பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம்

2 Min Read

சென்னை, ஜூலை 30– பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

திருவண்ணாமலைக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண் ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் சுந்தர், சுரேஷ் ராஜ் மீது திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு முழுவதும் போக்சோ மற்றும் மகளிர் சிறப்பு நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ள வழக்கு களின் விவரங்களை தெரிவிக்கக் கோரியும் பாதிக்கப்பட்ட ஆந்திர இளம்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை 2 மாதங் களில் விசாரித்து முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றங்கள், மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்கு களின் விசாரணையைத் தேவை யின்றி தள்ளி வைக்கக் கூடாது என அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

போக்சோ வழக்குகளில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 30 நாட்களில், பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது சிறார்களிடம் வாக்குமூலம் பதிவு செய்து, ஓராண்டுக்குள் விசாரணையை போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் முடிக்க வேண்டும். குறிப்பாக போக்சோ வழக்குகளை கையாளுவது குறித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு மாநில நீதித்துறை பயிற்சியகம் உரிய பயிற்சி அளி்க்க வேண்டும்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் துறையினரே வேட்டைக்காரர்களாக மாறும் நிகழ்வுகள் மீண்டும் தமிழ் நாட்டில் நடைபெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினரின் அதிகார அத்துமீறலைத் தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்துப் பணிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் வகையில் அமைக்கப்பட் டுள்ள சிறப்பு அதிரடிப்படையை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மேலும் 6 புதிய போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை தொடங்குவது குறித்து 2 மாதங்களில் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *