காவிரி நீர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத் தாக்கல்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.14- காவிரியில் நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ் நாடு அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன் ஜி.உமாபதி, வழக்குரைஞர் பி.கருணாகரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து கடந்த ஜூலை 29-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ஆம் தேதி வரை திறக்கப் பிறப்பித்த உத்தரவை கருநாடகம் அமல்படுத்தவில்லை. பிலிகுண்டுலு அளவீட்டின்படி, ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய 9.140 டி.எம்.சி.க்கு பதிலாக 2.915 டி.எம்.சி.யும், ஜூலையில் 31.240 டி.எம்.சி.க்கு பதிலாக 0.714 டி.எம்.சி.யும், ஆகஸ்டு 9-ஆம் தேதி வரை 13.341 டி.எம்.சி.க்கு பதிலாக 6.757 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. ஒட்டு மொத்தமாகப் பெற வேண்டிய 53.721 டிஎம்சிக்கு பதிலாக 10.386 டிஎம்சி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளது.

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அவசரமாகக் கூட்டுமாறு தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து காவிரிநீர் ஒழுங்காற்று குழு சென்ற 11-ஆம் தேதி கூட்டப்பட்டது. அதில் ஆகஸ்டு மாதத்திற்குரிய நிலுவை நீர் மற்றும் வழக்கமான நீர் சேர்த்து மொத்தம் 37 டி.எம்.சி. நீரை உடனடியாகத் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால், ஆணையம் இதனை ஏற்காமல், 15 நாள்களுக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை மட்டும், அதாவது 15.552 டி.எம்.சி.நீரை மட்டும் திறக்கப் பரிந்துரைத்தது. இந்த அளவு விவசாயத் தேவைக ளுக்குப் போதுமானதாக இல்லை என தமிழ்நாடு அரசு சுட்டிக் காட்டியுள்ளது.

சரியான நேரத்தில் நீர் கிடைக்கப் பெற்றிருந்தால், மேட்டூர் அணையின் நீர் இருப்பு 60 டி.எம்.சி.யாக உயர்ந்து சம்பா சாகுபடியைத் தொடங்க ஏதுவாக இருந்திருக்கும். குறுவை சாகுபடி தொடங்கும் பருவம் முடிந்து விட்டதால் இதன் மூலம் சம்பா பயிரானது, அடுத்து வரவிருக்கும் வடகிழக்குப் பருவமழையைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய அளவிலும், கன மழையைத் தாங்கக்கூடிய அளவிலும் வளர்ந்திருக்கக்கூடும். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டாவில் சம்பா சாகுபடியைத் தொடங்குவதற்காக லட்சக்கணக்கான விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, நிலுவையில் உள்ள மீதி நீரையும், அதைத் தொடர்ந்து வரும் காலத்திற்கான நீரையும் 10 நாள்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் உடனடியாகத் திறந்துவிடவும், நிலுவை நீரான 21.357 டி.எம்.சி. நீரையும், விகிதாசார அடிப்படையில் ஆகஸ்டு 12 முதல் இறுதி வரையிலான மொத்த நீரின் அளவான 37 டிஎம்சி நீரை திறக்க நாள்தோறும் 10 நாள்களுக்கு வினாடிக்கு 21.413 கனஅடி நீரை அதாவது 1.85 டிஎம்சி நீரை கருநாட காவுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *