சென்னை. ஆக. 15- சென்னையில் நடைபெற்ற “வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில்” முதல மைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் மூலம் ரூ.67,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்ட தாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும்; வாகன உற்பத்தி, புதுப் பிக்கத்தக்க எரிசக்தி, தரவு மய்யங்கள் உள்ளிட்ட துறைகளில் 15 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதன் மூலம் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் இந்துஜா குழுமம் (ரூ.2,500 கோடி), ஜே.கே.டயர்ஸ் (ரூ.5,000 கோடி), லூகாஸ் டிவிஎஸ் (ரூ.2,500 கோடி), செயின்ட் கோபைன் (ரூ.2,000 கோடி), பீனிக்ஸ் கோத்தாரி (ரூ.1,000 கோடி), அல்ட்ராவயோலெட் (ரூ.779 கோடி) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
கால அவகாசம் குறித்த கேள்வி:
அதேவேளையில், தவெக அரசின் இந்த அறிவிப்புகள் குறித்தும், ஒப்பந்தம் மேற்கொண் டுள்ள குறிப்பிட்ட ஒரு நிறுவனம் குறித்தும் சமூக ஆர்வலர்களும் தொழில் துறை வல்லுநர்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்:
பன்னாட்டு நிறுவனங் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடாக மாற்றுவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் நிலையில், தவெக அரசுப் பொறுப்பேற்ற 3 மாதங்களில் இவை சாத்தியமில்லை என்றும், இவை கடந்த கால அரசின் முயற்சிகளின் பலனாகவே இருக்க முடியும் என்றும் தொழில்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
தூத்துக்குடியில் ரூ.10,000 கோடியில் ஏஅய் (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய தரவு மய்யம் அமைக்க ‘லைட் ஹவுஸ் கிரீன் டேட்டா சென்டர்’ எனும் நிறுவனத்து டன் ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது. முன்னணி நிறுவனங்களை விட பல மடங்கு அதிகத் தொகையை முதலீடு செய்ய முன்வந்துள்ள இந்நிறுவனம், நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதமே (5 மாதங்களுக்கு முன்பு) திருவள்ளூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மூலதனம் (Paid-up Capital) வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே. நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் பதிவுகளின்படி, இதன் இயக்குநர்களான சந்தியா மற்றும் ஜெகன்நாதன் ஆகியோரின் ‘இயக்குநர் அடையாள எண்’ (DIN) செயலிழக்கச் செய் யப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இவர்களுடைய மற்றொரு நிறுவனமான ‘பின்ஹாரிசன் கன்சல்டிங் சர்வீசஸ்’ என்பதும் ரூ.1 லட்சம் மூலதனத்துடன் இயங்கி வரும் நிதி இடைத்தரகு நிறுவனமாகும்.
இரு நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் இல்லை என்றும், இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தத் தேவையான தொழில் நுட்பம் மற்றும் மனித வளம் 5 மாதங்களே ஆன நிறுவனத்திடம் உள்ளதா என்ற கேள்வி யும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கும் பதில் கிடைக்கவில்லை எனச் செய்திகள் தெரிவிக் கின்றன.
ஏற்கெனவே ஆதாரங்களின்றி பல திட்டங்களை விளம்பரப் படுத்தி வரும் தவெக அரசு, முதலீட்டு புள்ளி விவரங்களை உயர்த்திக் காட்டுவதற்காக ‘ஷெல் கம்பெனி’ மூலம் ரூ.10,000 கோடி ஒப்பந்தம் செய்துள்ளதா என்ற விமர்சனங்கள் சமூக வலை தளங்களில் எழுந்துள்ளன. நிகழ்ச்சிக்குச் செய்தியாளர்கள் அழைக் கப்படாததும், ஒப்பந்த விவரங்கள் முழுமையாக வெளியிடப்படாததும் சந்தேகத்தை அதிகப்படுத்தி யுள்ளதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், வெளி ப்படைத்தன்மையுடன் செயல்படத் தவறினால் முதலீட்டாளர்கள் தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கின்றனர்.
எனவே, இதுகுறித்த உரிய ஆவணங்களை வெளியிட்டு தொழில்துறை அமைச்சர் தெளிவான விளக்கம் அளிக்க வேண் டும் எனப் பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
