சென்னை, ஆக. 6- தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-2027ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறைச் செயலாளர் சித்திக் செய்தியாளர்களுக்கு விரிவான விளக்கம் அளித்தார்.
அவர் தெரிவித்த முக்கிய விவரங்கள் நிதி நிலைமை மற்றும் வருவாய் கணக்கீடு நடப்பு நிதியாண்டில் மாநில அரசின் மொத்த வருவாய் ரூ.3.50 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் சொந்த வரி வருவாய்: ரூ.2.26 லட்சம் கோடி
வரி அல்லாத வருவாய்: ரூ.27,835 கோடி
ஒன்றிய அரசு உதவி மானியம்: ரூ.32,921 கோடி
ஒன்றிய வரி பகிர்வு: ரூ.62,531 கோடி
வருவாய் செலவினம் ரூ.4.05 லட்சம் கோடி ஆக இருப்பதால், வருவாய்ப் பற்றாக்குறை ரூ.55,775 கோடி ஆகவும், மூலதனச் செல வினங்கள் ரூ.56,985 கோடி ஆகவும் இருக்கும்.
மொத்தப் பற்றாக்குறை: ரூ.1.22 லட்சம் கோடி (இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மட்டுமே. அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் உள்ளது).
நிலுவையில் உள்ள கடன்: ஏற்கனவே ரூ.10 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், இந்த நிதியாண்டின் முடிவில் மொத்தக் கடன் ரூ.11.22 லட்சம் கோடியாக உயரும்.
கடன் தொகை உயர்ந்தாலும், மாநில ஜி.எஸ்.டி.பி-யுடன் ஒப்பிடுகையில் கடன் விகிதம் 28 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாகக் குறையும்.
“கடனை மொத்தமாகக் குறைக்க முடியாது; அடுத்த 50 ஆண்டுகள் ஆனாலும் கடன் அளவு உயரத்தான் செய்யும். ஆனால், வருவாய்க்கு ஏற்றபடி கடன் விகிதத்தைக் கட்டுக்குள் வைப்பதே முக்கியம்,” எனச் செயலாளர் விளக்கமளித்தார்.
நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர்க்கடன் தள்ளுபடி: ரூ.6,082 கோடி.
200 யூனிட் இலவச மின்சாரம்: ரூ.1,545 கோடி
வெற்றி வீடு திட்டம்: ரூ.1,000 கோடி
அண்ணன் சீர் திட்டம் (8 கிராம் தங்கம் & பட்டுப்புடவை): ரூ.812 கோடி
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: ரூ.560 கோடி
ஊரக சாலை புனரமைப்பு: ரூ.504 கோடி
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: ரூ.311 கோடி
வருவாயைப் பெருக்கப் புதிய திட்டங்கள் & வழிகாட்டி மதிப்பு மாற்றம் நிதிநிலை அறிக்கையில் ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை கூடுதல் நிதி ஆதாரம் உருவாக்கப்பட்டுள்ளது. நிதிநிலையை முழுமையாகச் சீர்செய்ய 2 முதல் 3 ஆண்டுகள் ஆகும். அரசின் வருவாயை உயர்த்த அடுத்த 1-2 மாதங்களில் சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை மாற்றியமைக்கத் திட்டம் உள்ளது.
ஒன்றிய அரசிடமிருந்து ரூ.7,000 கோடி வரி நிலுவை வர வேண்டி யுள்ளது. டாஸ்மாக் மூலம் ரூ.56,000 கோடி வருவாய் கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.51,000 கோடி வருவாய் கிடைத்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது ரூ.5,000 கோடி அதிகரித்து, ரூ.56,000 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
