டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்வு முறைகேடுகள்: டில்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் விவாதத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அமைச்சர் ரிஜிஜு தெரிவித்தார்; அமித்ஷா பதிலளிப்பார் என்றும் கூறினார்.
* பேச்சுவார்த்தையை நிராகரிக்கும் ராகுல்: மாணவர் போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ராகுல் காந்தி மறுத்து, அமித்ஷா பதவி விலக வேண்டும்; பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய அரசு உதவித்தொகை வழங்குவதில் தாமதம்; அரசு நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றக் குழு வலியுறுத்தல்: உதவித்தொகை வழங்குவதில் நீடிக்கும் தாமதம் குறித்து அரசின் பதிலால் அதிருப்தியடைந்த நாடாளுமன்றக் குழு, தாமதத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி உள்ளது. மேலும், எஸ்.சி. மற்றும் ஓபிசி மாணவர்களுக்கான இலவச பயிற்சித் திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பான ரூ.8 லட்சத்தை மறுபரிசீலனை செய்ய சமூக நீதி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.
தி இந்து:
* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) பதிலாக கொண்டுவரப்பட்ட புதிய திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் கடுமையாகக் குறைந்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு. 2026 ஜூலையில் உருவாக்கப்பட்ட வேலை நாட்கள், முந்தைய ஆண்டு MGNREGA மூலம் உருவாக்கப்பட்டதை விட 49.94% குறைந்துள்ளதால், புதிய சட்டத்திற்கு “வேலைத் திருட்டு” எனப் பெயரிட வேண்டும் என காங்கிரஸ் விமர்சித்தது.
* ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கி மாணவர்கள் பேரணி; மோதலில் 5 பேர் காயம். JSSC-CGL தேர்வை ரத்து செய்து, முறைகேடுகள் குறித்து சிபிஅய். விசாரணை நடத்தக் கோரி மாணவர்களும் தேர்வர்களும் ராஞ்சியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டப்பேரவையை நோக்கி நடந்த பேரணியில் மோதல் ஏற்பட்டு 5 பேர் காயமடைந்தனர்; காவல்துறை வன்முறையைப் பயன்படுத்தவில்லை என மறுத்த நிலையில், முன்னாள் ஜேபிஎஸ்சி. தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
* உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பெண்களின் மதமாற்றத்தை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தாங்களாக முன்வந்து இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்த இரு வயது வந்த பெண்களை விடுவிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
*மதத் தேர்வின் காரணமாக அவர்களின் தந்தை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததாகக் கூறி, அடிப்படை உரிமை மீறலுக்காக தந்தையும் உத்தரப் பிரதேச அரசும் இணைந்து ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.
தி டெலிகிராப்:
* பவார்–மோடி இரண்டாம் சுற்றுப் பேச்சு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவா? தொகுதி சார்ந்த ரயில், நதிநீர் இணைப்பு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளை 8 கட்சி எம்.பி.க்கள் முன் வைத்த நிலையில், ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை முயற்சிகளுக்கு ஆதரவு பெறும் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒரே ஆண்டில் அரசு தொடக்கப் பள்ளிகள் 10,000 மூடல்: நாடு முழுவதும் அரசு தொடக்க நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 9,866 குறைந்துள்ளது; 2024–2025இல் 8,89,806 ஆக இருந்த எண்ணிக்கை 2025–2026இல் 8,79,940 ஆக குறைந்துள்ளது. மேகாலயா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில் இந்தக் குறைவு அதிகமாக பதிவாகியுள்ளது; மொத்தமாக அரசு தொடக்கப் பள்ளிகள் 1.1% குறைந்துள்ளன.
– குடந்தை கருணா
