விழுப்புரம், ஆக.8- “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுப்பும் கேள்வி களுக்கு முதலமைச்சர் பதில் அளிக்க முடியாது, பதில் சொல்லக் கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘தேசத்தை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 6 முதல் 15ஆம் தேதி வரை பிரச்சார நடைபயணம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நேற்று (ஆக.7) நடைபெற்ற பிரச்சார நடைபயணத்தை மாநில செயலாளர் மூ.வீரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் கூறியது: “ஒன்றிய அரசு அதிகாரத்தை குவித்துக் கொண்டு மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிறது. ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சியை நிறுவத் துடிக்கிறது. மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்து, அதிகாரத்தை தக்கவைப்பதற்கான, மிக மோசமான சட்டத்துக்குப் புறம்பான முயற்சிகள் நடைபெறுகின்றன.
விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். நியாய விலை கடையில் வழங்கப்படும் பொருட்களின் அளவை அதிகரிக்க வேண்டும். தொழிலாளர்கள் சட்டங்களை சிதைக்கக் கூடாது. சிறு, குறு தொழில்களுக்கு நலவாரியங்கள் அமைக்க வேண்டும்.
ஏழைகள், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வுக்காக அரசுகள் நலத்திட்டங்களை உருவாக்க வேண்டும். கல்வியும், மருத்துவமும் முழுக்க முழுக்க அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதை முன்மொழிந்து நடைப்பயணத்தை மேற்கொள்கிறோம்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையான்மை, மதசார்பின்மை ஆகியவற்றை பாதுகாப்பதே பிரசார இயக்கத்தின் நோக்கமாகும். டில்லியில் செப்டம்பர் 1ஆம் தேதி மாபெரும் பேரணியை நடத்தவுள்ளோம். டெல்டா பகுதியிலிருந்து சிறப்பு ரயில் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் செல்லவுள்ளோம்.
த.வெ.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு நிதியில்லாமல் சிரமப்படுவது புரிகிறது. ஒன்றிய அரசு நிதியைத் தர வேண்டும். இது முழு நிறைவு நிதிநிலை அறிக்கை அல்ல. விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்போதுதான் நிதிநிலை அறிக்கை முழு வடிவம் பெறும். நிறைவு பெறும்.
எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். நாடாளுமன்ற ஜனநாயகம் வடிவம் என்பது பிரதமருக்கு என்ன பொறுப்பு இருக்கிறதோ, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருக்கும் அதே பொறுப்பு இருக்கிறது. இதேபோல் முதலமைச்சருக்கு இருக்கும் கடமையாற்ற வேண்டிய பொறுப்பு, எதிர்க்கட்சி தலைவருக்கும் இருக்கிறது. அம்பேத்கர் கூறுவதுபோல் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் நாணயத்தின் இரு பக்கம்.
எதிர்க்கட்சி இல்லையென்றால் ஆளுங்கட்சி பொருள்படாது, சட்டப் பேரவையும் பொருள்படாது. மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பும்போது முதலமைச்சர், அவை முன்னவர், அமைச்சர்கள் என எல்லோரும் ஜனநாயகத்தில் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். பதில் சொல்ல முடியாது, கூடாது என்று கூற யாருக்கும் உரிமையில்லை.
மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நல்ல அணுகுமுறையை கடைபிடிக்கிறது. முந்தைய அரசு கடைப்பிடித்த நிலையை தான், இந்த அரசும் கடைபிடிக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, தமிழ்நாடு தனது உரிமைக்காக உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும், முதலமைச்சரும் தமிழ் நாட்டின் நலனில்தான் அக்கறையுடன் இருக்கின்றனர். இப்பிரச்சினையில் ஒன்று பட்டு நிற்பது நல்லது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும். கல்வியும், மருத்துவமும் முழுக்க முழுக்க அரசின் பொறுப்பு. அதுதான் சமூக நல அரசு. இந்த பொறுப்புகளிலிருந்து ஒன்றிய அரசு மெல்ல மெல்ல விலகிக் கொண்டு, மாநில அரசுகளையும் விலகச் சொல்லி நிர்பந்திக்கிறது. உலக வங்கியும், நிதி மூலதன உலக முதலாளிகளும் நிர்பந்திக்கிறார்கள். அந்த திசைக்கு நாடு சென்றுவிடக் கூடாது” என்று வீரபாண்டியன் கூறினார்.
