இராமேசுவரம், ஆக. 6- கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு சுற்று வந்த இலங்கை கடற்படையினர், “எல்லை தாண்டி மீன் பிடித்ததாக”க் கூறி மீனவர் களைச் சுற்றி வளைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 8 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது ஒரு விசைப் படகையும் பறிமுதல் செய் தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மன்னார்/யாழ்ப்பாணம் கடற்படை தளத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவம் ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் உடனடியாக மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவச் சங்கத்தினரும், குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
