பெ.நடராசன் பணி நிறைவு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வாழ்த்துரை!

10 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி என்பது, பேராசிரியர் பணியை விட சிறப்பானது!
ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல; அது தொண்டு!
நடராசன் பணி இன்னும் நிறைவடையவில்லை; இயக்கப் பணிகளைச் செய்வதற்கு வாருங்கள்!

பெரம்பலூர், ஆக.2 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி என்பது,  பேராசிரியர் பணியை விட சிறப்பானது! ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல; அது தொண்டு! அந்தத் தொண்டறத்தைச் சிறப்பாக நீங்கள் செய்திருக்கிறீர்கள்; அது தொடர வேண்டுமானால், பகுத்தறிவு இயக்கத்தில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். மேலும், இந்த இயக்கப் பணிகளைச் செய்வதற்கு வாருங்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெ.நடராசன் பணி ஓய்வு பாராட்டு விழா –
தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

கடந்த 29.5.2026 அன்று பெரம்பலூரில், பெ.நட ராசன் பணி நிறைவு பாராட்டு விழாவிற்குத் தலைமை வகித்து வாழ்த்துரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அவரது வாழ்த்துரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

என்னுடைய கருத்துகளை சுருக்கமாகச் சொல்கிறேன்.

நடராசன் பணி இன்னும் நிறைவடையவில்லை;
ஒரு பணியில் இருந்து இன்னொரு பணிக்கு வர வேண்டியவர்!

எல்லோரும் இந்த விழாவினை ‘‘பணி நிறைவு விழா’’ என்று நாசுக்காக இந்த அழைப்பிதழில் அச்ச டித்திருந்தார்கள். ஆனால், முன்பெல்லாம் எப்படி அச்சடித்திருப்பார்கள் என்றால், ‘‘பிரிவு உபச்சார விழா’’ என்று  போடுவார்கள். அல்லது ‘‘வழியனுப்பு விழா’’ என்று போடுவார்கள். ஆனால், இப்போது அது போன்று இல்லை.  ‘‘பணி நிறைவு விழா’’ என்றுதான் போட்டிருக்கிறார்கள்.  ‘‘பணி நிறைவு’’ செய்துவிட்டார் என்கிறார்கள். ஆனால், அவர் பணி இன்னும் நிறைய வில்லை. ஒரு பணியில் இருந்து இன்னொரு பணிக்கு வர வேண்டியவர். அதுதான்  மிக முக்கியம்.

உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம்!

அதனால், இங்கே ஆசிரியர் நண்பர்கள், மற்றவர்க ளெல்லாம் அவரை வழியனுப்ப வந்திருக்கிறீர்கள். ஆனால், எங்களைப் போன்றவர்கள், இங்கே ஏன் வந்திருக்கிறோம் என்றால், அவரை வரவேற்பதற்காக வந்திருக்கின்றோம். இதுதான், உங்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். என்ன வரவேற்பு? என்று கேட்டால், கருப்பு சட்டைப் போடுங்கள் என்று சொல்வதுதான் அந்த வரவேற்பு; வேறு ஒன்றுமே இல்லை. ஆக, இதுவரையில், அரசாங்க உத்தியோகத்தில் இருந்தீர்கள்; இனிமேல் சமூக அரசாங்கத்துக்கு வந்திருக்கிறீர்கள்; சமூகப் பணிக்கு வந்திருக்கிறீர்கள்; அதனால், திராவிடர் கழகத்திற்கு நேரடியாகவே ‘வாங்க’ என்பதுதான்  மிக முக்கியம். முன்பெல்லாம் ஆசிரியர்கள் இவ்வளவு தாராளமாக இயங்க முடியாது. இன்றைக்குப் பார்த்தீர்களென்றால், தொடக்க கல்வி இயக்குநர் இங்கே பாராட்ட வந்துள்ளார். ஆசிரியர்கள் இருக்கிறார்கள். முன்பெல்லாம் அப்படி அல்ல; ஒரே ஒரு நிகழ்வைச் சொல்கிறேன்.

எனக்குக் கஷ்டம் இல்லை;
உங்களுக்குத்தான் கஷ்டம்!

என்னுடைய வகுப்புத் தோழராக இருந்தவர், பல்கலைக் கழகத்தில். அவர் ஆசிரியர் ஆனார், ஒரு பள்ளியில்.  அவர் பெயரைச் சொல்ல விரும்ப வில்லை. திட்டக்குடிக்குப் பக்கத்தில்தான் அவரு டைய ஊர். ஆசிரியராக இருந்து அவர் தலைமை ஆசிரியரும் ஆனார்.  ஒரு முக்கிய பகுதியில்தான் பணியாற்றினார். ஒழுக்கமானவர், திறமையானவர், ஆசிரியர் பணியில் அவரை யாரும் குறை சொல்ல முடியாது; மாணவர்களால் நன்கு ஈர்க்கப்பட்டவர். அப்படிப்பட்ட அவர் என்னிடம், ‘‘அய்யா, நீங்கள் இலக்கிய மன்றத்தில் வந்து உரையாற்றவேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். அப்போது வேறு கட்சி ஆட்சியில் இருந்தது. அப்பொழுதே நான் சொன்னேன், ‘‘ஏன்யா, நான் வந்து பேசுவதினால், எனக்குக் கஷ்டம் இல்லை; உங்களுக்குத்தான் கஷ்டம் ஏற்படும்’’ என்றேன்.

‘‘அதெல்லாம் ஒன்றும் இல்லீங்க; நீங்கள் வாங்க’’ என்று சொன்னார்.

நானும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினேன். மாணவர்கள், ஆசிரியர்கள் வரவேற்றார்கள், கைதட்டினார்கள். பகுத்தறிவுக் கருத்துகளைத்தான் நான் பேசினேன்.

மூன்று நாள்கள் கழித்து ஒரு கடிதம் வந்தது!

நிகழ்ச்சி முடிந்த மூன்றாவது நாள், என்னை அழைத்த அந்த ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதம் வந்தி ருந்தது. நான் என்ன நினைத்து, அந்தக் கடிதத்தைப் பிரித்தேன் என்றால், ‘‘நன்றிக் கடிதமாக இருக்கலாம்; அல்லது பாராட்டுக் கடிதமாக இருக்கலாம். உங்கள் உரையை, ஆசிரியர்களும், மாணவர்களும் நன்றாக வர வேற்றார்கள்’’ என்று எழுதியிருப்பார் என்று நினைத்து அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தால், ‘‘அய்யா, நீங்கள் வந்த மூன்றாவது நாள் ‘‘I Got a Transfer.’’  செஞ்சிக்குப் பக்கத்தில் மாற்றியிருக்கிறார்கள்’’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்.

உடனே, நானே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

‘‘என்ன செய்வது?’’  என்று என்னிடம் கேட்டார்.

அதை நீங்கள் செய்தால்,
உங்களுக்கு மீண்டும் பணி மாறுதல் வரும்!

‘‘ஒன்றும் செய்ய வேண்டாம்; ஒரு மாதம் அங்கே போய் பணி செய்யுங்கள். அது தண்ணி இல்லாத காடு என்று நினைக்கவேண்டாம்; இரண்டே இரண்டு வேலை செய்யுங்கள், போதும். அதை நீங்கள் செய்தால், உங்களுக்கு மீண்டும் பணி மாறுதல் வரும்’’ என்றேன்.

அவர் மிக  ஆவலுடன், ‘‘சொல்லுங்கள், நான் யாரைப் பார்க்கவேண்டும்’’ என்றார்.

‘‘ஒருவரையும் நீங்கள் பார்க்கவேண்டாம்; நீங்கள் செய்யவேண்டியது இரண்டு.  ஒன்று, மறுபடியும் என்னை இலக்கிய மன்றத்தில், அந்தப் பள்ளியில் உரையாற்றக்  கூப்பிடுங்கள்; இரண்டாவது, ‘விடுதலை’க்கு சந்தா  கட்டி ‘விடுதலை’யை வரவழைத்து, மேசையின் மேல்  வையுங்கள். வகுப்பில் தெரிகின்ற மாதிரி அதைப் படியுங்கள்’’ என்றேன்.

‘‘அதனால், என்ன ஆகும்’’ என்றார் அவர்.

‘‘மறுபடியும் பணி இடமாற்றம் வரும். இதைவிட நல்ல ஊரில்தான் உங்களை மாற்றுவார்கள். இதைவிட மோசமான ஊருக்குப் பணி மாறுதல் தர முடியாது’’ என்றேன்.

