திருச்சி, ஆக.13- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை மற்றும் குற்றவியல் துறை சார்பில் மாணவர்களுக்கான சிறப்புப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் காலைக் கூட்டத்தில், மாணவ-மாணவியரின் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு மற்றும் சுய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த சிறப்புக் கூட்டமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் கடந்த 27.07.2026 அன்று காலை 9.00 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு காவல்துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் (SI) பூவிழிப்பிரபா மற்றும் முதல் நிலைக் காவலர்கள் பானுமதி, ஜெயசித்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவர்களுடன் குற்றவியல் துறையைச் சேர்ந்த (Criminology Department) தர்ஷினியும் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இவர் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் காவல்துறை மற்றும் குற்றவியல் துறை அதிகாரிகள் உரையாற்றுகையில்:
மாணவர்களின் அன்றாடப் பாதுகாப்பு, சமூக வலைதளங்களின் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் மற்றும் அவசரகால உதவி எண்களின் அவசியத்தை விளக்கினர்.
சமுதாலத்தில் தற்காப்புடன் வாழ்வது எப்படி என்பது குறித்தும், மாணவர்கள் சட்ட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் அச்சமின்றி எதிர்கொண்டு, உரிய நேரத்தில் காவல்துறையின் உதவியை எவ்வாறு நாடுவது என்பது குறித்து மாணவ-மாணவியருக்குத் தெளிவுபடுத்தினர்.
மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினரின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நிறைவேறியது. காலைக் கூட்டத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வு மாணவர்களிடையே மிகுந்த பயனுள்ளதாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது.
