திருச்சி, ஆக.13- போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் – திருச்சி பெரியார் பள்ளி மற்றும் மாநகர காவல்துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதி மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் தமிழ்நாடு காவல் துறை திருச்சி மாநகரம் இணைந்து ஒருங்கிணைத்த, ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கான ‘போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு’ நிகழ்ச்சி 10.8.2026 காலை 9.00 மணியளவில் பள்ளியின் நாகம்மையார் கலையரங்கத்தில் வெகுசிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா முன்னிலை வகிக்க, பெரியார் தொடக்கப் பள்ளி தாளாளர் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்ட திருச்சி கலைஞர் கருணாநிதி நகர் காவல் நிலைய ஆய்வாளர்
எஸ்.பெரியசாமி, மாணவர் களிடையே போதைப் பொருட் களின் அபாயங்கள் மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவர் பேசுகையில், “மாணவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதிலும், போதைப் பொருளற்ற சமுதாயத்தைப் படைப் பதிலும் பள்ளிகளும் காவல்துறையும் இணைந்து செயலாற்றுவது மிக அவசியம். இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருந்து, தங்களின் இலக்குகளை நோக்கிப் பயணிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
இந்த விழிப்புணர்வு முகாமில், கலைஞர் கருணாநிதி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் நெப்போலியன், சண்முகம், சசிகுமார், ரகுபதி மற்றும் காவலர் ஆத்மநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, போதைப் பொருட் களை ஒழிப்பதில் மாணவர்களின் பங்கு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கமாக உரையாற்றினர். மேலும், மாணவர்கள் மத்தியில் எழுந்த சந்தேகங்களுக்குக் காவல் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகப் பங்கேற்ற இந்த நிகழ்வின் நிறைவில், போதைப் பொருளற்ற சூழலை உருவாக்கவும், சமுதாயப் பொறுப் புணர்வுடன் செயல்படவும் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