‘‘எனக்கு ஒரு மகிழ்ச்சி, நீங்கள் டிரான்ஸ்பர் ஆனதில்’’ என்றேன்.

‘‘ஏன்?’’ என்று கேட்டார் அவர்.

‘‘ஒரே ஊரில், நீங்கள் கட்சிப் பிரச்சாரம், கொள்கைப் பிரச்சாரம் செய்தீர்கள். அந்த ஊரில், எங்கள் கழகம் இல்லை. உங்களால், அங்கே  புதிதாக உருவானால் நல்லதுதானே’’ என்றேன்.

36 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்
நம்முடைய நடராஜன்!

அந்த சூழ்நிலை மாதிரி இருந்த நிலைகள் எல்லாம் மாறி, நம்முடைய ஆசிரியர் நடராஜன் அவர்கள் 36 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். இது சாதார ணமானது அல்ல. தலைமை ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள்; தொடக்கப்பள்ளி ஆசிரியராக 11 ஆண்டு கள்; ஆங்கில பட்டதாரி ஆசிரியராக மூன்று ஆண்டுகள்; அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் என்று ஆக மொத்தம் 36 ஆண்டுகள். அதுவும் இந்த மாவட்டத்தில்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி என்பது,  பேராசிரியர் பணியை விட சிறப்பானது!

இன்னொரு செய்தி, இன்றைய இளைய தலை முறைக்குத் தெரியாது.  அவர் எசனையில் பிறந்தவர். அவர் பணியாற்றிய ஊர்களைப் பாருங்கள். எல்லாமே கிராமங்களில் பணியாற்றி இருக்கிறார். ஒரு சிறப்பு, மிக்க மகிழ்ச்சி என்னவென்றால், தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணி என்பது,  பேராசிரியர் பணியை விட அதுதான் சிறப்பானது. கல்லூரி ஆசிரியர் பணிகளோ, மற்றவையோ எளிமையானவை. மிகப் பாரமானவை அல்ல. ஆனால், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி என்பதுதான் மிக முக்கியம்.

ஒருமுறை ‘DEO போனப்ப கேட்டார் ஓர் ஆசிரியர்’’ என்ற ஒரு கதை உண்டு.

‘‘அய்யா பசங்களுக்குப் ப்ரமோஷன் போடுகிறேன்; நான் 15 ஆண்டுகளாக அய்ந்தாம் வகுப்பிலேயே இருக்கிறேனேன்னு’’ சொன்னார்.

‘‘அதனால்தாங்க, அவ்வளவு மாணவர்கள் ப்ர மோஷன் ஆகிப் போகிறார்கள்’’ என்றார் DEO.

அவருக்கு ரிட்டயர்மெண்ட் உண்டு;
எனக்கு ரிட்டயர்மெண்ட் கிடையாது!

அதுமாதிரி, என்னைப்பற்றி சொன்னார்கள் இராசாவும், மற்றவர்களும். என்னை ‘ஆசிரியர்’, ‘ஆசிரியர்’ என்றுதான் எல்லாரும் அழைக்கிறார்கள். அதனால், ஒரு ஆசிரியர், இன்னொரு ஆசிரியரைப் பாராட்டுவதில் ஒரு பெரிய பெருமை இல்லை. ஆனால், இந்த ஆசிரியருக்கும், அந்த ஆசிரியருக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அது என்னவென்றால், அவருக்கு ரிட்டயர்மெண்ட் உண்டு; எனக்கு ரிட்டயர்மெண்ட் கிடையாது, என்னுடைய ஆசிரியர் வேலையில்.

எத்தனை ‘விடுதலை’ சந்தாக்கள் என்பதுதான் என்னுடைய ஊதியம்!

அவருக்கு, பல மேலதிகாரிகள் உண்டு; எனக்கு ஒரே ஒரு மேலதிகாரிதான், தந்தை பெரியார் என்கிற தத்துவம். அது மட்டுமல்ல, இன்னும் சிறப்பாக சொல்லவேண்டும் என்றால், அவர்களுக்குப் பஞ்சப்படி. இன்னும் என்னென்னவோ படிகள்,  அப்புறம் அலவன்ஸ்,  பழைய அலவன்ஸ், புதிய பென்ஷன், போராட்டம் என்றெல்லாம் அவர்களுக்கு உண்டு. எங்களுக்கு அந்தக் கவலையே இல்லை. ஆனால், அவர்களுக்கு ஊதியம் உண்டு; எனக்கு ஊதியம் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஊதியம் உண்டு.  எத்தனை ‘விடுதலை’ சந்தாக்கள் என்பதுதான் என்னுடைய ஊதியம். எவ்வளவு கருப்புச் சட்டைப் பெருகிற்று என்பதுதான் என்னுடைய ஊதியம். எவ்வளவு பேர் படித்தார்கள்? எவ்வளவு பெண்கள் படித்திருக்கிறார்கள்? எவ்வளவு ஆண்கள் படித்திருக்கிறார்கள்?  எவ்வளவு பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள்?  எத்தனை லட்சமாக அது பெருகி இருக்கிறது? அதே மாதிரி  பிளஸ்2? அப்புறம் கல்லூரிகள்? என்பதுதான் என்னுடைய ஊதியம்.

பழைய பெரம்பலூரையும் பார்த்து, புதிய பெரம்பலூரையும் பார்த்தால்தான் தெரியும்!

‘‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு’’

என்று சொன்னதைப் போல, அப்படிப்பட்ட ஓர் அருமையான வாய்ப்பு. எனவே. சிறப்பான இந்த நிகழ்ச்சியென்பது நம் எல்லோருக்கும் மன நிறைவைத் தருகின்றது.  நம்முடைய பெருமைக்குரிய அய்யா நடராசன் அவர்கள், மிகச் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அதே மாதிரி அவருடைய வாழ்விணையராக இருக்கின்ற முத்துக்கண்ணு அம்மா அவர்கள், எம்.ஏ., எம்.பில்., பி.எட்.  ஆசிரியர் பணி செய்தவர். ஒரு காலத்தில் இந்த மாதிரி ஆசிரியர் குடும்பங்களைப் பார்க்க முடியுமா? என்றால், நிச்சயமாகப் பார்க்க முடியாது. அய்யா தந்தை பெரியார், பழைய தகவல்கள் – இளைஞர்களுக்குத் தெரிய வேண்டும். அது தெரியாததினால், இன்றைய பெரம்பலூரைப் பார்த்து, இப்படித்தான் பழைய காலத்தில் இருந்திருக்கும் என்று நினைக்கக் கூடாது.  இந்தப் பெரம்பலூரினுடைய சிறப்பு எப்பொழுது தெரியும் என்றால், பழைய பெரம்பலூரையும் பார்த்து, புதிய பெரம்பலூரையும் பார்த்தால்தான் தெரியும்.

உண்மையான விருது எது தெரியுமா?

திருச்சி – சென்னையின் பழைய சாலையையும் பார்த்து, இப்பொழுது உள்ள புதிய சாலையையும் பார்த்தால்தான், இன்றைய சாலையினுடைய வேகம், வளர்ச்சி என்ன என்பதை உணர முடியும். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்புகள் இருக்கிற போது, இந்தப் பணியில் தொண்டு என்பது இருக்கிறது, ஆசிரியர் பணியேதான் தொண்டு. இதில் இங்கே மிகப் பெரிய அம்சம் என்னவென்றால், விருது பெற்ற ஆசிரியர்கள், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். உண்மையான விருது எது தெரியுமா?

ஓர் ஆசிரியர், ஓய்வு பெற்று நடந்து போய்க்கொண்டி ருப்பார். அவரை யாரும் கவனிக்கவில்லை என்று அவர் நினைத்துக் கொண்டிருப்பார். ஆனால், திடீர்னு எதிரே வந்த ஒருவர், அவர் கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘அய்யா, என்ன அடையாளம் தெரியுதுங்களா?’’ என்றார்.

‘‘யார், தெரியவில்லையே?’’ என்று அந்த ஆசிரியர் சொல்கிறார்.

எந்த ஆசிரியருக்கும் கிடைக்காத விருது அது!

‘‘நன்றாக, ஞாபகப்படுத்திப் பாருங்கள்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘அய்யா நான்தான் உங்களிடம் படித்த மாணவன். இப்பொழுது நான் பெரிய அதிகாரியாக இருக்கிறேன்.  நான் அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கி றேன். அய்.பி.எஸ். அதிகாரியாக இருக்கிறேன்.  டாக்டராக இருக்கிறேன்’’ என்று மாணவர்கள் சொல்லும்போது,  அதைவிட பெரிய விருது, எந்த ஆசிரியருக்கும் கிடைக்காத விருது அதுவாகும்.

இயக்கப் பணிகளைச் செய்வதற்கு வாருங்கள்!

ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல; அது தொண்டு!  அந்தத் தொண்டறத்தைச் சிறப்பாக நீங்கள் செய்திருக்கிறீர்கள்; அது தொடர வேண்டுமானால், பகுத்தறிவு இயக்கத்தில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். மேலும், இந்த இயக்கப் பணிகளைச் செய்வதற்கு வாருங்கள். ஏராளமான மகளிரை இங்கே பார்க்கிறோம். ஆசிரியர்களாகப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் ஆசிரியர்கள்; குடும்பம் குடும்பமாக ஆசிரியர்கள். உங்க ளுக்கெல்லாம் ஒன்று சொல்லவேண்டும்.

‘‘கல்வி நீரோடையில் முதலைகள்!’’

தந்தை பெரியார், ‘‘கல்வி வளர வேண்டும், கல்வி நீரோடை பாய வேண்டும், கல்வி நீரோடை யிலே இருக்கிற முதலைகளை எல்லாம் வெளி யேற்றினால்தான் இளைஞர்களுக்குக் கல்வி வர முடியும்’’ என்றார். ‘‘கல்வி நீரோடையில் முதலைகள்’’ என்ற தலைப்பில் செய்திகளை வெளியிட்டோம் ‘விடுதலை’யில்.  அப்படிப்பட்ட ஒரு சூழல் இன்றைக்கு மாறியிருக்கிறது. ஆசிரியர்கள் ஒரு காலத்தில எப்படி இருந்தார்கள் என்றால்,  பள்ளிக்கூடத்துக்கு நம்முடைய பிள்ளைகள் வந்தால், உயர்ஜாதி ஆசிரியர் சொல்லுவார், ‘‘ஏய் உனக்கு எப்படிடா கணக்கு வரும்? நீ போய் உன் அப்பன் தொழிலைப் பார்!’’ இப்படிச் சொல்லிச் சொல்லி, ‘‘சைக்கலாஜிக்கல் வார்’’ – மனோத்தத்துவ ரீதியாகவே  அவர்களை டவுன் செய்துவிடுவார்கள்.

‘‘ஓ, நமக்குப் படிப்பு வராது; சரி, நாம் மூன்றாம் வகுப்பிலேயே விட்டுவிட்டுப் போவோம்; எட்டாம் வகுப்போடு விட்டுப் போவோம்’’ என்று சொன்ன காலம் மாறி, இன்றைக்கு ஆசிரியர்கள் அடித்து அல்ல, அணைத்துச் சொல்லிக் கொடுத்து, தட்டிக் கொடுத்தது மட்டுமல்ல,  அந்த ஆசிரியர்களிடம், ‘நான் முதல்வன்’ என்று மாணவர்களே சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு திட்டங்களை எல்லாம் வளர்த்துக் கொண்டி ருக்கிற ஒரு காலகட்டம் திரும்பி இருக்கிறது.

நற்காலமாக, பொற்காலமாக வந்து கொண்டிருக்கிறது!

எனவே, ஒரு பொற்காலம், கல்வியினுடைய பொற்காலத்தில் நீங்கள் நுழைந்தது வேறு காலம்; ஆனால், நீங்கள் வெளியே வரும்போதும், அது நற்காலமாக, பொற்காலமாக வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட அந்தக் காலத்தை மேலும் உறுதிப்படுத்த, நீங்கள் பொது வாழ்க்கைக்கு வாருங்கள்.

அன்போடு வரவேற்கக் காத்திருக்கிறோம்!

கழகக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, வெளிப்ப டையாகவே வாருங்கள். உங்களுடைய வாழ்விணை யர், உங்களுடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து, இன்றைக்கு அமெரிக்காவில்  மணவிழாவை முடித்தி ருக்கிறார்கள், வாழ்த்துகள்! அவர்கள் அங்கே பணி செய்கி றார்கள். உங்கள் வாழ்விணையர் ஆசிரியர் பணி யைச் செய்கிறார்கள். நீங்கள் கழகப் பணியைச் செய்யுங்கள்.

அன்போடு வரவேற்கக் காத்திருக்கிறோம்! வருக, வருக, வருக என்று கூறி அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *