மக்களைத் திசை திருப்பும் மாய்மாலம்!

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில், இஸ்லாமி யர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அம்மாநில முதலமைச்சர் மோகன் (யாதவ்) அதற்கு அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளுக்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மோகன் (யாதவ்), “முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதை நிறுத்துங்கள். இந்துக்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ, அவர்களே இந்த நாட்டை ஆள்வார்கள்” என்று கூறியதோடு, அவையில் ‘ஜெய் சிறீராம்!’ என 17 முறை முழக்கமிட்டார்.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருப்பவர், இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துக் குடிமக்களுக்குமான பொதுவானத் தலைவராகச் செயல்படுவதே அரசியல் சாசனக் கடமையாகும்.

ஆனால், தற்போது மாநிலத்தில் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன:

மாநிலத்தின் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை; மருத்துவமனைகளின் சேவைகள் முடங்கியுள்ளன.

அண்மையில், இல்லாத ஓர் அரசுப் பள்ளியின் பெயரில் மாதம் ரூ.77 லட்சம் வீதம், கடந்த 7 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அதிர்ச்சியளிக்கும் முறைகேடு வெளிச்சத்திற்கு வந்தது.

இதுபோன்ற அடிப்படை வாழ்வாதாரப் பிரச் சினைகளிலிருந்தும்,  ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, ஆட்சியாளர்கள் மதப் பிளவைத் தூண்டும் முழக்கங்களைக் கையில் எடுக்கிறார்கள்.

மத ரீதியிலான முழக்கங்களை எழுப்பி, அரசு செய்யத் தவறுகின்றவற்றைத் திரைப் போட்டு மறைப்பது  பா.ஜ.க. ஆட்சிகளில் அதிகரித்து வருகிறது. சில நாள்களுக்கு முன்பு கூட மகாராட்டிர சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பற்றிப் பேசப்பட்ட ஆபாசமான, தரக்குறைவான வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தைக் கேள்விக்குறியாக்கியிருந்தன.

மத முழக்கங்களை விட வேலைவாய்ப்புகள், சிறந்த மருத்துவமனைகள், தரமான பள்ளிகள், பாதுகாப்பான சாலைகளை உருவாக்குகின்ற வெளிப்படையான, பொறுப்புள்ள அரசாங்கமே உடனடித் தேவை!

ஒருபோதும் ‘‘மதத்தையோ அல்லது மத உணர்வுகளையோ, ஓர் ஆட்சியின் செயல்திறனுக்கும்,  நிர்வாகத்திற்கும் மாற்றாகப் பயன்படுத்த முடியாது’’ என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

ஒன்றியத்திலும், பல்வேறு மாநிலங்களிலும் பிஜேபியே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.

மக்கள் நலத் திட்டங்களைப்பற்றிக் கவலை இல்லை; தேர்தல் வாக்குறுதிகள் என்பது எல்லாம் ‘ஜும்லா’ என்று சொல்லும் அளவுக்கு, மக்களை மரக்கட்டைகளாக நினைக்கும் எல்லைக்கு உள்துறை அமைச்சராக இருப்பவர் பேசுகிறார் என்றால் எத்தகைய தலைக்குனிவு!

பொருளாதாரம் என்று சொல்லும்போது ஒன்றிய பிஜேபி அரசு ரூ.200 லட்சம் கோடி கடன் என்ற வெள்ளத்தில் மூழ்கி மூக்கால் நீர் குடிக்கிறது.

இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு என்று ஏற்க மறுக்கும் பிஜேபி, மக்களும் அதையே நம்ப வேண்டும் என்னும் நோக்கில், எல்லாவித எதிர்ப்புகளையும், எதிர்க்கட்சிகளின் குரலையும் மதிக்காமல், மதவாதப் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. இதன் மூலம் ‘இந்தியா என்பது இந்துமத நாடு’ என்று மக்கள் மனதில் பதிய வைத்து, அதையே இயல்பானதாக்க (Normalise) முயற்சிக்கிறது.

இதனால் மக்கள் மனநிலை மழுங்கடிக்கப்படும்; இது எப்போதும் நடப்பதுதானே என்று மக்களே ஏற்றுக் கொண்டு, அடுத்த வேலையை நோக்கி நகரத் தொடங்குவர். ‘எதிர்க் குரலால் என்ன நேர்ந்து விடப் போகிறது’ என்று சலிப்பு மனநிலைக்கு வந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறது பிஜேபி.

இது ஒருபலன் என்றால், மற்றொரு பலன் ஆட்சிமீதான மக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் மடை மாற்றம் செய்யும் வகையில் மதவாதத்தைக் கையில் எடுத்துக்கொள்வது! இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது பிஜேபியின் தந்திரம்!

எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பல வகையிலும் தம் கட்சிக்குள் கொண்டுவந்து அதிபர் ஆட்சி முறைக்கான கட்டுமான வேலைகளில் இறங்கி விட்டது.

தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை எல்லாம் காயடித்து வருகிறது பா.ஜ.க. என்னும் பாசிச ஆட்சி! தேர்தல் நேரத்தில் மட்டுமல்லாமல், எல்லா நேரங்களிலும் மக்களிடத்தில் பெரும் பிரச்சாரத்தை முடுக்கி விட்டு தலைக்கு மேல் தொங்கும் அபாயச் சங்கிலியைக் கட்டறுக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *