ராய்ப்பூர், ஜூலை 31- சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக் காலத்தில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவைப் போற்றும் வகையில் ‘அடல் பரிசார்’ திட்டத்தின்கீழ் பூங்காக்கள் மற்றும் நினைவிடங்கள் அமைக்கப்பட்டன. இதில், கத்கோரா நகராட்சியில் நிறுவப்பட்ட வாஜ்பாயின் சிலையில் சுமார் ரூ.14 லட்சம் அளவிற்குப் பெரும் முறைகேடு நடந்துள்ள செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள கத்ஹரா பகுதியில் அமைக்கப்பட்ட அடல் பரிசாரில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் வெண்கலத்திலான வாஜ்பாய் சிலை வைக்க ஒப்பந்தம் விடப்பட்டது
ஒப்பந்தம் எடுத்த நபர் சில ஆயிரம் செலவில் சிமெண் டினால் சிலையைச் செய்து, அதன் மீது வெண்கல நிறச் சாயத்தைப் பூசி ஏமாற்றியுள்ளார்.
சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக, சிலையில் பூசப்பட்டிருந்த வண்ணம் ஆங்காங்கே உரிந்து விழுந்தது. இதனால் உள்ளே இருந்த சிமெண்ட் வெளியே தெரிந்ததையடுத்து, இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்தக் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தை மனோஜ் அகர்வால் என்ற ஒப்பந்ததாரர் பெற்றுள்ளார். அவர் இந்தப் பணியை துணை ஒப்பந்தம் மூலமாக பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (இளைஞரணி) தலைவர் அனுராக் துலானியிடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட கால அளவை விட பல மாதங்கள் தாமதமாகவே சிலை அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
விசாரணைக்கு உத்தரவு
இது குறித்து ராய்ப்பூர் நகராட்சி மன்றத் தலைவர் ராஜ் ஜெய்ஸ்வால் கூறுகையில், “அடல் பரிசாரில் வெண்கலச் சிலைதான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிமெண்ட் சிலை அமைக்கப்பட்டு மேலே வெங்கல வண்ணம் பூசப்பட்டுள்ளது என்றும் மழையில் அந்த வண்ணம் உரிந்து வருவதாக வந்துள்ள புகார்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெண்கலம் எங்கு வாங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய பொறியாளர் மற்றும் நகராட்சி முதன்மை அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 187 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.46 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் இந்த ‘அடல் பரிசார்’ திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட நிலையில், இத்தகைய முறைகேடு வெளிவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சிலை நிறுவப்பட்ட நிலையில் பல கோடிகள் இதில் ஊழல் நடைபெற்றுள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
