புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் – ஏப்ரல் 29 – தந்தை பெரியார்

புரட்சிக் கவிஞர் என்பது ஏன்?

நான் பாரதிதாசனைப் பற்றிப் புரிந்து கொண்ட அளவுக்கு மற்றவர்கள் புரிந்து கொள்ள வில்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் புரிந்து கொண்டிருந்தார்களானால் வள்ளுவன் படத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு அதாவது வள்ளுவன் படம் உள்ள இடங்களிலெல்லாம் பாரதிதாசன் படத்தை வைத்திருப்பார்கள்; வைக்க வேண்டும். எதற்காக வள்ளுவன் படத்தை வைக்க வேண்டுமென்று கருதி வைத்திருக்கின்றார்களோ அதைவிட புதுமையான, புரட்சியான கருத்துகளை, மக் களை பகுத்தறிவுவாதிகளாக்கக் கூடிய கவி தைகளை எழுதியவர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற்போக்கு – சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் அவரது கவிதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

நம் புலவர்கள் பற்றி பாரதிதாசன்
நமது புலவர்கள் பற்றி பாரதிதாசன்,
“அழியாத மூடத்தனத்தை ஏட்டில்
அழகாய் வரைந்திடும்
பழிகாரர் தம்மை
முழுதும் ஆய்ந்த
பாவலர் என்பார்”
என்று கூறியுள்ளார்; அதாவது முட்டாள் தனத்திலே ஊறி, முட்டாள்தனத்தையே எழுதி விட்டு, அந்த அயோக்கியன் தன்னை பெரும் பாவலர் என்று கூறிக்கொள்வான் என்று நம் பாரதிதாசன் குறிப்பிடுகிறார்.

நம் புலவர்கள் எல்லாம் பழையதற்குத்தான் எண்ணெய் தடவுவானே ஒழிய பாரதி தாசனைப் போல் துணிந்து உண்மையைக் கூறுவோம் என்று எவனுமே முன்வரவில்லை. அதைத்தான் பாரதிதாசன் ‘நம் புலவர்கள் எழுதியதைப் படித்தால் நம் அறிவும் கெட்டு விடும்’ என்று சொல்கிறார்.

பாரதிதாசனின் புரட்சிக் கருத்துகள்

பெண்கள் கொடுமைகள் நீங்கி விடுதலை பெற வேண்டும்; நம் மக்களிடமிருக்கும் மூடநம்பிக்கை ஒழியவேண்டும்; தொழிலா ளர்கள் உரிமைபெற வேண்டும் என்று வலி யுறுத்தி பல கவிதைகளை அவர் எழுதி யுள்ளதுடன், மடாதிபதிகள்; சாமியார்கள் இவர்களைப்பற்றியும், இவர்களின் ஒழுக்கக் கேடுகள் பற்றியும் புரட்சிகரமாக நிறைய எழுதியிருக்கிறார். பொதுவுடைமைத் தத்து வங்கள் – சமதர்மம் ஆகியவை பற்றி அவர் எழுதியுள்ள கருத்துகள் நம் சிந்தனைக்கு ஏற்ற பெரிதும் சிறப்புடைய கருத்துகளாக அமைந் துள்ளன.
பார்ப்பனர் குணம் பற்றி புரட்சிக் கவிஞர்

வண்டி வண்டியாக தமிழர் பிணம் போனாலும் பார்ப்பனருக்கு என்ன குண மிருக்கும் என்றால், இதில் எத்தனை பேருக்கு திவசம் செய்வார்கள் என்று கணக்குப் போடு வதாகத் தான் இருக்குமே தவிர அது பற்றி வருத்தப்படுவதாக இருக்காது என்றும், தனக்கு எந்தெந்த வகையில் வரும் படி நிறையக் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயும் தான் பார்ப்பான் இருப்பானே தவிர மற்றவர்களைப் பற்றி அவனுக்குக் கவலை இருக்காது என்றும் – இப்படி, ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துக்களை நம்முடைய இயக்க முறையை விட, தீவிரமாகக்கூட எடுத்து விளக்கியிருக்கின்றார்.

முழு பகுத்தறிவு தரும் கருத்துகள்

கடுகளவு அறிவுள்ளவன்கூட, அவர் கவிதையைப் படித்தால் முழு பகுத்தறிவு வாதியாகி விடுவான்; அவ்வளவு புரட்சிகரமான கருத்துக்கள் அவர் கவிதை ஒவ்வொன்றிலும் காணப்படுகின்றன. அதனால் தான் அவரை புரட்சிக்கவிஞர் என்று அழைக்கின்றோம்.

விடுதலை’ 22.4.1970

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *