கொடைக்கானல், ஏப். 28- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, சிறிய ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (27.4.2026) இரண்டாவது நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுடன் அவர் உற்சாகமாக உரையாடினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தீவிர சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தொடர் பணிகளால் ஏற்பட்ட களைப்பைப் போக்க, சிறிய ஓய்வுக்காக கடந்த 25ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தந்தார்.
பொதுவாக தான் எங்கு சென்றாலும் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள முதலமைச்சர், கொடைக்கானலில் தனது இரண்டாம் நாள் நடைபயிற்சியைத் தொடங்கினார். காலை 6.45 மணியளவில்:
அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள நகராட்சி குடிநீர் தேக்கத்தை ஒட்டிய சிமென்ட் சாலையில் தனது நடைப்பயிற்சியைத் தொடங்கினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பகுதியில் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
நடைப்பயிற்சியை முடித்துவிட்டு பிரதான சாலைக்கு வந்த முதலமைச்சரை, அங்கிருந்த திமுக தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
“முதலமைச்சர் மிக எளிமையாக எங்களுடன் கைகுலுக்கிப் பேசினார். அவரோடு ஒளிப்படம் எடுத்துக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது,” என அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பொதுமக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்தும், அவர்களுடன் முகம் மலர ஒளிப்படம் (‘செல்ஃபி’) எடுத்துக் கொண்டும் சிறிது நேரம் செலவழித்த முதலமைச்சர், அதன் பின்னர் தான் தங்கியுள்ள விடுதிக்குத் திரும்பினார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி கொடைக்கானலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
