சேலம், ஆக.3- தமிழ்நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி முதல் முழுமையான இணைய வழி பத்திரப்பதிவு முறை தொடங்கப்பட உள்ளதாகப் பத்திரப்பதிவு துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் இணைய வழி முறையில் முழுமையான பத்திரப்பதிவு செய்யும் நடைமுறை வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்க உள்ளது. இணைய வழி முறையில் பத்திரப்பதிவு செய்யும் இந்த புதிய நடைமுறையைத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன், இணைய வழி முறையில் முழுமையாகப் பத்திரப்பதிவு செய்வதற்கான பயிற்சிகளும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே இணைய வழியில் பத்திரப்பதிவு செய்யும் இந்த நடைமுறை அவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
கேரளாவில் கனமழையால் வெள்ளம்!
நிலச்சரிவால் 8 பேர் உயிரிழப்பு; 8 பேரைக் காணவில்லை!
திருவனந்தபுரம், ஆக. 3- கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். 8 பேரைக் காணவில்லை.
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த வயநாட்டில் கடந்த வாரம் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கண்ணூர் மாவட்டம் அய்யன்குன்னு பகுதியில் நேற்று (2.8.2026) 320 மி.மீ மழை பதிவானது.
கேரளாவில் உள்ள பல அணைகள் நிரம்பிவிட்டன. மலங்கரா அணையில் 5 மதகுகள் திறக்கப்பட்டன. இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய இடங்களில் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. வாகனங்கள் வெள்ள நீரில் ஊர்ந்து செல்கின்றன. கடைகளில் வெள்ளம் புகுந்துள்ளது. அலுவா சிவன் கோயில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மழை பாதிப்பு குறித்து கேரள முதலமைச்சர் சதீஷன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர், 8 பேரைக் காணவில்லை. 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 196 வீடுகளில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இருந்து 5,792 பேர் மீட்பு குழுவினர் மீட்டு 209 நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். வெள்ளத்தால் வீடுகள், உறவினர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவிகள் அளிக்கப்படும். இவ்வாறு சதீஷன் கூறினார்.
ஆரஞ்சு எச்சரிக்கை: கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மய்யம் நேற்று முன்தினம் (1.8.2026) ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது. இப்பகுதியில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
