சென்னை, ஆக.9- தமிழ்நாடு சுகாதாரத்துறை நேற்று (8.8.2026) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தேசிய குடற்புழு நீக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககத்தின் சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி, தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு (10-ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் 54,481 அங்கன்வாடி மய்யங்கள், 11,723 துணை சுகாதார நிலையங்கள், 56,483 பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
54,481 அங்கன்வாடி பணியாளர்களும், 59,700 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், 6,543 மருத்துவர்கள், 12,456 கிராம சுகாதார செவிலியர்கள், 2,650 ஆஷா பணியாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரத்துறை பணியாளர்களும் இந்தப் பணியில் ஈடுபட உள்ளனர்.
காலை 9 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாம்களில் 1 முதல் 19 வயது வரையிலான 2.06 கோடி குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான 52.44 லட்சம் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களில் விடுபட்டவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு முகாம்களில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட இருக்கிறது.
1 முதல் 2 வயதிலான குழந்தைகளுக்கு 1/2 மாத்திரையும் (200மிகி), 2 வயது முதல் 19 வயது வரையிலான குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு ஒரு மாத்திரையும் (400மிகி) வழங்கப்படும். இந்த அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை அனைவருக்கும் பாதுகாப்பானது.
அல்பெண்டசோல் மாத்திரை உட்கொள்வதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, குருதிச் சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துச் சுறுசுறுப்பாக இருக்கவும், நினைவாற்றல், கற்றல் திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர், ஆக. 9 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 10,808 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (7.8.2026) காலை விநாடிக்கு 18,875 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று (8.8.2026) காலை 10,808 கனஅடியாகக் குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவைவிட அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78.03 அடியாகவும், நீர் இருப்பு 40.02 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றிலும் தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப் பட்டிருந்தது. நேற்று முன்தினம் (7.8.2026) விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக பதிவான நீர்வரத்து, மாலையில் 9,500 கனஅடியாகவும், நேற்று (8.8.2026) காலை 6,000 கனஅடியாகவும் படிப்படியாக குறைந்தது.
கடந்த 4-ஆம் தேதி நீர்வரத்து உயர்வு காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்நிலையில் 4 நாட்களாக இந்த தடை அமலில் இருந்த நிலையில், நேற்று (8.8.2026) நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாகக் குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கமாவட்ட ஆட்சியர் சரவணன் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
யுபிஅய் சேவை இலவசமாகவே தொடரும்
வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம்
ஒன்றிய நிதியமைச்சகம் விளக்கம்
புதுடில்லி, ஆக.9- பொதுமக்களின் அன்றாட யுபிஅய் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘வரி மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ மக்களவையில் நேற்று முன்தினம் (7.8.2026) நிறைவேற்றப்பட்டது. இது பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இதுதொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஒரு நபர் யுபிஅய் மூலம் இன்னொரு நபருக்கு (பர்சன்-டூ-பர்சன்)) பணம் பரிவர்த்தனை செய்யும்போது எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு யுபிஅய் பரிவர்த்தனை செய்யும் நபர்களுக்கு இலவச சேவை தொடரும். பொதுமக்களின் அன்றாட யுபிஅய் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படாது.
வணிகர் தள்ளுபடி விகித (எம்டிஆர்) கட்டணம் நுகர்வோருக்கானது அல்ல. ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கும் அதிகமாகப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பெரிய அளவிலான வணிகர்களிடம் மட்டுமே குறிப்பிட்ட குறைந்தபட்சக் கட்டணம் விதிப்பது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா முழுமையாக நிறைவேறிய பிறகே இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
