கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.8.2026

3 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* இந்தியாவில் கல்வி சுதந்திரம் (ACADEMIC FREEDOM INDEX) அறிக்கையின்படி, இந்தியாவில் ஆராய்ச்சி, கற்பித்தல், கருத்து வெளிப்பாடு மற்றும் வளாகச் சுதந்திரம் கடுமையாகக் குறைந்து, நாடு ‘எதேச்சதிகாரமயமாக்கல்’ பாதையில் செல்வதாக கூறப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் கருத்தியல் தலையீடுகள் அதிகரிப்பதால் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாக அறிக்கை எச்சரிக்கிறது.

* தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோர் (BC) துணைத் திட்டம்: பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நலனுக்காக தனி துணைத் திட்டம் (SUB-PLAN) உருவாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செயல்படுத்த தெலங்கானா மாநில தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் நலத் திட்ட நிதி உரிய முறையில் செலவிடப்படுவதையும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “தரவு உங்களுடையது, வலியும் உங்களுடையது; ஆனால் செல்வம் அவர்களுடையது” எனக் கூறி, உ.பி. பிரயாக்ராஜில் (அலகாபாத்) உள்ள கே.பி. மைதானத்தில் நடைபெற்ற ‘சத்ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்களின் குரல்) நிகழ்ச்சியில், பாஜக–ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு. கல்விக் கட்டண உயர்வு, வேலையின்மை மற்றும் ஆட்சேர்ப்பு தேர்வுகளில் முறைகேடுகள் காரணமாக இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

தி இந்து:

* கேரளா பள்ளிகளில் சாவர்க்கர் குறித்த வினாவுக்கு பினராயி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். கூட்டணி மீது விமர்சனம்.: பள்ளி வினாடி வினாவில் சாவர்க்கர் குறித்த கேள்வி இடம் பெற்றதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், இளம் மாணவர்களிடம் பிளவுபடுத்தும் இந்துத்துவ தேசியவாதக் கருத்தியலை புகுத்த ஆர்.எஸ்.எஸ்.-க்கு யு.டி.எப். அரசு வாய்ப்பளிப்பதாக குற்றச்சாட்டு.

* முதலமைச்சரின் தொகுதி மறுவரையறை கூட்டத்தை திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு: இது “அரசியல் நாடகம்” என கனிமொழி விமர்சித்து, மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தினால் மட்டுமே பங்கேற்போம் என திமுக ஏற்கெனவே தெரிவித்ததாகக் கூறினார்.

* கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிட இயக்கம் முக்கியப் பங்கு: கனிமொழி, எம்.பி.: ஜாதியைப் பாதுகாக்கும் மத அமைப்பு அகற்றப்பட வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்ட திராவிட இயக்கமே, அனைவரும் தடையின்றி கோயில்களில் நுழைய தொடர்ந்து போராடி வெற்றி பெற்றது என நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

* பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பதற்கு அய்தராபாத் சட்டக் கல்லூரி (NALSAR) மாணவர்கள் எதிர்ப்பு: மாணவர்கள் நீட் போராட்டங்களின் போது தலைமை நீதிபதி சூர்யா காந்த் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக  நீதிபதி சூர்யகாந்தை அழைக்கும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சட்ட கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கோரியுள்ளனர்.

தி டெலிகிராப்:

* பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை குறித்து ராகுல் காந்தி–கிரண் ரிஜிஜு இடையே  மக்களவையில் கடும் கருத்து மோதல்: 2023 சட்டத்தை எந்த நிபந்தனையும் இன்றி அமல்படுத்த வேண்டும் என ராகுல் வலியுறுத்தல்.

* ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கனடா வருகைக்கு எதிர்ப்பு வலுத்து, அவரைத் தடை செய்ய வேண்டும் என 267 கனேடிய சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. அவரது கனடா நுழைவு அனுமதியை மறுபரிசீலனை செய்து, நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என பிரதமர் மார்க் கார்னி அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஒன்றிய அரசின் கல்விக்கான அரசு செலவு யுனெஸ்கோ நிர்ணயித்த 15% இலக்கை விடக் குறைந்து, மொத்த பொதுச் செலவில் 14.2% ஆக சரிந்துள்ளது. கல்விக்கு GDP-யில் 4.1% செலவிடப் பட்டாலும், 2015-இல் இருந்த 15.7% பொதுச் செலவுப் பங்கை விட தற்போது குறைந்துள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை தெரிவித்துள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *