கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் 6,939 தற்காலிகப் பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 31 கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் 6,939 தற்காலிகப் பணியிடங்களுக்கு 10 ஆண்டு தொடர் நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, உயர்கல்வித் துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் மண்டல இணை இயக்குநர் பதவியில் 7 பணியிடங்கள், கல்லூரி முதல்வர் – 25, உதவி பேராசிரியர் – 5,557, உடற்கல்வி இயக்குநர் – 20, நூலகர் – 31, உதவியாளர் – 135 இடங்கள் உள்பட மொத்தம் 6,939 தற்காலிகப் பணியிடங்களுக்கு 2026 ஜன.1 முதல் 2035 டிச.31-ஆம் தேதி வரை 10 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு அளித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்காலிகப் பணியிடங்களுக்கு 10 ஆண்டு தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

 

வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில்

 ரூ.100 கோடியில் பன்னாட்டு மய்யம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

சென்னை, ஜூலை 31 கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபை முன்பாக சுமார் 71 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளி யில் ரூ.100 கோடி செலவில் வள்ளலார் பன்னாட்டு மய்யம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில், 2023 அக்.5-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கிய நிலையில், பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மய்யம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்துக்கு ஆதரவாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

அதேபோல, வள்ளலார் சத்தியஞான சபையில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்களுக்காக விவசாய விளைநிலங்களை வகை மாற்றம் செய்ததை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தடையில்லாச் சான்று பெறுவதில் உள்ள விதிமீறல்களை சுட்டிக்காட்டி, மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வள்ளலார் பெருவெளியில் பன்னாட்டு மய்யம் தொடர்பாக எந்த ஒரு கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்தனர்.

அதேநேரம், வள்ளலார் கோயிலில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக நகரமைப்பு இயக்குநர் உரிய விதிகளை கடைப்பிடித்து ஒப்புதல் வழங்கியுள்ளதால், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.சவுந்தர் அமர்வில் இந்த வழக்குகள் நேற்று (30.7.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர். பரணிதரன், ‘‘வள்ளலார் பெருவெளியில் ரூ.100 கோடி செலவில் பன்னாட்டு மய்யம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது. பெருவெளியில் வள்ளலார் ஜோதி தரிசனத்துக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்தாத வகையில், மாற்று இடத்தில் நூலகம், கூட்டரங்கம், யோகசாலை, முதியோர் இல்லம் போன்றவை கட்டும் வகையில் விரைவில் மாற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘வடலூரில் பன்னாட்டு மய்யம் அமைப்பதற்காக பெருவெளியில் தோண்டப் பட்ட குழிகளை மூடி,பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். மாற்று இடத்தில் நூலகம், யோகசாலை, முதியோர் இல்லம் அமைப்பது அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டது. 71 ஏக்கர் நிலத்தை சுற்றிலும் சுவர் எழுப்பும் பணிகளை உடனே தொடங்கலாம்’’ என்று அனுமதி அளித்து, விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *