சென்னை, ஆக.6– மகளிர் உரிமைத்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.
பேட்டி
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
‘‘தமிழ்நாடு இதற்கு முன் இல்லாத அள வுக்கு கடன் சுமையைச் சந்தித்து வருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ரூ.5 லட்சம் கோடி கடன் வெறும் 5 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த கடன் சுமைக்கு முழுக்காரணமும் ‘தி.மு.க. ஆட்சிதான்’ என்ற மாயத் தோற்றத்தை நிதி அமைச்சர் திட்டமிட்டு உருவாக்க முயன்றுள்ளார்.
மாநில அரசுகள் கடன் வாங்குவது ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள வரம்புகளுக்கும், நிதிக்குழு வகுத்துள்ள விதிமுறைகளுக்கும் உட்பட்டே நடைபெறுகிறது. மேலும், ஆண்டு தோறும் கடன் அதிகரிக்கும் இயல்பான சூழ்நிலை உள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், தற்போது ரூ.10 லட்சம் கோடியாக உள்ள கடன், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.20 லட்சம் கோடியை எட்டும் என்பதை நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தேன்.
வெற்றி பெறவில்லை
இந்த ஆண்டில் மட்டும் மாநிலத்தின் நிகரக்கடன் ரூ.ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகியபோது, நிகரக் கடன் ரூ.ஒரு லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் தற்போது, அதை விட ரூ.22 ஆயிரம் கோடி அதிகமாக கடன் வாங்குவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன், திறமையான நிர்வாகம், சிறந்த நிதி மேலாண்மை மற்றும் வரி வசூலில் உள்ள கசிவுகளைத் தடுப்ப தன் மூலம் மாநிலத்தின் சொந்த வரி வரு வாயைக் கணிசமாக உயர்த்துவோம் என்று அறிவித்தனர்.
அவர்கள் கூறிய அளவிற்கு மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயரவில்லை. மாறாக, எதிர்பார்த்ததை விட சுமார் ரூ.3,000 கோடி அளவுக்குக் குறைவாகவே உள்ளது. இதன் மூலம் அவர்கள் கூறிய நிதி மேலாண்மை குறித்த வாக்குறுதிகள் நடைமுறையில் வெற்றிபெறவில்லை என்பது தெளிவாகிறது.
மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உரு ளைகள் வழங்கப்படும், வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை என்பது போன்ற தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்த பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிய, ஏமாற்றத்தை ஏற்படுத்திய பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
