாதச் சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கடந்த ஆண்டுகளில் பயிற்சி பெற்றவர்களில் 95% பேர் முன்னணி நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் அருகில் உள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று சேர்க்கை பெறலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: 9499055642 (அலைபேசி) மற்றும் 9499055612 (வாட்ஸ்ஆப்) ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
