‘கேன் பாட்டே!’ – ஜப்பானிய வெற்றியின் ரகசியம் இதோ! (2)

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

‘கேன் – பாட்–டே’ என்பதைத் ‘தொடர்ந்து நடத்தி, முயற்சியைக் கை விடாது வெற்றி காணும் வாழ்க்கை முறை’ என்று தமிழ் வாசக நோயர்கள் புரிந்து விளக்கலாம்!

‘ஏறு ஏறு, முன்னேறு’ அதன் முக்கிய சாரம் ஆகும்!

தேக்கத்திற்கு இடந்தராது எப்போதும் சுறுசுறுப்புடன் (இயங்கும்) ஓடிக் கொண்டே இருங்கள்  – வெற்றி நிச்சயம் என்ற விளக்கம் ஊக்கத்தைத் தந்து விடும் ஒளிமிகுந்த வெளிச்சமாகும் இது!

ஒருவர் மற்றவர்களிடம் விடை பெறும்போதோ குறிப்பாக வாழ்த்துப் பெற ஒரு புது முயற்சியில் ஈடுபடும் போதோ – அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்த, நம்மில் பலரும் Good Luck! அல்லது Best of Luck! என்று கூறுவதுதானே உலகின் பல பகுதிகளின் வழமை!

ஆனால் ஜப்பானியர்களின் இந்த ‘கேன் –பாட்–டே’ என்ற சொல் நமக்கு ஏற்பில்லாத ‘அதிர்ஷ்டம் உங்களைத் தழுவட்டும்’, ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கட்டும்’, அல்லது ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் வரட்டும்’ என்று கூறும் முறைக்கு மாறானது. ‘கேன் –பாட்–டே’ என்று சொல்வதில் நல்ல ஆழமான பகுத்தறிவுக் கருத்து உள்ளடங்கி வெளிச்சம் தருகின்றது.

வாழ்வியல் சிந்தனைகள்

‘அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிட்டட்டும்’ என்றால் அதிர்ஷ்டம் என்பது மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டு புறத் தளத்திலிருந்து வர வேண்டிய ஒன்று!

ஆனால் ‘கேன் – பாட்–டே’ அப்படி அல்ல; உங்களது தொடர் உழைப்பு – உங்களை உயர்த்தும், வெற்றிப் பாதையில் வீறு நடைபோட்டு வெற்றிக்கனி பறிக்கப் பெரிதும் உந்து சக்தியாக மனதைத் திடப்படுத்தி ‘உழைப்பின் வாரா உறுதிகள் உள்ளதோ’ என்று கூறுவது!

‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்’’                  (குறள் – 620)

இந்நூலில், 50 சிறுசிறு பகுதிகள் – ஒவ்வொரு பகுதி தொடங்கும் பக்கத்தின் எதிர்ப் பக்கத்தில் ஒரு அருமையான ஜப்பானிய ஓவியம். அந்தத் தலைப்புக்குரியதைத் தேர்வு செய்து, படிப்புச் சுவையை வாசகருக்குப் பன்மடங்கு பெருக்கி வழங்குகிறார் நூலாசிரியர்.

இதற்கு அணிந்துரையாக முன் மதிப்புரையை (Foreword ) ‘இக்கிகய்’ நூலின் கூட்டு ஆசிரியர் எழுதி சிறப்புக்குச் சிறப்பு சேர்த்துள்ளார்!

இரண்டாவது உலகப் போரில் அடைந்த பெருந் தோல்வியின் காரணமாக வெகுவாகப்் பாதிக்கப்பட்ட ஓர் ‘அச்சு நாடு’ ஜப்பான் ஆகும்!

அணுகுண்டு வீச்சு காரணமாக, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற ஊர்களில் பாதிக்கப்பட்டதோடு, பல தலைமுறை மனிதர்கள் பிறப்பு, வாழ்க்கையும்கூட கடும் பாதிப்புக்கு ஆளாகியபோது, அதள பாதாளத்தில் மீண்டும் எழவே முடியாது என்று மற்ற எல்லோரும் மனம் ஒடிந்து வாழ முடியாதவர்களாகி மண்ணோடு புதைந்தவர்களாகியிருப்பார்கள்.

ஆனால், ஜப்பானிய மக்கள் தோல்வி கண்டும் அதையும் மன திடத்துடன் பல சோதனைகளுடன் எதிர் கொள்ள ஆயத்தமாக  ‘கேன் – பாட்–டே’  தத்துவம் அவர்களை எழச் செய்துள்ளது!

‘கேன் – பாட்–டே’ தத்துவத்தின் கீழ் அந்நாட்டின் மக்களுக்குக் – குழந்தைப் பருவத்திலிருந்தே, தாய்ப்பாலில் ஊட்டப்படும் தன்னம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையிலான ஒருபழமொழி – மூதுரை என்ன தெரியுமா?

‘‘ஏழு முறை வீழ்வதைப் பற்றிக் கவலைபடாமல், எட்டாவது முறை எழுந்து நில்’’ (வென்று காட்டு) என்ற சூளூரைக்கும் நம்பிக்கை!

  1. தொடர்ந்த போர்களின் பாதிப்பு.
  2. இயற்கைப் பேரிடர், புயல், சுனாமி, பூகம்பங்கள்.

அண்மையில்கூட கியோடோ’ பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் ஏற்படுத்திய மிகப் பெரும் சோகம் – என்றும் அவர்கள் சோர்ந்தவுடன் அடுத்த நொடியிலேயே அதனை எதிர் கொண்டு நிவாரணப் பணிகளையும், நிர்மாணப் பணிகளையும், தொடர் நிகழ்வாக ஆக்கிக் கொள்ளும் ஒப்பிலா நெஞ்சுரம்!

மீண்டும் நினைவுபடுத்துகிறார்கள் – ‘கேன் – பாட்–டே’  உள்ள உறுதிப்பாடுடன் உனது முழு உழைப்பைக் கொண்டும் ஏறு, முன்னேறு, வெற்றி பெறு என்று துணிவுடைமையை இரத்த ஓட்டமாக ஆக்கிக் கொண்டே முன்னேறுகிறார்கள்.

எளிமையில்,

‘‘பணியுமாம் பெருமை’’

‘‘அடக்கம் எப்போதும் சிறக்கும்’’

‘‘தேக்கம் வேண்டாம்

ஆக்கம் தேவை என்பதே

உங்கள் நோக்கமாக இருக்கட்டும்’’.

என்ற தத்துவ விதைக் குதிர்தான்  ‘கேன் – பாட்–டே’ தத்துவம்!

நூலைப் படியுங்கள், வேலையை முடியுங்கள்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *