‘மேகதாது’ அணை பிரச்சினை தமிழ்நாடு எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்! கன்னட அமைப்பினர் 65 பேர் கைது

சிறப்பு புத்தக சலுகைகள்

ஓசூர், ஆக. 11- தமிழ்நாடு – கருநாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் சாலை மறியலில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் 65 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், தமிழ்நாடு வாகனங்கள் ஓசூர் அருகே நிறுத்தப்பட்டன.

கருநாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு – கருநாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நேற்று (10.8.2026)  சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனால், ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு 60 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே நேற்று காலை இயக்கப்பட்டன. மதியம் 12 மணி முதல் தமிழ்நாடு அரசுப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

மதியம் 1 மணியளவில் கன்னட சலுவாளி வாட்டாள் பக் ஷா கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், கன்னட ரக் ஷண வேதிகே உள்ளிட்ட கன்னடஅமைப்பினர் கருநாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து பேரணியாக வந்து தமிழ்நாடு எல்லையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த கருநாடக காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முற்றுகையிட்டு கூச்சல் போட்டனர்.

இதுகுறித்து வாட்டாள் நாகராஜ் கூறியதாவது: மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் தேவையின்றி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேகதாது அணை கட்டப்படுவதால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து தமிழ்நாடு அரசு தெளிவான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

தமிழ்நாடு எல்லையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்

அணை கட்டுவதன் மூலம் சேமிக்கப்படும் நீர், மின் உற்பத்திக்கும் பெங்களூரு மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும். மீதமுள்ள நீர் வழக்கம் போல் தமிழ்நாட்டிற்குத் திறந்து விடப்படும். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.13ஆம் தேதி கருநாடக மாநிலத்தில் ‘பந்த்’ நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேகதாது அணைத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தால், கருநாடகத்தில் தமிழ்த் திரைப்படங்களைத் திரையிட முழுமையாகத் தடை விதிக்க நேரிடும். மேலும், சென்னை தலைமைச் செயலகம் முன்பு சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 65 பேரைப் காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டம் காரணமாக மதியம் 1 மணி முதல் தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழ்நாடு எல்லையான ஜுஜுவாடியில் நிறுத்தப்பட்டன. மதியம் 1.45 மணிக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்து கருநாடகாவுக்கு வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *